சொர்க்க வாசல்கள்


சொர்க்க வாசல்கள்
x
தினத்தந்தி 25 May 2021 3:23 PM GMT (Updated: 25 May 2021 3:23 PM GMT)

பெற்றோர்கள் நம் சொர்க்கத்தின் வாசல்களாக உள்ளனர். நாம் அவர்களுக்கு செய்கின்ற அனைத்து உதவிகளும் சொர்க்கத்தில் நமக்காக பெரும் மாளிகையாக உருவாகிக் கொண்டிருக்கின்றன.

எத்தனையோ விதமான தியாகங்கள் இந்த உலகில் போற்றப்படுகின்றன. ஆனால் நம் பெற்றோர்கள் செய்த தியாகத்திற்கு ஈடுஇணை எதுவும் கிடையாது. அதனால் தான் திருக்குர்ஆனில் அல்லாஹ் மனிதர்களை விளித்து “தன்னை வணங்குங்கள் என்று சொல்கின்ற இடங்களில் எல்லாம் உங்கள் பெற்றோருக்கும் நன்றி செலுத்துங்கள்” என்று சேர்த்து சொல்கின்றான். மேலும், “மனிதன் தன் தாய் தந்தையருக்கு நன்றி செலுத்தும்படி நாம் அவனுக்கு நல்லுபதேசம் செய்தோம்” (திருக்குர்ஆன் 46:15) என்றும் வலியுறுத்துகின்றான்.

பெற்றோர்கள் நம் சொர்க்கத்தின் வாசல்களாக உள்ளனர். நாம் அவர்களுக்கு செய்கின்ற அனைத்து உதவிகளும் சொர்க்கத்தில் நமக்காக பெரும் மாளிகையாக உருவாகிக் கொண்டிருக்கின்றன.

ஒருமுறை ஒரு சஹாபாவின் தாயார் இறந்து விட்டார்கள். அவர் கதறி அழுகிறார். அவரிடம் கேட்டபோது, “என் தாயின் பிரிவு தாங்க முடியாத துக்கத்தை தந்தாலும் இன்றிலிருந்து சின்னச்சின்ன விஷயங்களுக்காக பெரும் நன்மைகளை பெற்றுத்தரும் என் சொர்க்க வாசல் அடைபட்டு விட்டதே” என்று ஆதங்கப்பட்டார். எனவே பெற்றோருக்காக நாம் செய்யும் ஒவ்வொரு உதவியும் அவர்களுக்கானதல்ல, நம்மை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும் உன்னதமான பாதை.

பெற்றோர் இறந்து விட்ட பின்னர் சொர்க்கத்திலும் கூட நமக்காக அல்லாஹ்விடம் முறையிடுவார்களாம். “இறைவா, என்னை சொர்க்கவாசி ஆக்கி நன்மை செய்தாய். என் பிள்ளைகளையும் இங்கே என்னோடு இணைத்து விடு” என்று வேண்டுவார்களாம். “அதற்குரிய நன்மை அவனிடம் இல்லையே” என்று அல்லாஹ் சொன்னால், “உன் அளப்பரிய அருள் கிருபை என்று ஒன்று இருக்கிறதே அதன் மூலம் அதனை உண்மை படுத்திவிடு அல்லாஹ்” என்பார்களாம். அல்லாஹ் இந்த நிகழ்ச்சியை அருள்மறையில் இவ்வாறு படம் பிடித்துக் காட்டுகின்றான்.

“எந்த நம்பிக்கையாளர்களின் சந்ததிகள் தங்கள் பெற்றோர்களை பின்பற்றி நம்பிக்கை கொள்கிறார்களோ, அந்த சந்ததியினரின் நன்மை குறைவாக இருந்தாலும், அவர்கள் பெற்றோர்கள் திருப்தி அடையும் பொருட்டு அவர்களுடைய சந்ததிகளையும் அவர்களுடன் சுவனபதியில் சேர்த்து விடுவோம்”. (திருக்குர்ஆன் 52:21)

பெற்றோர்கள் உயிருடன் நம்முடன் வாழ்ந்த காலத்தில் நமக்கு சொர்க்க வாசல்களாக உள்ளனர். இறந்தபின், தங்கள் முயற்சியால் நமக்கு சொர்க்கத்தைப் பெற்றுத் தர வல்லவர்களாக உள்ளனர் என்ற கருத்தை உள்வாங்கி எண்ணிப்பார்க்க வேண்டும்.

அவர்கள் இருந்தாலும், இறந்தாலும் நமக்கு நன்மை மட்டுமே செய்தார்கள். நாம் சொர்க்கம் பெற்றுக்கொள்வதற்கு காரணமாய் இருப்பார்கள். இதனை உணர்ந்து உத்தமராய் வாழ்ந்து, பெற்றோரை போற்றுவோம். பெற்றோரை இழந்தவர்கள் அவர்கள் செய்து வந்த நல்ல காரியங்களை தொடர்ந்து செய்வோம். அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரியட்டும்.

மு. முகமது யூசுப், உடன்குடி.

Next Story