ஆன்மிகம்

இயேசுவின் குரலுக்கு செவி சாய்ப்போம் + "||" + Let us listen to the voice of Jesus

இயேசுவின் குரலுக்கு செவி சாய்ப்போம்

இயேசுவின் குரலுக்கு செவி சாய்ப்போம்
எசாயா 59-ம் அதிகாரம் 1 மற்றும் 2-ம் வசனத்தில், “மீட்க இயலாதவாறு ஆண்டவரின் கை குறுகிவிடவில்லை; கேட்க முடியாதவாறு ஆண்டவரின் காது மந்தமாகி விடவில்லை.
இன்றைய உலகில் பல போராட்டங்கள், வேதனைகளின் மத்தியில் வாழ்ந்து வரும் நாம், அனுதினமும் அவற்றில் இருந்து விடுதலை பெற இயேசுவிடம் வேண்டுகிறோம். ஆனால் பெரும்பாலான நேரங்களில் நமது வேண்டுதலுக்கு விடை கிடைக்காத பட்சத்தில், அதற்கான காரணம் தெரியாமல் வருந்துகிறோம்.

ஆனால் எசாயா 59-ம் அதிகாரம் 1 மற்றும் 2-ம் வசனத்தில், “மீட்க இயலாதவாறு ஆண்டவரின் கை குறுகிவிடவில்லை; கேட்க முடியாதவாறு ஆண்டவரின் காது மந்தமாகி விடவில்லை. உங்கள் தீச்செயல்களே உங்களுக்கும், உங்கள் கடவுளுக்கும் இடையே பிளவை உண்டாக்கியுள்ளன; உங்கள் பாவங்களே அவர் செவி சாய்க்காதவாறு அவரது முகத்தை உங்களுக்கு மறைத்துள்ளன” என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஆம்.. நம்முடைய பாவங்களே நமக்கும், இயேசுவுக்கும் இடையே பெரும் பிரிவை ஏற்படுத்துகின்றன. ஆனால் பெரும்பாலும் நாம் பாவத்தில் விழ முக்கிய காரணம், இருக்க வேண்டிய நேரத்தில், இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமல் போவதுதான்.

2 சாமுவேல் புத்தகம் 11-ம் அதிகாரத்தில், ‘இளவேனில் காலத்தில் அரசர்கள் போருக்கு செல்வது வழக்கம்’ என்று கூறப்பட்டிருந்தாலும், தாவீது போர்க்களத்திற்கு செல்லாமல் யோவாபையும், பணியாளர்களையும் போருக்கு அனுப்பி வைத்தான். போர்க்களத்தில் இருக்க வேண்டிய மன்னன் உப்பரிகையில் உலாவியதால், பெண்ணின் மீது மோகம் கொண்டு ஆண்டவருக்கு எதிராக பாவம் செய்தான்.

ஆதியாகமத்தை பார்க்கும் போது, ஆதாமின் அருகில் இருக்க வேண்டிய ஏவாள், அவனை விட்டு விலகி சென்றதால்தானே சாத்தானின் வலையில் விழுந்தாள். அவள் மட்டுமின்றி அவளோடு ஆதாமும், மனுக்குலம் முழுவதுமே ஏதேன் தோட்டத்தில் இறைவனின் அருகில் இருக்கும் வாய்ப்பை இழந்து தோட்டத்தை விட்டு வெளியேற்றப்பட்டது.

இவ்வாறு விவிலியத்தில் பலரும் இறைவன் சித்தப்படி இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமல், தங்கள் விருப்பப்படி சென்றதால் தான் பாவத்தில் விழுந்தார்கள் அல்லது இறை பிரசன்னத்தில் இருந்து ஒதுக்கப்பட்டார்கள்.

உதாரணமாய்.. வானதூதர்கள், கடவுளுக்கு கீழ் இருக்க விரும்பாமல், அவருடைய இடத்தை அடைய விரும்பியதால், அவர்கள் இறை பிரசன்னத்தில் இருந்து தள்ளப்பட்டார்கள். அன்று ஆண்டவர் நோவாவின் மூலம் மக்களுக்கு விடுத்த எச்சரிக்கையை ஏற்று மனம் திருந்தி, இறைவனின் எதிர்பார்ப்புப்படி பேழைக்குள் நுழையாமல் தங்கள் இடத்தில் பிடிவாதமாய் இருந்ததால்தான் நோவா குடும்பத்தையும், ஜோடியான விலங்குகளும், பறவைகளையும் தவிர மற்ற அனைவரும் வெள்ளத்தில் மூழ்கி அழிவிற்கு உள்ளானார்கள்.

மோசே, சீனாய் மலைக்கு சென்றபோது, இறைவனைத் தேடாமல் பொன்னால் செய்யப்பட்ட கன்றுக்குட்டியை வழிபட்டதால் எகிப்திலிருந்து கொண்டு வரப்பட்ட பெரும்பாலான இஸ்ரவேல் மக்கள் அழிவிற்கு உள்ளாயினர். ஆண்டவரின் வார்த்தைப்படி நீனிவேக்கு போகாமல், தர்சீசுக்கு ஓட முயன்றதால்தான் யோனா மூன்றுநாள் திமிங்கிலத்தின் வயிற்றில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இது மட்டும் அல்ல.. புதிய ஏற்பாட்டில் பேதுரு, கடவுள் மீது வைக்க வேண்டிய விசுவாசத்தை, கடல்நீரின் மீது காட்டியதால் மூழ்க நேரிட்டது. இறைவன் மீது விசுவாசத்தை வைக்காமல் தங்கள் மீது வைத்ததால்தான் சீடர்கள் பலர் தடுமாற நேர்ந்தது. இப்படி ஒன்றல்ல பல உதாரணங்கள் விவிலியத்தில் உள்ளன.

லாசரின் மரணத்திற்கு பிறகு மரியாள் இயேசுவிடம் வந்து “ஆண்டவரே.. நீர் இங்கு இருந்திருந்தால், என் சகோதரன் இறந்திருக்கமாட்டான்” என்று கூறி அழுதாள். அதுபோல் நாமும் தாவீது மட்டும் இறைவனின் கட்டளைப்படி போர்க்களத்தில் இருந்திருந்தால்.. அன்று ஏவாள் மட்டும் ஆதாமை விட்டு விலகி இறைவன் தொடக்கூடாது, உண்ணக் கூடாது என்று கூறிய மரத்தின் அருகில் செல்லாமல் இருந்திருந்தால்... இப்படி ஒவ்வொரு நிகழ்வுக்கும் இருந்திருந்தால்... இருந்திருந்தால்.. என்று கேட்டோமானால், ‘இறைவனின் பிரசன்னத்தை, ஆசிர்வாதத்தை யாரும் இழந்திருக்க மாட்டார்கள்’ என்ற பதில்தான் நமக்குக் கிடைக்கும்.

நம்மில் எத்தனை பேர் இருக்க வேண்டிய இடத்தில், சரியாக இருக்கிறோம்.

குடும்பத்தில் கணவன் அல்லது மனைவி தங்கள் இருவருக்குள் காட்ட வேண்டிய அன்பை இடம் தவறி காட்டுவதாலும், ஒருவரை ஒருவர் நம்பாததாலும், புரிந்து கொள்ளாததாலும் தான் பிரச்சினைகளும், பிரிவுகளும், தவறான உறவுகளும் ஏற்படுகின்றன.

படிக்கும் பிள்ளைகளின் தோல்விக்கு காரணம், புத்தகத்தின் முன் அமர்ந்திருக்க வேண்டிய நேரங்களில், விளையாட்டுகளிலும், பிற காரியங்களிலும் அதிக நேரத்தை செலவழிப்பதுதானே. இப்படி எத்தனை உதாரணங்கள் நம் கண் முன்னே நிழலாடிக் கொண்டிருக்கின்றன.

‘மகனே.. மகளே.. நீ மட்டும் என்னுடைய அருகாமையை உணர்ந்தால், நான் உனக்கு போதித்து நடக்க வேண்டிய வழியை உனக்கு காட்டுவேன்’ என்ற கர்த்தரின் வார்த்தையை பற்றிக் கொண்டு நடப்போம். இயேசுவின் குரலுக்கு செவி சாய்ப்போம். அவருடைய அருகாமையை எந்த நேரத்திலும் உணர்ந்தவர்களாய் வாழ்வோம். அப்படி நாம் வாழும் பட்சத்தில், இயேசு நம்முடைய ஜெபத்தைக் கேட்டு உடனடியாக பதில் அளிப்பார்.