குருச்சேத்திர போர் விவரம்


குருச்சேத்திர போர் விவரம்
x
தினத்தந்தி 8 Jun 2021 9:42 AM GMT (Updated: 2021-06-08T15:12:10+05:30)

இதிகாசங்களில் ஒன்றாக சிறப்பு பெற்றிருக்கிறது, ‘மகாபாரதம்.’ இந்த காவியத்தில் வரும் குருச்சேத்திரப் போர் முக்கியமான நிகழ்வாகும். குருச்சேத்திரம் என்ற இடத்தில் நடைபெற்றதால், இது இப்பெயர் பெற்றது. பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் இடையில் நடைபெற்ற இந்தப் போர் குறித்த சில விவரங்களை சிறுசிறு துணுக்குகளாக பார்ப்போம்.

போருக்கான காரணம்
கவுரவர்களுடனான சூதாட்டத்தில், பாண்டவர்கள் தங்கள் நாட்டை இழந்தனர். 12 ஆண்டு வனவாசம், ஓராண்டு அஞ்ஞாத வாசம் முடிந்து வந்தால், நாட்டை திருப்பித் தருவதாக ஒப்பந்தம். ஆனால் வனவாசம் முடிந்து வந்தபின்னர், நாட்டைக் கொடுக்க கவுரவர்கள் ஒப்புக்கொள்ளாததால் இந்தப் போர் உருவானது.

போரின் விதிமுறைகள்

* போர் பகலில் மட்டுமே நடைபெறும்.

* ஆயுதம் இல்லாதவர்களுடன் போரிடக்கூடாது.

* புறமுதுகிடுவோரை துரத்திச் சென்று தாக்கக்கூடாது.

* இருவீரர் சண்டையிடுகையில், மூன்றாவது ஒருவர் இடைபுகக்கூடாது.

இப்படி பல விதிமுறைகள் இருந்தாலும், சில நேரங்களில் அந்த விதிமுறைகள் அனைத்தும் மீறப்பட்டன.

நான்கு பருவம்

மகாபாரதப் போர் 18 நாட்கள் நடைபெற்றது. அதில் கவுரவர்கள் சார்பில் தலைமையேற்ற நான்கு பேரை முன்னிலைப்படுத்தி நான்கு பருவங்கள் பிரிக்கப்பட்டன. மகா பாரதத்தில் அவை பீஷ்ம பருவம், துரோண பருவம், கர்ண பருவம், சல்லிய பருவம். பீஷ்மர் முதல் 10 நாட்களும், துரோணர் 5 நாட்களும், கர்ணன் 2 நாட்களும், சல்லியன் ஒரு நாளும் தலைமையேற்றனர்.

நால்வகை படைகள்

* ரதப் படை (தேர்)

* கஜப் படை (யானை)

* துரகப் படை (குதிரை)

* பதாதிப் படை (மனிதர்கள்)

படைப்பிரிவுகள்

* ஒரு தேர், ஒரு யானை, மூன்று குதிரைகள், ஐந்து படைவீரர்கள் கொண்ட பிரிவுக்கு ‘பட்டி’ என்று பெயர்.

* 3 பட்டிகள் - 1 சேனாமுகம்

* 3 சேனாமுகம் - 1 குல்மா

* 3 குல்மா - 1 கனம்

* 3 கனம் - 1 வாகினி

* 3 வாகினி - 1 பிரிதனா

* 3 பிரிதனா - 1 சம்மு

* 3 சம்மு - 1 அனிகினி

* 10 அனிகினி - 1 அக்ரோணி

அக்ரோணி என்பது

21,870 தேர்கள் - தேரோட்டிகள்

21,870 யானைகள்- யானை வீரர்கள்

65,610 குதிரைகள் - குதிரை வீரர்கள்

1,09,350 காலாட்படை வீரர்கள்

போரிட்டமொத்த படைகள்

குருச்சேத்திரப் போரில் மொத்தம் 18 அக்ரோணி படைகள் போரிட்டன. இதில் கவுரவர்கள் சார்பில் 11 அக்ரோணி படைகளும், பாண்டவர்கள் சார்பில் 7 அக்ரோணி படைகளும் பங்கேற்றன.

போரில்பிழைத்தவர்கள்

மொத்தமாக 40 லட்சம் பேர் இந்தப் போரில் பங்கேற்றனர். கவுரவர்கள் தரப்பில் கிருபர், அசுவத்தாமன், கிருதவர்மன், கர்ணனின் மகன் விருச்சகேது ஆகியோரும், பாண்டவர்கள் தரப்பில் ஐந்து பாண்டவர்கள், கிருஷ்ணர், சாத்யகி, யுயுத்சு ஆகிய 8 பேரும் மட்டுமே எஞ்சியிருந்தனர்.

Next Story