ஆன்மிகம்

ஆதரவற்றவர்களை அரவணைப்போம்! + "||" + The unsupported We will embrace

ஆதரவற்றவர்களை அரவணைப்போம்!

ஆதரவற்றவர்களை அரவணைப்போம்!
உலகில் இன்றைய நிலவரப்படி 14.4 கோடி ஆதரவற்றவர்கள் உள்ளனர்.
 ஒவ்வொரு 14 நொடியிலும் ஒரு ஆதரவற்ற குழந்தை உருவாகுவதையும், 2 நிமிடத்திற்கு ஒரு ஆதரவற்ற குழந்தை பராமரிப்பு, போதிய ஊட்டச்சத்து இன்றி இருப்பதாகவும் ஐ.நா. சபையின் யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.

தாய்-தந்தை இல்லாத குழந்தைகள், பெற்ற பிள்ளைகளின் துணையின்றி தவிக்கும் பெற்றோர்கள், குடும்ப உறுப்பினர்களால் கைவிடப்பட்ட பெரியோர்கள் ஆகியோரே சமூகத்தால் ஆதரவற்றவர்கள், அநாதைகள் என்று அழைக்கப்படுகிறார்கள். பெற்றோரை கவனிக்காமல் இருக்கும் மகன்-மகள்கள், அதேபோல் பெற்ற குழந்தையை குப்பைத்தொட்டியில் போட்டுச் செல்லும் தாய்மார்களும் உள்ளனர்.

ஆதரவற்றவர்கள் மனித சமூகத்தால் பலவீனமானவர்களாக பார்க்கப்படுகிறார்கள் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஆதரவற்றவர்களுக்கு உறுதுணையாக, பக்க பலமாக இருக்க மனித சமூகத்திற்கு இஸ்லாம் கட்டளையிடுகிறது. ‘அது உங்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது’ என்றும் இஸ்லாம் கூறுகிறது. ‘மனிதருக்கு செய்ய வேண்டிய கடமைகளில் மிகச்சிறந்தது ஆதரவற்றவர்களை அரவணைப்பதாகும்' என்பது இஸ்லாமிய மார்க்கத்தின் வலியுறுத்தலாகும்.

ஆதரவற்றவர்களிடம் மிகச்சிறந்த முறையில் நடந்துகொள்ள வேண்டும். தேவைகளை நிறைவேற்ற வேண்டும். அவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும் என்ற இஸ்லாத்தின் வலியுறுத்தல்கள் நீண்டுசெல்கின்றன. இந்த செயல்கள் அனைத்தும் இறைவணக்கமாக கருதப்படும் என்பது இஸ்லாத்தின் சிறப்பான பார்வையாகும். ஆதரவற்றவர்கள், அநாதைகள் ஆகியோருக்கு உதவுபவர்கள் சொர்க்கத்தில் கற்பூரம் கலந்த ஊற்று நீரை பருகுவார்கள் என இறைவன் திருக்குர்ஆனில் குறிப்பிடுகிறான்.

ஆதரவற்றவர்களை மனித சமூகம் பார்க்கும் பார்வை மிகக்கொடுமையானது. சாதாரணமாக யாசகம் கேட்டு வருபவர்களிடம்கூட முகத்தை திருப்பிக்கொள்வதும், ‘ஒன்றும் இல்லை போ’ என்று விரட்டுபவர்களும் தாம் மனிதர்களில் அதிகம். அதேநேரம் ஆதரவற்றவர்களை அரவணைக்க ஆதரவற்றோர் இல்லங்களை நடத்துபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களுக்கு இறைவன் அருள் புரியட்டும்.

நமது குடும்பத்தில், உற்றார்-உறவினர்களில் ஆதரவற்றவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களை நமது தாய்-தந்தையாக, சகோதர-சகோதரியாக, பெற்ற பிள்ளையாக கருதி அவர்களை பராமரித்து வர வேண்டும். அந்த வீட்டைத்தான் இறைவனும் விரும்புகிறான். நபிகள் நாயகம் சொல்கிறார்கள் ‘ஆதரவற்றவர்களை நல்லமுறையில் பராமரிக்கும் வீடே சிறந்த வீடு. ஆதரவற்றவர்களைத் தீய முறையில் நடத்தும் வீடே மிக மோசமான வீடு’ என்று.

மற்றொரு சந்தர்ப்பத்தில் ‘நானும் அநாதைகளின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம்’ என்று கூறியபடி தம் சுட்டு விரலையும், நடு விரலையும் இணைத்து அந்த இரண்டுக்குமிடையே சற்று இடைவெளிவிட்டு சைகை செய்தார்கள் நபிகள் நாயகம் அவர்கள் (நூல்: புகாரி).

நபிகளாரை உயிருக்குமேலாக நேசிப்பவர்கள் அவர் அருகில் சொர்க்கத்தில் இருப்பது எவ்வளவு பெரிய பாக்கியம் என்பதை நினைத்து பார்க்க வேண்டும். அந்த பாக்கியம் கிடைக்க வேண்டும் என்றால் ஆதரவற்றவர்களை அரவணைத்து செல்வது அவசியமாகும்.

சமுதாயத்தில் பலவீனர்களாயிருக்கும் ஆதரவற்றவர்களையும், ஏழைகளையும் நாம் அல்லாஹ்வுக்காக அக்கறை கொள்ள வேண்டும். அவர்களை கேவலமாக நினைப்பதோ, தரக்குறைவாக நடத்துவதோ கூடாது. அப்படி நடந்துகொள்பவர்கள் தீர்ப்பு நாளை (மறுமையை) பொய்யாக்கும் மாபாவத்தைச் செய்பவர்கள் என இறைவன் திருக்குர்ஆனில் கண்டிக்கிறான். மறுமையை நம்பாதவர் இறைவனை நம்பாதவர் போலாவார். ஆதரவற்றவர்களை தரக்குறைவாக நடத்துபவர்கள் இறை மறுப்புக்கு உண்டான தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்பதே இறைவனின் செய்தி.

‘நீங்கள் உங்கள் இதயத்தை மென்மையாக்க விரும்பினால் ஆதரவற்றவர்களிடம் இரக்கத்துடன் நடந்து கொள்ளுங்கள். அவர்களின் தலையை கருணையோடு நீவி விடுங்கள். நீங்கள் உண்ணும் உணவை அவர்களுக்குக் கொடுங்கள்’ என்றார்கள் நபிகள் நாயகம். ஆம், இவ்வாறு அனைவரும் நடந்துகொண்டால் இதயம் மென்மையாவது மட்டுமல்ல இறைவனின் அருளும் அனைவருக்கும் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.