முனிவர்களுக்கு அருளிய ராஜகோபால சுவாமி


முனிவர்களுக்கு அருளிய ராஜகோபால சுவாமி
x
தினத்தந்தி 5 May 2021 10:04 AM GMT (Updated: 5 May 2021 10:04 AM GMT)

கிருஷ்ணனை நினைத்து கடுமையான தவத்தில் ஆழ்ந்த முனிவர்களுக்கு கிருஷ்ணர் தன்னுடைய 32 லீலைகளைக் காட்டி அருளினார்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது, மன்னார்குடி. இங்கு ராஜகோபால சுவாமி திருக்கோவில் அமைந்திருக்கிறது. கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூரைப் போல, இந்த ஆலயம் இருக்கும் திருத்தலத்தையும் ‘தட்சிண துவாரகை’ என்கிறார்கள். 23 ஏக்கர் பரப்பளவில் அமைந்த இந்த ஆலயத்தில் கிருஷ்ணர் வடிவமாக இறைவன் வீற்றிருக்கிறார். இந்த ஆலய மூலவரின் திருநாமம், ‘வாமதேவப் பெருமாள்.’ உற்சவரின் திருநாமம்தான் ‘ராஜகோபால சுவாமி.’ தாயாரின் திருநாமம் ‘செங்கமலத் தாயார்’ என்பதாகும். மேலும் செண்பகலட்சுமி, ரக்தாப்ஜ நாயகி, படிதாண்டா பத்தினி, ஹேமாம்புஜ நாயகி போன்ற பெயர்களிலும் தாயாரை அழைக்கிறார்கள். ஆலய உற்சவரின் பெயரில்தான் இந்த ஆலயம் விளங்குகிறது.

கிருஷ்ண அவதாரம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில், தென்பகுதியில் கோபிலர், கோபிரளயர் என்ற இரண்டு முனிவர்கள் இருந்தனர். அவர்கள் கண்ணனின் லீலைகளைக் கேட்டு, அவரைப் பார்க்க துவாரகை நோக்கி புறப்பட்டனர். அப்போது வழியில் இரு முனிவர்களையும் சந்தித்த நாரதர், கிருஷ்ணாவதாரம் முடிந்து விட்டதாக கூறினார்.

அதைக்கேட்ட முனிவர்கள் வருத்தம் அடைந்தனர். அவர்களை ஆறுதல்படுத்திய நாரதர், இருவரையும் கிருஷ்ணனை நினைத்து தவம் இருக்கும்படி அறிவுறுத்தினார். அதன்படி முனிவர்கள் இருவரும் கடுமையான தவத்தில் ஆழ்ந்தனர். அவர்களுக்கு இறைவன், ‘கிருஷ்ணராக’ காட்சி தந்தார். அவரிடம் தங்களின் லீலைகளை காட்டி அருளும்படி முனிவர்கள் வேண்டினார்கள்.

அதன்படி கிருஷ்ணர் தன்னுடைய 32 லீலைகளைக் காட்டி அருளினார். பின்னர் முனிவர்களின் வேண்டுதலுக்காக, இந்தத் தலத்தில் கிருஷ்ணர் எழுந்தருளினார் என்று தல வரலாறு சொல்கிறது.

இந்தக் கோவில் 16 கோபுரங்களுடன் 7 தூண்கள், 24 சன்னிதிகள், ஏழு மண்டபங்கள், ஒன்பது புனித தீர்த்தங்களை உள்ளடக்கி பரந்து விரிந்து கிடக்கிறது. இத்தல உற்சவர் சிலை, வெண்கலத்தால் ஆனது. இது சோழர் காலத்தைச் சேர்ந்ததாகும். இந்த ஆலயத்தில் காணப்படும் ஒரு குளம் 1,158 அடி நீளமும், 837 அடி அகலமும் கொண்டுள்ளது. இதனை ‘ஹரித் திராந்தி’ என்று அழைக்கிறார்கள்.

ஆலயத்தின் நுழைவு வாசலில் மழை நீர் சேகரிப்பதற் காக பெரிய தொட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. துர்வாச தீர்த்தம், திருப்பாற்கடல், கோபிகா தீர்த்தம், சங்கு தீர்த்தம், சக்கர தீர்த்தம் ஆகிய தீர்த்தங்களும் இந்த ஆலயத்தில் காணப்படுகின்றன. இத்தல மூலவர் 12 அடி உயரத்தில் பிரமாண்டமாக காட்சி தருகிறார்.

உற்சவர் ராஜகோபால சுவாமி, இந்த ஆலயத்தில் இடையன் கோலத்தில் பாலகனாக காட்சி தருகிறார். ஒரு வேஷ்டி அணிந்து, அதையே தலைப்பாகையாக சுருட்டி வைத்துள்ளார். வலது கையில் வெண்ணெய் மற்றும் சாட்டை வைத்திருக்கிறார். இடுப்பில் சலங்கை, சாவிக்கொத்து, கையில் வளையல், காலில் தண்டை, கொலுசு ஆகிய குழந்தைகள் அணியும் அணிகலன்களை அணிந்திருக்கிறார். அவரோடு ஒரு பசுவும், இரண்டு கன்றுகளும் உள்ளன.

தாயார் சன்னிதி அருகே, பெருமாள் சன்னிதி எதிரே, பெண் வடிவ கருடாழ்வார் இருக்கிறார். இத்தல இறைவனுக்கு, மதுரை கள்ளழகர் கோவில் போல, தினமும் மாலையில் மட்டும் தோசை நைவேத்தியம் படைக்கப்படுகிறது. இங்கு வெண்ணைதாழி உற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது.

நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்த பெரியோர்கள் இங்கு வாழ்ந்தமையால் ‘ராஜாதி ராஜ சதுர்வேதி மங்கலம்’ என்றும், செண்பக மரங்கள் அடர்ந்த காடுகள் நிறைந்து காணப்பட்டதால் ‘சென்பகாரண்யா ஷேத்திரம்’ எனவும், முதலாம் குலோத்துங்க சோழன் இக்கோவிலை அமைத்த காரணத்தால் ‘குலோத்துங்க சோழ விண்ணகரம்’ என்றும், ஸ்ரீ ராஜகோபாலன் கோவில் கொண்டிருப்பதால் ‘ராஜமன்னார்குடி’ என்றும், மன்னர்கள் கோபாலனுக்கு கோவில் கட்டியதால் ‘மன்னார்கோவில்’ என்றும் இவ்வூர் அழைக்கப்படுகிறது.

இந்தக் கோவில் குலோத்துங்கச் சோழனால், சுண்ணாம்புக் கலவை மற்றும் செங்கல் கொண்டு கி.பி. 1070-1125-ல் கட்டப்பட்டது என்று சொல்லப்படுகிறது. இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் பங்குத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆலயத்தின் 18 நாள் உற்சவமாக பங்குனி உத்திர விழாவும், 12 நாள் உற்சவமான விடையாற்றி விழாவும் சிறப்பு வாய்ந்தவை. இதில் விடையாற்றி உற்சவம், கிருஷ்ண தீர்த்த தெப்ப உற்சவத்துடன் நிறைவு பெறும். இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் ஆடிப்பூரம் அன்று செங்கமலத் தாயார் தேரில் எழுந்தருள்வார்.

திருவாரூரில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் மன்னார்குடி ராஜகோபால சுவாமி திருக்கோவில் அமைந்திருக்கிறது.

Next Story