ஐந்து வகையான நந்திகள்


ஐந்து வகையான நந்திகள்
x
தினத்தந்தி 4 May 2021 2:53 PM GMT (Updated: 4 May 2021 2:53 PM GMT)

ஐவகை நந்திகளுக்கு என்று தனிச் சிறப்பு அமைந்திருக்கிறது. அந்த ஐவகை நந்திகள் என்ன என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

சிவபெருமான் வீற்றிருக்கும் கயிலாயமலையின் பாதுகாவலராக இருக்கும் பொறுப்பை ஏற்றிருப்பவர், நந்தி பகவான். இவரின் அனுமதி பெற்றுதான் எவராக இருந்தாலும், சிவபெருமானை தரிசிக்க முடியும். அதன் காரணமாகத்தான் அனைத்து சிவாலயங்களிலும், சிவபெருமான் வீற்றிருக்கும் ஆலய கருவறைக்கு முன்பாகவே நந்தியம் பெருமான் இருப்பதை நாம் பார்க்கலாம். பொதுவாக சிவாலயங்களில் ஐந்து வகையான நந்திகள் இருக்கும் என்கிறார்கள். சில ஆலயங்களில் மூன்று நந்திகளும், இன்னும் சில ஆலயங்களில் கருவறைக்கு நேராக இருக்கும் நந்தியும் மட்டும் இருக்கும். ஆனால் ஐவகை நந்திகளுக்கு என்று தனிச் சிறப்பு அமைந்திருக்கிறது. அந்த ஐவகை நந்திகள் என்ன என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

கயிலாய நந்தி

சிவாலயங்களில் காணப்படும் ஐவகை நந்திகளில் இவர் முதன்மையானவர். இவர்தான் அனைத்து சிவாலயங்களிலும், மூலவருக்கு அருகே அமைந்திருப்பார். கயிலாயத்தில் ஈசனுக்கு அருகிலேயே எப்போதும் இருப்பது போல, ஆலயங்களிலும் இருப்பதால் இவருக்கு ‘கயிலாய நந்தி’ என்று பெயர்.

விஷ்ணு நந்தி

சிவபெருமானின் வாகனமான நந்தியாக, விஷ்ணுவே மாறியதாக ஒரு கதை இருக்கிறது. அதாவது திரிபுரம் எரிக்க தேரில் புறப்பட்டார் சிவபெருமான். அவர் முதன்மைக் கடவுளான விநாயகரை வணங்க மறந்து போனதால், தேரின் அச்சு முறிந்தது. அப்போது தேர் சரிந்து விடாமல் இருக்க விஷ்ணு பகவான், நந்தியாக மாறி தேரை தாங்கிப்பிடித்தார். இவரே ‘விஷ்ணு நந்தி’ ஆவார். இவரை ‘அவதார நந்தி’ என்றும் அழைப்பார்கள். இந்த நந்தியானது, கயிலாச நந்திக்கு அடுத்ததாக இருக்கும்.

அதிகார நந்தி

சிவாலயங்களில் காணப்படும் ஐவகை நந்திகளில் மூன்றாவதாக இருப்பது, ‘அதிகார நந்தி’யாகும். கயிலாயத்தில் வாசல் காவலராக இருக்கும் நந்தி, சிவபெருமானை தரிசிக்க வருபவர்களை உள்ளே அனுமதிக்கலாமா, கூடாதா? என்பதை முடிவு செய்யும் அதிகாரம் பெற்றவராகத் திகழ்வதால், இவருக்கு ‘அதிகார நந்தி’ என்று பெயர் வந்தது.

சாதாரண நந்தி

இந்த நந்தியானது, சிவாலயங்களில் இருக்கும் ஐவகை நந்திகளில் நான்காவதாக இருப்பதாகும். ஐந்து நந்திக்கும் குறைவான எண்ணிக்கையில் நந்திகள் இருக்கும் ஆலயங்களில் இந்த நந்தி அமைக்கப்படுவதில்லை. இதனை ‘சாதாரண நந்தி’ என்றே அழைக்கிறார்கள்.

பெரிய நந்தி

இவ்வகை நந்தியானது, ஆலயத்தில் நுழைவு வாசலில் நுழைந்ததும் இருக்கும். அனைத்து நந்திகளையும் விட இந்த நந்தியே உருவத்தில் பெரியதாக அமைக்கப்படும். கயிலாயத்தில் காவலனாக எந்த நேரத்திலும் போர்க்கோலம் கொண்டு விஸ்வரூபத்தில் வீற்றிருக்கும் நந்தியாக இவர் பார்க்கப்படுகிறார். தஞ்சாவூர் பெரிய கோவிலில் உள்ள பெரிய நந்தியை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இவரை ‘மகா நந்தி’, ‘விஸ்வரூப நந்தி’ என்றும் அழைப்பார்கள்.

Next Story