மகனையே, கடவுளுக்கு காணிக்கையாக்கிய சிறுதொண்டர்


மகனையே, கடவுளுக்கு காணிக்கையாக்கிய சிறுதொண்டர்
x
தினத்தந்தி 4 May 2021 1:43 PM GMT (Updated: 4 May 2021 1:43 PM GMT)

கடவுளுக்கு தன் மகனையே சிறுதொண்டர் காணிக்கையாக்கினார்.

நரசிம்ம பல்லவனிடம் தளபதியாக இருந்தவர் பரஞ்சோதி. இவர் சிறந்த சிவபக்தர். இவர் தனது ஊரான திருச்செங்காட்டங்குடியில் உள்ள ஈசன் கணபதீஸ்வரரையும், அம்பாள் சூளிகாம்பாளையும் வழிபட்டு வந்தார். பின்னாளில் பரஞ்சோதி தன் தளபதி பதவியைத் துறந்து தன் மனைவி திருவெண்காட்டு நங்கை, மகன் சீராளன், பணிப்பெண் சந்தன நங்கையுடன் திருசெங்காட்டங்குடியிலேயே சிவதொண்டை மேற்கொண்டார். தினமும் சிவனடியார்களுக்கு தன் இல்லத்தில் அறுசுவை அமுது படைத்து, அவர்கள் உணவருந்திய பின்பு உணவு உண்ணும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டார். சிவனடியார்கள் முன் தன்னை மிகவும் சிறியவராய் எண்ணி பயபக்தியுடன் நடந்து கொள்வார். அதனால் மக்கள் அவரை அன்புடன் ‘சிறுதொண்டர்’ என்றே அழைத்தனர்.

ஒருநாள் அமுதுண்ண சிவனடியார் எவரும் சிறுதொண்டர் வீட்டுப்பக்கம் வரவில்லை. இதனால் அமுதுண்ண அடியவரைத் தேடி வெளியில் சென்றார் சிறு தொண்டர். தம் தொண்டனின் தொண்டினை உலகம் அறியச்செய்ய நினைத்தார், சிவபெருமான். இதனால் அடியவர் வேடத்தில் சிறுதொண்டர் வீட்டின் முன் நின்றார். அப்போது வீட்டில் சிறுதொண்டரின் மனைவியும், பணிப்பெண்ணுமே இருந்தனர். குழந்தை சீராளன் அருகிலுள்ள திருமருகல் திருத்தல குருகுலப் பாடசாலை சென்றிருந்தான்.

அடியவரைக் கண்டதும் மகிழ்ந்த சிறுதொண்டரின் மனைவி, “அடியவரே! என் கணவர் சிவனடியாரைத் தேடி வெளியில் சென்றிருக்கிறார். இப்போது வந்துவிடுவார்” என்றார்.

அதற்கு அடியார் உருவில் இருந்த ஈசன், “அம்மா! அடியேன் வடநாட்டிலிருந்து வந்துள்ளேன். பெண்கள் மட்டும் தனித்திருக்கும் இவ்விடத்தில் நாம் இருக்கமாட்டோம். அருகிலுள்ள ஆலயத்தில் ஆத்தி மரத்தின் கீழ் அமர்ந்திருக்கிறேன். சிறுதொண்டர் வந்ததும் அங்கு வரச்சொல்” என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். சற்றுநேரத்திற்குப் பிறகு, சிவனடியார் யாரும் அமுதுண்ண கிடைக்காததால் கலக்கத்துடன் வீட்டிற்கு வந்தார், சிறுதொண்டர். அவரிடம் அவரது மனைவி, அடியவர் ஒருவர் அமுதுண்ண தேடி வந்ததையும், அவர் இருப்பதாக கூறிய இடத்தையும் சொல்லி, அவரை அழைத்து வரும்படி கூறினார்.

சிறுதொண்டரும் மனதிற்குள் ஈசனுக்கு நன்றி கூறிவிட்டு, ஆத்தி மரத்தின் அடியில் இருந்த அடியவரைக் கண்டு அவரைத் தொழுதார். பின்னர், “அடியவரே! சிறுதொண்டன் வந்திருக்கிறேன். தாங்கள் அமுதுண்ண எமது இல்லம் வரவேண்டும்” என்றார்.

அதற்கு அடியவர் வேடத்தில் இருந்த ஈசன், “சிறுதொண்டரே! யாம் ஆறு மாதத்திற்கு ஒருமுறை தான் உணவு உட்கொள்வோம். அதற்கான நாள் இன்று. ஆனால் உம்மால் எமக்கு அமுது படைத்திடல் அரிது” என்றார்.

அடியவர் நம் வீட்டில் உணவருந்த வரமாட்டாரோ என்று நினைத்த சிறுதொண்டர், “என்ன விஷயமாக இருந்தாலும் சொல்லுங்கள். அதை நான் செய்கிறேன்” என்றார்.

உடனே அடியவர், “ஒரு குடிக்கு ஒரு மகனாகவும், ஐந்து வயதிற்குட்பட்ட உறுப்பில் குறையில்லாத குழந்தையை, அதன் தாய் பிடிக்க, தந்தை அரிய, இருவரும் மனம் உவந்து சமைத்து பின்பு அந்தப் பிள்ளைக்கறியை எமக்குப் பரிமாற வேண்டும்” என்றார்.

சிறுதொண்டர் அவரை வணங்கி, “நீங்கள் அமுதுண்ண ஒப்புக்கொண்டால், உங்கள் விருப்பப்படியே உணவு ஏற்பாட்டை உடனே செய்வோம்” என்றார்.

அடியவர் ஒப்புக்கொண்டார். பின்னர் “நீ சமைத்து வை.. நான் நீராடிவிட்டு வருகிறேன்” என்றார். இதையடுத்து சிறுதொண்டர் வீட்டிற்கு விரைந்தார். நடந்ததை மனைவியிடம் கூறினார். கணவன்- மனைவி இருவரும் ஒரு மனதாக, தங்கள் மகன் சீராளனையே அடியவருக்கு சமைத்து வழங்க முடிவு செய்தனர். பள்ளிக்கு சென்றிருந்த மகனை அழைத்து வந்து, நீராட்டி சுத்தப்படுத்தினர். பின்னர் மனைவி பிடித்துக் கொள்ள, சிறுதொண்டர் தன் பிள்ளையை துண்டுதுண்டாக அரிந்தார். பின்னர் அவரது மனைவியும், பணிப்பெண்ணும் சேர்ந்து உணவு சமைத்து முடித்தனர்.

அதற்குள் அடியவர் வந்து விட்டார். அவருக்கு இருக்கை தயார் செய்து, சமைத்து வைத்த பிள்ளைக்கறியைக் கொண்டு வந்து இலையில் வைத்தனர். தன்னுடன் அமர்ந்து சிறுதொண்டரையும் உணவருந்த அழைத்தார், அடியவர். சிறுதொண்டரும் அடியவர் சொல்படியே மற்றொரு இலையில் உணவிட்டு, பிள்ளைக்கறி வைத்து உணவருந்த முற்பட்டார். அப்போது அவரை தடுத்த அடியவர், “ஆறு மாதத்திற்கு ஒரு முறை உணவருந்தும் நானே பொறுமையாக இருக்கும்போது, உனக்கேன் இவ்வளவு அவசரம். நீ உன் மகனையும் கூப்பிடு” என்றார்.

அதற்கு சிறுதொண்டர் “இங்கு அவன் உதவான்” என்றார். அடியவரோ, “அவன் வந்தால்தான் யாம் உண்போம்” என்று பிடிவாதம் பிடிக்க, வேறு வழியின்றி வீட்டின் வாசலுக்குச் சென்ற சிறுதொண்டர், “மகனே சீராளா வருவாய்..” என்று அழைத்தார்.

என்ன அதிசயம்.. பாடசாலையில் இருந்து வருபவன் போல, சீராளன் துள்ளிக்குளித்து ஓடி வந்தான். சிறுதொண்டரும், அவரது மனைவியும் ஆனந்தத்தில் மகனை ஆரத் தழுவி மகிழ்ந்தனர். பின் அவனை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் வந்தபோது, அங்கு அடியவர் இல்லை. வந்தவர் சிவபெருமான் என்பதை உணர்ந்த அந்த தம்பதியர் ஆனந்தத்தில் திளைத்தனர். அப்போது ஈசன், பார்வதியோடு ரிஷப வாகனத்தில் காட்சி தந்து, சிறுதொண்டர், அவரது மனைவி, மகன், பணிப்பெண் ஆகிய நால்வருக்கும் முக்தி வழங்கினார். இவர்கள் நால்வருக்கும் திருச்செங்காட்டாங்குடி ஆலயத்தில் சன்னிதி உள்ளது.

இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆலயத்தின் பின்புறமுள்ள மடாலயத்தில், சித்திரை பரணியில் அமுது செய்த ஐதீக விழா நடைபெறுகிறது. இதன் வடப்புறத்தில் சிறுதொண்டரின் இல்லம் இன்றும் உள்ளது.

திருச்செங்காட்டங்குடி ஈசனைக்காண, காரைக்காலில் இருந்து 13 கிலோமீட்டரும், கும்பகோணத்தில் இருந்து 38 கிலோமீட்டரும் செல்லவேண்டும். இத்தலத்தின் மிக அருகில் திருசீயாத்த மங்கை, திருமருகல், திருக்கண்ணபுரம், திருப்புகலூர் ஆகிய திருத்தலங்கள் அமைந்துள்ளன.

Next Story