தென்னகத்தின் ‘எல்லோரா’


தென்னகத்தின் ‘எல்லோரா’
x
தினத்தந்தி 31 May 2021 7:43 PM GMT (Updated: 31 May 2021 7:43 PM GMT)

எல்லோராவில் உள்ள குகைச் சிற்பங்கள் சிறப்பு பெற்றவை. அதிலும் மலையின் மேல் பகுதியில் இருந்து கீழாக குடைந்து உருவாக்கப்பட்ட கயிலாசநாதர் கோவில் முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்த ஆலயம் சுமார் 8-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்று கல்வெட்டு ஆதாரங்கள் சொல்கின்றன. இதே காலட்டத்தில், அதாவது 8-ம் நூற்றாண்டு காலத்தில் இந்தியாவின் தென்பகுதியான தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்திலும் ஒரு குகைக் கோவில் செதுக்கப்பட்டுள்ளது. அதுவும் எல்லோரா கயிலாசநாதர் கோவில் போன்றே உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் இதனை ‘தென்னகத்தின் எல்லோரோ’ என்று அழைக்கிறார்கள்.

அத்தகைய சிறப்புமிக்க திருத்தலமாக இருக்கிறது, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ‘அைர மலை’. இந்த மலை மீதுதான் குடவரைக் கோவில், ஒற்றைப் பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. ஒரே பாறையில் வெட்டப்பட்டதால், இது ‘வெட்டுவான் கோவில்’ என்று அழைக்கப்படுகிறது. நெடுஞ்சடைய வரகுண பாண்டியன் என்பவனின் ஆட்சி காலத்தில், கி.பி. 8-ம் நூற்றாண்டில் இந்தக் கோவில் உருவாக்கப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஆலயமானது திராவிடக் கட்டுமான கலையமைப்பில் இருக்கிறது.

மலையின் மேல் பகுதியில் இருந்து கீழ் நோக்கி பாறையை செதுக்கி இந்தக் கோவிலை உருவாக்கி உள்ளனர். மலையில் கிடைமட்டத்தில் இருந்து 7.5 மீட்டர் ஆழத்தில் பாறையைச் செதுக்கி இருக்கிறார்கள். சிவபெருமானுக்காக இந்தக் கோவில் எழுப்பப்பட்டதாக கூறப்பட்டாலும், இங்கு தற்போது விநாயகருக்குதான் வழிபாடு நடைபெறுகின்றன. இந்தக் கோவில் பணியானது, முழுமையாக நடைபெறவில்லை. இந்தக் கோவிலின் அடிப்பகுதி முற்றுபெறாமல் இருப்பதே இதற்குச் சான்றாக இருக்கிறது. அதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. இந்தக் கோவிலில் சிவபெருமான் தவிர்த்து, பிரம்மா, திருமால், தேவ கன்னியர்கள், பூத கணங்களின் பல்வேறு சிற்பங்கள் காணப்படுகின்றன. கோவில் முகப்பில் சிவபெருமானும், பார்வதியும் அரு கருகே அமர்ந்து பேசிக்கொண்டிருப்பது போன்ற அரிய காட்சி காண்பவர்களின் கண்களை கொள்ளை கொள்ளும் வகையில் அமைந்திருக்கிறது.

மேலும் மத்தளம் கொட்டும் தட்சிணாமூர்த்தி, விமானத்தை தாங்கும் பூத கணங்கள், விமானத்தின் மேற்கு திசையில் நரசிம்மர், வடக்கில் பிரம்மன் இருக்கின்றனர். விமானத்தின் நான்கு மூலைகளிலும் நந்தி சிலைகள் காணப்படுகின்றன. அவற்றுக்கு கீழ் யாழி வரிசை உள்ளது. இந்தக் கோவிலுக்கு கருவறையும், அர்த்த மண்டபமும் அமைந்துள்ளன.

அரைமலையின் கிழக்கு பகுதியில்தான் இந்த வெட்டுவான் கோவில் இருக்கிறது. அதன் அருகில் தென் பகுதியில் சமண தீர்த்தங்கரர்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. நின்றசீர் நெடுமாறன் காலத்தில், இங்கு சமணர்கள் கழுவேற்றப்பட்ட காரணத்தால், இது ‘கழுமலை’ என்று அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் ‘கழுகுமலை’ என்று ஆகியிருக்கலாம் என்கிறார்கள், ஆராய்ச்சியாளர்கள். சமணர்களின் முக்கியப் பள்ளிகளுள் ஒன்றாக விளங்கும் இவ்விடத்தில் உள்ள மலையின் சரிவில், சமணத் தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இங்கிருக்கும் சமணப் படுகைகள் பிரசித்தி பெற்றவை. இங்கு பல்வேறு சமணச் சிற்பங்கள் ஆண்டுகள் பல கடந்தாலும் இன்றும் அதே எழிலுடன் காட்சியளிக்கின்றன. மகாவீரர், பாகுபலி, பார்சுவநாதர் போன்ற பல தீர்த்தங்கரர்களின் சிற்பங்களால் இந்த மலை நிறைந்திருக்கிறது.

இது தவிர மலையின் அடிவாரப் பகுதியில் கழுகுமலை முருகன் கோவிலும் அமைந்திருக்கிறது. இதுவும் குடவரைக் கோவில்தான்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, கழுகுமலை. இங்கிருந்து வடக்கு நோக்கி சுமார் 1 கிலோமீட்டர் தூரம் பயணித்தால் ‘அரைமலை’யில் உள்ள வெட்டுவான் கோவிலை அடையலாம்.

செவி வழிக் கதை

பாண்டிய நாட்டில் சிற்பக் கலையில் வல்லவரான ஒருவர் இருந்தார். அவருக்கு ஒரு மகன். ஒருநாள் கோவில் விழாவில் அந்த மகனை, சிற்பி தொலைத்து விட்டார். எங்கு தேடியும் மகனை கண்டுபிடிக்க முடியவில்லை. வருடங்கள் பல கடந்துவிட்டன. சிற்பி, அரைமலை என்று அழைக்கப்படும் கழுகுமலையில் வந்து தங்கியிருந்தார். அவர் சமணர்களின் சிலைகளை செதுக்கி வந்தார். ஒரு நாள் அவரிடம் வந்த ஊர் மக்கள், “இம்மலையின் கிழக்கு பக்கத்தில் ஒரு இளைஞன், நேர்த்தியாக சிற்பங்களை செதுக்குகிறான்” என்று சொன்னதோடு, அந்த இளைஞனை பலவாறாக புகழ்ந்தார்கள்.

ஒரு கலைஞன் முன்பாக மற்றொரு கலைஞனை புகழ்வது பலருக்கும் பொறாமையையே வரவழைக்கும். அந்த சிற்பிக்கும் அப்படித்தான், பொறாமை தொற்றிக்கொண்டது. அது கோபமாக மாறியது. இளஞ்சிற்பி இருக்கும் இடத்திற்குச் சென்ற அவர், அந்த இளைஞனை தன் கையில் வைத்திருந்த உளியால் தலையில் வெட்டினார். அந்த இளைஞன் ‘அப்பா’ என்று கதறியபடியே உயிரிழந்தான். பின்னர்தான் தெரியவந்தது, சிற்பி சிறுவயதில் தொலைத்த மகன் அவன்தான் என்று. தன் மகன் ஒரே கல்லில் உருவாக்கிய கோவிலையும், அதில் இருந்த சிற்பங்களையும் பார்த்து மலைத்துப் போனார். மகனை மடியில் போட்டுக்கொண்டு புலம்பினார். இளஞ்சிற்பி இறந்த காரணத்தால், அந்த கோவில் பணிகள் அப்படியே இடைநின்றுபோனது. இளஞ்சிற்பி வெட்டுப்பட்டு இறந்ததால் இது ‘வெட்டுவான் கோவில்’ ஆனதாக ஊர் மக்கள் இன்றளவும் நம்புகிறார்கள். இது செவி வழிக் கதைதான் என்றாலும், அந்த ஊரோடும், வெட்டுவான் கோவிலின் வரலாறோடும் இந்தக் கதை இணைந்துவிட்டதாக ஊர் மக்கள் சொல்கிறார்கள்.

Next Story