ஆன்மிகம்

திருநாவுக்கரசரின் நோய் நீக்கிய ஈசன் + "||" + Eason who cured Thirunavukkara

திருநாவுக்கரசரின் நோய் நீக்கிய ஈசன்

திருநாவுக்கரசரின் நோய் நீக்கிய ஈசன்
திருநாவுக்கரசரின் நோய் நீக்கிய ஈசன்.
கடலூர் மாவட்டத்தில் உள்ளது, திருவதிகை என்ற ஊர். இங்கு பெரியநாயகி உடனாய வீரட்டானேஸ்வரர் திருக்கோவில் இருக்கிறது. இந்தக் கோவிலின் கர்ப்பக்கிரக விமானத்தைப் பார்த்துதான், பிற்காலத்தில் தஞ்சை பெரிய கோவிலை ராஜராஜ சோழன் அமைத்ததாக வரலாற்று ஆய்வுகள் சொல்கின்றன. அத்தகைய சிறப்புமிக்க இந்த ஆலயத்தில் உள்ள அம்மன் சன்னிதி முன்பாகத்தான், வடலூர் வள்ளலார் பெருமான் தியானம் இருந்து அருள் பெற்றதாக சொல்லப்படுகிறது. திருநாவுக்கரசரை இந்த உலகுக்கு அளித்த ஈசன் அருளும் ஆலயம் இது. அட்ட வீரட்டத் தலங்களுள் ஈசன் திரிபுரத்தை எரித்த வீரச் செயல் நிகழ்ந்தத் தலம் என்ற சிறப்பையும் இது பெறுகிறது.

திருநாவுக்கரசர் தமது உழவாரத் திருப்பணியை தொடங்கிய முதல் ஆலயமாக இந்த திருவதிகை திருத்தலம் இருக்கிறது. அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவராலும் பாடல் பெற்ற தலம் இதுவாகும். வர்க்க சாப தோசம், முன்னோர் செய்த பாவங்கள் நீங்க இந்த ஆலயத்தில் வழிபடலாம். தீராத வயிற்று வலியால் அவதிப்படுபவர்கள், உடல் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள், இத்தல திருநீறை பூசிக்கொண்டால், வியாதிகள் மறையும் என்கிறார்கள். திருஞானசம்பந்தருக்கு ஈசன் திருநடனம் காட்டிய திருத்தலமாகவும் இது திகழ்கிறது. சைவசித்தாந்த சாத்திரங்களுள் ஒன்றான ‘உண்மை விளக்கம்’ என்ற நூலை அருளிய மனவாசகங்கடந்தார் அவதரித்த தலமும் இதுவே. சுந்தரர், ஈசனின் திருவடி தீட்சை பெற்ற திருத்தலமாகவும் திருவதிகை விளங்குகிறது.

அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசரின் அக்காள் திலகவதியார் தங்கியிருந்து திருத்தொண்டு செய்து வந்த திருத்தலம் இது. மருள்நீக்கியார் என்ற இயற்பெயரைக் கொண்ட திருநாவுக்கரசர், சமண சமயத்தைத் தழுவினார். ஒரு முறை அவருக்கு சூலை நோய் (வயிற்றுவலி) ஏற்பட்டது. அதனை எவராலும் நீக்க முடியவில்லை. இறுதியாக அவர், தன்னுடைய அக்காள் இருக்கும், திருவதிகை திருத்தலத்திற்கு வந்தார். அங்கு திலகவதியாரை சந்தித்து தனது நோயை தீர்க்குமாறு வேண்டினார். திலகவதியாரும், திருவதிகை ஈசனின் திருநீறை சாப்பிடுவதற்காக கொடுத்தார். அதை சாப்பிட்டதும் அவரது நோய் மறைந்தது. இதையடுத்து தனது முதலாவது தேவாரப் பதிகத்தை இந்த ஆலய இறைவனை நோக்கிப் பாடினார். ஈசனால் ‘திருநாவுக்கரசர்’ என்று அழைக்கப்பட்டார்.

தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி எனும் மூன்று அசுரர்கள் பொன், வெள்ளி, இரும்பு எனும் மூன்று கோட்டைகளைக் கட்டிக் கொண்டு வாழ்ந்துவந்தனர். விமானம் போல் நினைத்த இடத்திற்கு செல்ல வசதியாக, இந்த கோட்டைகளுக்கு சிறகுகளும் இருந்தன. இந்த முப்புரங்களையும் வைத்துக்கொண்டு தேவர்களையும், முனிவர்களையும் மூன்று அசுரர்களும் துன்புறுத்தி வந்தனர். தங்களை காத்தருளும்படி தேவர்கள், சிவபெருமானிடம் வேண்டினர்.

இதையடுத்து அவர், பூமியைத் தேராக்கி, நான்கு வேதங்களைக் குதிரைகளாக்கி, பிரம்மாவை சாரதியாக்கி, சூரிய -சந்திரர்களை சக்கரங்களாக்கி, மற்ற உலக படைப்புகளையும், வானவர்களையும் போர்க் கருவிகளாகவும், உடல் உறுப்புகளாகவும் மாற்றினார். இச்சமயம் ஒவ்வொரு உறுப்புகளும் தன்னால் தான் முப்புரங்களையும் சிவபெருமான் வெல்லப் போகிறார் என்று கர்வம் கொள்ளத் தொடங்கின. ஈசன் இப்படையில் எந்த பயனும் இல்லை என்பதை அவர்களுக்கு புரிய வைக்க நினைத்து, தேர் தட்டில் கால் வைக்க அதன் அச்சு முறிந்தது. அமரர்களின் அகந்தையை எண்ணி எம்பெருமான் எள்ளி நகைக்க அவர் சிரித்த உடனேயே வானவர் உதவி ஏதுமின்றி கோட்டைகள் மூன்றும் பொடிப்பொடியாகின. இச்சம்பவம் நடந்த திருத்தலம் தான் திருவதிகை.

இத்தல வெளிப்பிரகாரத்தில் உள்ள வராகி அம்மன் சிறப்புக்குரியவர். பஞ்சமி நாட்களில் மாலை 5 மணிக்கு சிறப்பு அபிசேகம் வராகி அம்மனுக்கு நடைபெறுகிறது. இங்கு பவுர்ணமி நன்னாளில் கிரிவலம் நடக்கிறது. திருநாவுக்கரசருக்கும், அவரது சகோதரி திலகவதிக்கும் சன்னிதிகள் இங்கு உள்ளன. இங்கு திருநாவுக்கரசர் உட்கார்ந்த நிலையில் உள்ளது சிறப்பு. இங்கு ஈசனை சுவாதி நட்சத்திர நாளில் வழிபடுவதால் அனைத்து நலன்களும், வளங்களும் பெறலாம் என்கிறார்கள்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவிலும், விழுப்புரத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த திருத்தலம் அமைந்திருக்கிறது.