ஆன்மிகம்

25-5-2021 நரசிம்மர் ஜெயந்தி அவதாரத்திற்கு முன்பாகவே நரசிம்ம கோலம் வெளிப்பட்ட தலம் + "||" + 25-5-2021 Narasimhar Jayanti Site where Narasimha Kolam emerged

25-5-2021 நரசிம்மர் ஜெயந்தி அவதாரத்திற்கு முன்பாகவே நரசிம்ம கோலம் வெளிப்பட்ட தலம்

25-5-2021 நரசிம்மர் ஜெயந்தி அவதாரத்திற்கு முன்பாகவே நரசிம்ம கோலம் வெளிப்பட்ட தலம்
இரண்யாட்சனின் சகோதரன் இரண்யகசிபு. பூமியை கடலுக்கு அடியில் ஒளித்து வைத்த இரண்யாட்சனை, மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து அழித்தார்.
சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ளது, திருக்கோஷ்டியூர் திருத்தலம். இங்கு சவுமியநாராயணர் திருக்கோவில் அமைந்துள்ளது. இது 108 திவ்ய தேசங்களில் 95-வது திருத்தலம் ஆகும். இந்த ஆலயம் பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டு விளங்குகிறது. இந்த ஆலயத்தில் மகாவிஷ்ணு, நரசிம்ம அவதாரத்தை எடுப்பதற்கு முன்பாகவே, அந்த திருக்கோலத்தை தேவர்களுக்கு காட்டி அருளியதாக தல வரலாறு சொல்கிறது.

இரண்யாட்சனின் சகோதரன் இரண்யகசிபு. பூமியை கடலுக்கு அடியில் ஒளித்து வைத்த இரண்யாட்சனை, மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து அழித்தார். அது முதலே மகாவிஷ்ணுவை எதிரியாக நினைக்கத் தொடங்கினான், இரண்யகசிபு. விஷ்ணுவை அழிப்பதற்காக மாபெரும் சக்தி அவனுக்கு தேவைப்பட்டது. இதனால் பிரம்மதேவரை நோக்கி தவம்புரிந்து, பல வரங்களைப் பெற்றான். அதில் ஒன்றுதான், ‘மனிதர்கள், விலங்குகள், தேவர்கள், ஆயுதங்களால் தனக்கு அழிவு நேரக்கூடாது’ என்ற வரம். அதை பெற்ற பின் ‘தன்னை அழிக்க இந்த உலகத்தில் யாரும் இல்லை’ என்று நினைத்த இரண்யகசிபு, தன்னையே கடவுளாக அனைவரும் வணங்க வேண்டும் என்று, முனிவர்களையும், தேவர்களையும் துன்புறுத்தத் தொடங்கினான். அவனிடம் இருந்து தங்களைக் காத்தருளும்படி மகாவிஷ்ணுவை வேண்டினர், தேவர்கள்.

இதையடுத்து திருமால், இரண்ய கசிபுவை வதம் செய்வது பற்றி ஆலோசனை நடத்த தேவர்களை அழைத்தார். ஆனால் தேவர்கள், ‘இரண்யகசிபுவின் தொந்தரவு இல்லாத இடத்தில் ஆலோசனை நடத்த வேண்டும்’ என்றனர். அதன்படி இத்தலத்தை தேர்வு செய்தார் திருமால். அதற்கு ஒரு காரணம் இருந்தது. இந்தப் பகுதியில் கதம்ப மகரிஷி என்பவர் விஷ்ணுவின் தரிசனம் வேண்டி தவம் இருந்து வந்தார். அவர் தன்னுடைய தவத்திற்கு எந்த வித தொந்தரவும் இருக்கக் கூடாது என்று வரம் பெற்றிருந்தார். எனவேதான் இந்த இடத்தை திருமால் தேர்வு செய்தார்.

ஆலோசனையின்போது, தான் நரசிம்ம அவதாரம் எடுத்து இரண்ய கசிபுவை வதம் செய்யப் போவதாக விஷ்ணு தெரிவித்தார். இதையடுத்து ‘அந்த அவதாரத்தை தங்களுக்கு காட்டியருள வேண்டும்’ என்று தேவர்களும், கதம்ப மகரிஷியும் கோரிக்கை வைத்தனர். அதன்படி நரசிம்ம அவதாரத்திற்கு முன்பாகவே, இறைவன் இத்தலத்தில் தேவர்களுக்கு தன்னுடைய நரசிம்ம அவதாரத்தை காட்டியருளினார். பின்னர் அவர்களுக்கு நின்ற, நடந்த, இருந்த, கிடந்த என நான்கு கோலங்களையும் காட்டி அருள்புரிந்தார். அந்த நான்கு கோலங்களுடனும் இறைவனை இங்கு நாம் தரிசிக்கலாம்.

ஆலய அமைப்பு

இந்த ஆலயத்தின் விமானம், ‘அஷ்டாங்க விமானம்.’ தேவ சிற்பி விஸ்வகர்மா, அசுர சிற்பி மயன் இருவரும் இணைந்து இந்த விமானத்தை அமைத்ததாக கூறப்படுகிறது. இந்த விமானம் மூன்று தளங்களாக உள்ளது. விமானத்தின் வடபக்கத்தில் நரசிம்மர் இருக்கிறார். இவருக்கு அருகில் ராகு - கேது இருப்பது விசேஷமாகும். பிரகாரத்தில் நரசிம்மர், இரண்யனை வதம் செய்த கோலத்தில் இருக்கிறார். கோவில் முகப்பில் சுயம்பு லிங்கம் இருப்பது வேறு எங்கும் இல்லாத சிறப்பாகும்.

இத்தல இறைவனான சவுமிய நாராயணருடன், ஸ்ரீதேவி மற்றும் பூதேவி இருக்கிறார்கள். மேலும் மது, கைடபர், இந்திரன், புருரூப சக்கரவர்த்தி, கதம்ப மகரிஷி, பிரம்மா, சரஸ்வதி, சாவித்திரி, இந்திரன் ஆகியோரும் உள்ளனர். திருமாமகள் என்ற பெயரில் தாயாருக்கு தனிச் சன்னிதி இருக்கிறது. இத்தலத்தில் சந்தான கிருஷ்ணன் என்ற பெயரில் கிருஷ்ணன் வீற்றிருக்கிறார். இவருக்கு ‘பிரார்த்தனை கண்ணன்’ என்ற பெயரும் உண்டு. இவரை வழிபட்டால் புத்திர பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கையாகும். இத்தல இறைவனை பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்து வழிபட்டுள்ளனர்.

இந்த ஆலயத்தில் செய்யப்படும், விளக்கு நேர்த்திக்கடன் மிகவும் பிரசித்திப்பெற்றது. இங்கு வந்து பிரார்த்தனை செய்பவர்கள், ஒரு அகல் விளக்கு வாங்கி, மூலவரின் முன்பாக வைத்து அதை வீட்டிற்கு எடுத்துச் செல்கிறார்கள். அந்த விளக்கில் காசும், துளசியும் வைத்து சிறு பெட்டியில் வைத்து மூடி, வீட்டின் பூஜை அறையில் வைக்கிறார்கள். இந்த விளக்கில் பெருமாளும், லட்சுமியும் எழுந்தருள்வதாக ஐதீகம். இவ்வாறு செய்வதால் பக்தர்களின் நியாயமான வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேறியவர்கள், மாசி தெப்ப திருவிழாவின் போது, இந்த விளக்குடன், மற்றொரு நெய் விளக்கை தீர்த்தக்கரையில் ஏற்றிவைத்து வழிபடுகின்றனர். அந்த நேரத்தில் புதியதாக வேண்டுதல் செய்ய வரும் பக்தர்கள், இந்த விளக்கை எடுத்துச் செல்கின்றனர்.

அமைவிடம்

காரைக்குடியில் இருந்து 24 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, திருப்பத்தூர் என்ற ஊர். இங்கிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தூரம் சென்றால் திருக்கோஷ்டியூரை அடையலாம்.