இறைவனின் திருவடியே முக்திக்கான வழி


இறைவனின் திருவடியே முக்திக்கான வழி
x
தினத்தந்தி 29 April 2021 11:30 PM GMT (Updated: 28 April 2021 4:15 PM GMT)

ஓங்கி உயர்ந்து, அகன்று, பரந்து விரிந்திருந்த மரத்தின் அடியில் வீற்றிருந்தார், குரு. அவரது முன்பாக இருந்தவனின் கண்கள் கலங்கியிருந்தன.

திருவடி ஞானம் சிவமாக்கு விக்கும் 
திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும் 
திருவடி ஞானம் சிறைமலம் மீட்கும் 
திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே

திருமூலர் எழுதிய திருமந்திரத்தில் வரும் பாடலில் ஒன்று இது.

இந்தப் பாடலில் வரும் வரிகளை உண்மையென்று உணர்த்தும் வகையில், இறைவனின் திருவடியை சேர்வதே, முக்திக்கான வழி என்பதை எடுத்துரைக்கும் ஆன்மிகக் கதை ஒன்றை பார்க்கலாம்.

ஓங்கி உயர்ந்து, அகன்று, பரந்து விரிந்திருந்த மரத்தின் அடியில் வீற்றிருந்தார், குரு. அவரது முன்பாக இருந்தவனின் கண்கள் கலங்கியிருந்தன. தன் குருவிடம் கல்வி பயின்றவர் களிலேயே, மிகவும் புத்திசாலி, மனதிடம் கொண்டவன் என்றெல்லாம் பெயர் எடுத்த முதன்மை சீடன்தான், இன்று எதையோ இழந்தது போல கண்ணில் நீர்மல்க, தன் குருவின் முன்பாக அமர்ந்திருந்தான். தன் குருவின் கால்களை பற்றியபடியே பேசத் தொடங்கினான்.

“குருவே.. வேத சாஸ்திரங்களையும், அதன் உண்மை பொருளையும் எனக்கு கற்றுக்கொடுத்தவர் நீங்கள். எனக்கு ஏற்பட்ட அனைத்துவிதமான சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்து, என்னை உயர்ந்தவனாக மாற்றியவர் நீங்கள். அப்படிப்பட்ட உங்களுக்கு பணிவிடை செய்வதிலும், உங்களுடனேயே இருப்பதிலும்தான் எனக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது. அது எப்போதும் நிலைத்திருக்க வேண்டும் என்று நான் இறைவனை பிரார்த்திக்கொண்டிருக்கிறேன். ஆனால் தாங்களோ, என்னை வேறு ஒரு இடத்தில் இருக்கும் ஞானியிடம் சென்று சீடனாக இருக்கும்படி நிர்பந்திக்கிறீர்களே?” என்று கேட்டான்.

தன்மேல் மிகுந்த அன்பு கொண்டிருந்த அந்த சீடனின் தலையை வருடிக்கொடுத்த குரு, “உனக்கு என்னால் வேத சாஸ்திர ஞானத்தை மட்டும்தான் கற்றுக்கொடுக்க முடிந்தது. ஆனால் எல்லாவற்றுக்கும் மேலான பிரம்ம ஞானத்தை உனக்கு வழங்க, வேறு ஒரு குரு காத்துக் கொண்டிருக்கிறார். காசியில் உள்ள வனத்தில் வசித்து வரும் அவரைப் போய் சந்தித்து, பிரம்ம ஞானத்தை நீ அடைய வேண்டும் என்பதே என் ஆசை. ஒரு புழுவானது, வளர்ச்சியடையும் வரையே தன் கூட்டிற்குள் இருக்கலாம். அது வண்ணத்துப் பூச்சியாக மாற வேண்டுமானால், கூட்டை கடந்து சென்றுதான் ஆக வேண்டும். அதனால் நீயும் வளர்ச்சியை நோக்கிச் செல்” என்றார்.

மனதளவில் பிரிய மனமின்றி அங்கிருந்து புறப்பட்டான், அந்த சீடன். காசிக்குச் சென்று காசி விஸ்வநாதரை தரிசித்தான். பின், நகரை விட்டு பல மை தூரம் தள்ளியிருந்த வனத்தை நோக்கி பயணப்பட்டான். வனத்திற்குள் புகுந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. காட்டில் கிடைத்த பழங்களையும், கிழங்கு களையும், ஆங்காங்கே தென்பட்ட நீர்நிலைகளில் தண்ணீர் அருந்திய படியும் நாட்களை கடத்தினான். அந்த காட்டில் பாதியை, தன் காலால் அளந்து விட்ட போதிலும், ஒருவர் கூட சீடனின் கண்ணுக்குத் தென்படவில்லை. இருந்தாலும் குருவின் வார்த்தையில் இருந்த நம்பிக்கையில், மேலும் சில மைல் தூரம் காட்டிற்குள் நடக்கத் தொடங்கினான்.

வெகு தூரம் நடந்ததால், தாகம் உண்டானது. சோர்வை நீக்க அங்கே தென்பட்ட குளம் ஒன்றில் நீர் அருந்த குனிந்தான். அப்போது அந்த குளத்தின் நீர்பரப்பின் மேல், ஒரு கோவிலின் கோபுரம் நிழலாடியது. ஆச்சரியம் அடைந்தவன், தலையை உயர்த்திப் பார்க்க, அழகிய கோவில் ஒன்று தென்பட்டது. ‘அடர்ந்த வனத்திற்குள், இப்படி ஒரு ஆலயமா?’ என்று ஆச்சரியப்பட்டுப் போனான். தாகம் கூட தணிந் ததுபோல் தோன்றியது. உடனடியாக கோவிலை நோக்கி நடைபோட்டு, அதன் உள்ளே நுழைந்தான். வாசலில் கால் வைத்தபோதே, ஒரு குரல் கேட்டது.

“உனக்காகத்தான் காத்திருக்கிறேன். என்னை பார்ப்பதற்காகத்தான், உன்னுடைய குரு இங்கே உன்னை அனுப்பிவைத்தார்” என்ற அந்த குரல் வந்த திசையை நோக்கி பயணித்தான். தன்னுடைய புதிய குருவைப் பார்க்கும் ஆவல் அவனை உந்தித் தள்ளியது. ஆனால் அந்த ஆவலை, கோபமாக மாற்றியது சீடன் அங்கு கண்ட காட்சி. ஆம்.. பரதேசி போன்ற தோற்றம் கொண்ட ஒருவர், கோவிலின் கருவறையில் இருந்த லிங்கத்தின் ஆவுடை மீது படுத்திருந்தார். தன் தலைக்கு கை வைத்து படுத்திருந்த அவரது கால், லிங்கத்தின் தலை மீது இருந்தது.

இதைக் கண்டதும் அந்த சீடனால் கோபத்தைக் கட்டுப் படுத்த முடியவில்லை. “ஐயா.. உங்களைப் பற்றி என்னுடய குரு மிகவும் பெருமையாகக் கூறினார். ஆனால் உங்கள் செய்கை, நீங்கள் அந்த புகழுக்கு தகுதியில்லாதவர் என்பது போல் இருக்கிறது. நான் கோபத்தில் ஏதாவது செய்வதற்கு முன்பாக, லிங்கத்தின் மீது உள்ள உங்கள் கால்களை எடுங்கள்” என்று கத்தினான்.

ஆனால் பரதேசி தோற்றத்தில் இருந்தவரோ, “என்னால் கால்களை எடுக்க முடியாது. நீ அவ்வளவு சிறந்த பக்திமானாக இருந்தால், நீயே என்னுடைய கால்களை எடுத்து வேறு பக்கமாக திருப்பி வை” என்றார்.

சீடனும், அந்த சேட்டைக்காரரின் கால்களை சிவலிங்கத்தின் மேலிருந்து தூக்கி, வேறு ஒரு திசைக்கு திருப்பி வைத்தான். ஆனால் அவரது கால் வைக்கப்பட்ட இடத்தில் ஒரு சிவலிங்கம் தோன்றியது. இதனால் பதறிப்போய், சட்டென்று அவரது காலை தூக்கிப் பிடித்து, வேறொரு திசைக்கு திருப்பினான். அங்கும் அதே போல் ஒரு சிவலிங்கம் தோன்றியது. இப்படி சீடன், பரதேசியின் கால்களை தூக்கி வைக்க நினைத்த இடத்தில் எல்லாம் சிவலிங்கம் தோன்றி மறைந்தது. இதனால் அவரது காலை கீழே வைக்காமல், தூக்கியபடியே நின்றிருந்தான்.

கால்களை எங்கு வைத்தாலும் ஒரு சிவலிங்கம் தோன்று கிறதே என்று நினைத்தவன், ஒரு முடிவுக்கு வந்தவனாக அந்த பரதேசியின் முன்பாக மண்டியிட்டு அமர்ந்து, அவரது காலை எடுத்து தன்னுடைய தலையின் மீது வைத்தான். அந்த நொடியில் அவனே சிவமாக மாறிப்போனான். பரப்பிரம்மத்தின் உண்மையை உணர்ந்தான். அங்கிருந்த பரதேசி மறைந்தார். சீடனுக்கு புரிந்து விட்டது. தன்னை ஆட்கொள்ளவந்தவர், இறைவன் சிவபெருமானே என்று.

ஆம்.. நாம் அந்த ஈசனின் திருவடியை பற்றிக்கொண்டாலே போதுமானது, பிரம்ம ஞானத்தை அடையலாம். அதோடு ஈசனின் அருளால் முக்தியையும் அடையலாம்.

Next Story