‘பரி’பாஷை அறிந்த நகுலன்


‘பரி’பாஷை அறிந்த நகுலன்
x
தினத்தந்தி 25 May 2021 4:20 PM GMT (Updated: 25 May 2021 4:20 PM GMT)

பாண்டவர்கள் ஐவரில், தருமர் எனப்படும் யுதிஷ்டிரரை அறியாதவர்கள் எவரும் இல்லை. அவர் தான தருமங்களுக்கும், உண்மைக்கும் நியாயத்திற்கும் புகழ்பெற்றவர். அதே போல் பீமன், உடல் வலிமைக்கும், அர்ச்சுனன் வில்வித்தையிலும் சிறந்தவர்கள்.

பாண்டவர்களில் இவர்கள் மூவரைப் போல, நகுலனையும், சகாதேவனையும் அதிகம் பேசுபவர்கள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதிலும் நகுலனைப் பற்றிய விஷயங்கள் குறைவாகவே மகாபாரதத்தில் காணப்படுகின்றது.

ஆனாலும் நகுலனும் வாள் வீச்சு, விலங்குகளின் மொழிகளை அறிதல் உள்ளிட்ட சில நுணுக்கமான கலைகளைக் கற்று வைத்திருந்தான். ‘பரிபாஷை’ எனப்படும் ரகசிய மொழியில் பேசும் முறையே, பாண்டவர்களில் ஒருவனான நகுலனால் ஏற்படுத்தப்பட்டதுதான் என்று புராணங்கள் சொல்கின்றன. நகுலன், குதிரைகளின் மொழியை அறிந்தவன். குதிரைகளை, அவற்றின் மனநிலையை புரிந்து கொண்டு பராமரிப்பதில் வல்லவன். குதிரைகள் பேசுவதை அறிந்ததால் அதற்கு ‘பரிபாஷை’ என்று பெயர் வந்தது. ‘பரி’ என்பது குதிரையையும், ‘பாஷை’ என்பது மொழியையும் குறிக்கும். இப்படி யாருக்கும் அறியாத மொழியை அறிந்ததால், ரகசிய மொழிக்கும் ‘பரிபாஷை’ என்று பெயர் வந்தது.

குதிரைகளின் ஒவ்வொரு கனைப்புக்குமான, காரணத்தை அறிந்து வைத்திருந்தவன் நகுலன். குதிரைகளுக்கு மோப்ப சக்தி அதிகம் உண்டு. தன் எஜமானன், அரை காத தூரத்தில் வரும்போதே அவனது வருகையை குதிரைகள் உணர்ந்துகொள்ளும். ஒரு சாரதியானவன், சாட்டையால் குதிரையின் முதுகில் வருடுவதையும், தட்டுவதையும், அடிப்பதையும் புரிந்துகொண்டு அதன்படி செயல்பட அவற்றால் முடியும். கடிவாளத்தை சுண்டும் முறையை வைத்தே, எந்த திசையில் திரும்ப வேண்டும் என்பதையும் அவை அறியும் என்பதையெல்லாம் நன்கு அறிந்து வைத்திருந்தான் நகுலன்.

அவன் குதிரைகளிடம் அதிகம் பேசுவதில்லை. குதிரை களுடன் பேசினால், அதைப் பார்க்கும் பலரும் அவனை பைத்தியம் என்று நினைத்துவிடக்கூடாதே. அதனால் தொடு உணர்வின் மூலமாக குதிரைகளுக்கு தன்னுடைய மொழியை கடத்துவான். நகுலன், குதிரையின் முதுகை தடவிக் கொடுத்தால், ‘இன்று வெகுதூரப் பயணப்பட வேண்டும்’ என்று குதிரைகள் புரிந்துகொள்ளும். அதுவே குதிரைகளின் கண்களுக்கு நடுவில் நெற்றியில் இருந்து கீழ்நோக்கி தட்டி, வருடிக்கொடுத்தால், ‘நன்றாக ஓய்வெடுங்கள்’ என்று பொருள்.

கவுரவர்களுடனான சூதாட் டத்தில் தோல்வியடைந்த பாண்டவர்கள், 12 வருடம் வனவாசம் மற்றும் ஒரு வருடம் அஞ்ஞாத வாசம் என 13 வருடங்களை கழிக்க வேண்டியதிருந்தது. அஞ்ஞாத வாசம் மேற்கொண்ட கடைசி ஒரு வருடத்தில், பாண்டவர்கள் தங்களை மறைத்துக் கொள்வதற்காக, விராட தேசத்தில் மாறுவேடத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தனர். பாண்டவர்களில் நகுலன், விராட மன்னனின் தேர் சாரதியாக இருந்தான். ஒரு நாள் மன்னனை அழைத்துக் கொண்டு காட்டு வழியாக சென்று கொண்டிருந்தான், நகுலன். அப்போது ஓரிடத்தில் ஆணி அடித்தது போல் அப்படியே நின்றன குதிரைகள்.

‘குதிரைகள் ஏன் ஓடவில்லை’ என்று நினைத்த நகுலன், உடனடியாக தேரை விட்டு கீழே இறங்கி குதிரைகளின் அருகில் சென்றான். அவற்றின் கண்களில் இருந்த மிரட்சி, அவை ஏதோ சொல்ல நினைப்பதை நகுலனுக்கு உணர்த்தின. அப்போது குதிரைகள் தலையை மேலும் கீழுமாக வேகமாக ஆட்டின. அதைப் புரிந்து கொண்ட நகுலன், மன்னனிடம் சென்று, “மன்னா.. காட்டாற்று வெள்ளம் வந்து கொண்டிருக்கிறது. உடனடியாக நாம் தேரை விட்டு இறங்கி, உயரமான மரத்தில் ஏறிக்கொள்ள வேண்டும்” என்றான்.

விராட மன்னன், “காட்டாற்று வெள்ளம் என்றால், தொலைவில் வரும்போதே பேரிரைச்சல் கேட்குமே. அப்படி ஒரு அறிகுறி இருப்பதாக தோன்றவில்லையே” என்று கூறினாலும், அவருக்கு நகுலன் மீது நன்மதிப்பு இருந்தது. எனவே அவன் சொன்னபடியே, அங்கிருந்த உயரமான மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டார். நகுலனும் தேரில் இருந்து குதிரைகளை அவிழ்த்துவிட்டு விட்டு, தானும் மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டான். குதிரைகள் மேடான பகுதியை நோக்கி ஓடின. சில நிமிடங்கள் கழித்து, அங்கு பெரும் இரைச்சல் கேட்டது. அதைத் தொடர்ந்து காட்டாற்று பெரு வெள்ளம் மூன்று ஆட்களின் உயரத்திற்கு கரைபுரண்டு ஓடிவந்தது. ரதம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, சுக்கு நூறாக நொறுங்கியது. பல மணி நேரத்திற்கு பிறகு வெள்ளம் வடிந்ததும், நகுலனும், விராட தேசத்து மன்னனும் கீழே இறங்கி வந்தனர்.

விராட மன்னன், நகுலனிடம் “இதை எப்படி முன்பாகவே அறிந்தாய்?” என்று கேட்டார். அதற்கு நகுலன், “குதிரைகள் சொல்லின” என்று பதிலளித்தான். சிறுது நேரத்தில் குதிரைகள் திரும்பி வந்தன. அவற்றின் மீது ஏறி, மன்னனும், நகுலனும் அரண்மனை திரும்பினர். அங்கு சென்றதும், தன்னிடம் இருக்கும் குதிரைகளுக்கு மிகப்பெரிய லாயங்களை ஏற்பாடு செய்த விராட தேச மன்னன், அதில் மேலும் பல குதிரைகளை சேர்த்து, பெரும் பொருளையும் ஒதுக்கி, அவற்றை பராமரிக்கும் பொறுப்பை நகுலனிடம் ஒப்படைத்தான்.

Next Story