சிவசக்தியாக காட்சி தரும் மூகாம்பிகை


சிவசக்தியாக காட்சி தரும் மூகாம்பிகை
x
தினத்தந்தி 10 May 2021 8:20 PM GMT (Updated: 2021-05-11T01:50:16+05:30)

கர்நாடக மாநிலத்தில் உள்ளது, கொல்லூர். உடுப்பியில் இருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த திருத்தலத்தில் மூகாம்பிகை ஆலயம் இருக்கிறது.

சக்திவாய்ந்த திருத்தலமாக இருக்கும் கொல்லூர் மூகாம்பிகை ஆலயத்தில், சிவசக்தி வடிவமாக அன்னை காட்சி தருகிறாள். மகிஷாசூரனை வதம் செய்த தேவியாக, அம்பாள் இங்கே வீற்றிருக்கிறாள். இந்த ஆலயமானது, மேற்கு தொடர்ச்சி மலையின் மேற்கு சரிவில், கொடசாத்திர மலை அடிவாரத்தில் வற்றாத ஜீவநதியாக பாயும் சவுபர்னிகா ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது. தாய் மூகாம்பிகை, ரத்தின கற்களால் ஆன ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு, அலங்கார ரூபினியாகவும் பக்தர்களுக்கு காட்சி தருகிறாள்.

இந்த கோவிலில் உள்ள ஜோதிர்லிங்கத்திலும் ஒரு அதிசயம் ஒளிந்திருக்கிறது. இந்த லிங்கத்தின் மையப் பகுதியில், அதிசயிக்கத்தக்க வகையில் தங்க நிற கோடு ஒன்று காணப்படுகிறது. இது லிங்கத்தை சரிபாதியாக பிரிக்கும் வகையில் அமைந்துள்ளது. லிங்கத்தின் மீது சூரிய ஒளி படும் வேளையில் மட்டும் இது ஒளிர்வதைக் காணலாம். அந்த கோடு பிரிப்பதில் லிங்கத்தின் வலது பாதி பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரையும், இடது பாதி காளி, லட்சுமி, சரஸ்வதி ஆகியோரையும் சுட்டிக்காட்டுவதாக ஐதீகம். இந்த பஞ்சலோக சிலைக்கு, ஆதிசங்கரர் அபிஷேகம் செய்து வழிபட்டிருக்கிறார்.

இந்தக் கோவிலுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலமான தமிழ்நாடு, கேரளா, ஆந்திராவில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவார்கள். உடுப்பி, மங்களூரு, பெங்களூருவில் இருந்து இக்கோவிலுக்கு பஸ் மற்றும் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. பெங்களூருவில் இருந்து 458 கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் இருக்கிறது.

Next Story