சைவ சித்தாந்தத்தை வளர்த்த ‘சந்தான குரவர்கள்’


சைவ சித்தாந்தத்தை வளர்த்த ‘சந்தான குரவர்கள்’
x
தினத்தந்தி 8 Jun 2021 1:04 PM GMT (Updated: 8 Jun 2021 1:04 PM GMT)

அகச் சந்தான குரவர்களில் ஒருவராகிய பரஞ்சோதியாரின் சீடராகிய மெய்கண்ட தேவர், அருணந்தி சிவாச்சாரியார், மறைஞானசம்பந்தர், உமாபதி சிவாச்சாரியர் ஆகிய நால்வரும் ‘புறச் சந்தான குரவர்கள்’ ஆவர்.

உமாபதி சிவாச்சாரியார்
சிவபெருமானை ஆதிக்கடவுளாகக் கொண்ட சைவ சமயத் தின் அன்பு நெறியையும், பக்தி நெறியையும் வளர்த்தவர்களில் முக்கியமானவர்கள் நாயன்மார்கள். அதே போல் அறிவு நெறியை வளர்த்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள், ‘சந்தானச்சாரியார்கள்’ என்று அழைக்கப்படும் ‘சந்தான குரவர்கள்’. இவர்கள் இரண்டு வகையாக பிரிக்கப்பட்டுள்ளனர். அதாவது ‘அகச் சந்தான குரவர்கள்’, ‘புறச் சந்தான குரவர்கள்’. திருநந்தி தேவர், சனத்குமாரர், சத்தியஞான தரிசினிகள், பரஞ்சோதியார் ஆகிய நால்வரும் ‘அகச் சந்தான குரவர்கள்’ ஆவர். இவர்கள் நான்கு பேரும் திருகயிலாயத்துடன் நேரடித் 
தொடர்பில் உள்ளதால், இவர்களை ‘அகச் சந்தான குரவர்கள்’ என்று அழைக்கின்றனர். திருக்கயிலாய பரம்பரை என்பது திருநந்தி தேவரை குருவாக கொண்டு தொடங்கப்பட்டது. அகச் சந்தான குரவர்களில் ஒருவராகிய பரஞ்சோதியாரின் சீடராகிய மெய்கண்ட தேவர், அருணந்தி சிவாச்சாரியார், மறைஞானசம்பந்தர், உமாபதி சிவாச்சாரியர் ஆகிய நால்வரும் ‘புறச் சந்தான குரவர்கள்’ ஆவர். நாம் இந்த புறச் சந்தான குரவர் களைப் பற்றி சிறிய குறிப்பாக பார்க்கலாம்.

மெய்கண்ட தேவர்
சுவேதனப்பெருமான் என்ற இயற்பெயரைக் கொண்டவர், மெய்கண்டார். இவர் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள பென்னாகடத்தில் வசித்து வந்த அச்சுத களப்பாளர் என்னும் சிவ பக்தருக்கு, இறையருளால் மகனாகப் பிறந்தார். இவர் 2 வயதாக இருக்கும் போது, திருவெண்ணெய்நல்லூரில் இருந்த தனது உறவினர் வீட்டின் முன்பாக விளை யாடிக்கொண்டிருந்தார். அப்போது 
அகத்தியரைக் காணும் பொருட்டு, பொதிகை மலை நோக்கி ஆகாய மார்க்கமாக சென்று கொண்டிருந்தார், அகச் சந்தான குரவர்களில் ஒருவரான பரஞ்சோதி முனிவர். திருவெண்ணெய்நல்லூர் அருகே வந்தபோது, பூமியில் குழந்தை ஒன்று, பக்குவ நிலையில் இருப்பதைக் கண்டு தரைஇறங்கினார். அந்தக் குழந்தைக்கு, சிவஞான போதத்தை உபதேசித்தார். மேலும் தன்னுடைய குருவான சத்தியஞான தரிசினியின் பெயரை, தமிழில் மொழிபெயர்த்து ‘மெய்கண்டார்’ என்று சூட்டினார். சந்தான குரவர்களில், முதன்மையான வராக போற்றப்படுபவர், இந்த மெய்கண்டார். திருக்கயிலாய பரம்பரை என்று 
அழைக்கப்படும், 18 சைவ ஆதீனங்கள் தோன்ற, இவரே காரண கர்த்தாவாக இருந்தார். தன்னுடைய குருவிடம் பெற்ற உபதேசத்தை ‘சிவஞான போதம்’ என்ற நூலாக இயற்றினார். இந்த நூலை தன்னுடைய சீடர்களுக்கும் உபதேசம் செய்து வந்தார், மெய்கண்டார். அவரிடம் 49 பேர், சீடராக இருந்து உபதேசம் பெற்று வந்தனர். அவர்களில் தலைமை சீடராக இருந்தவர் அருணந்தி சிவாச்சாரியார் ஆவார். ஒரு ஐப்பசி மாத சுவாதி நட்சத்திர நாளில், திருவெண்ணெய்நல்லூரில் மெய்கண்டார் முக்தி அடைந்தார். அங்கு அவருக்கு திருக்கோவில் அமைந்துள்ளது.

அருணந்தி சிவாச்சாரியார்
இவரது இயற்பெயர் தெரியவில்லை என்றாலும், இவரை அனைவரும் ‘சகலாகம பண்டிதர்’ என்று அழைத்துவந்தனர். இவர் சகல ஆகமங்களிலும் வல்லவராய் திகழ்ந்ததால் இப்பெயர் பெற்றார். திருத்துறையூரில் அவதரித்த இவர்தான், அச்சுத களப்பாளரின் வம்சாவளிக்கு குலகுருவாக இருந் தவர். அந்த அடிப்படையில் மெய்கண்டாருக்கு இவரே குல குரு. ஆனால் பரஞ்சோதியாரிடம் பெற்ற ஞானத்தின் பயனாக, மெய்கண்டார் சிறந்த ஞானியாகி அனைவருக்கும் சிவஞான போதனைகளை எடுத்துரைத்து வந்தார். இதுபற்றி அறிந்த சகலாகம பண்டிதர், சின்னஞ்சிறுவனான மெய்கண்டாரின் மீது பொறாமை கொண்டார். மேலும் தன்னுடைய வழிகாட்டுதலில் பிறந்த பிள்ளை, தன்னை வந்து சந்திக்காததை நினைத்து கோபம் கொண்டார். இதனால் தன்னுடைய சீடர்களில் ஒவ்வொருவராக அனுப்பி, திருவெண்ணெய்நல்லூரில் நடப்பதை அறிந்துவரச் செய்தார். ஆனால் சென்றவர்கள் யாருமே திரும்பிவரவில்லை. காரணம், அவர்கள் அனைவருமே மெய்கண்டாரின் உபதேசத்தில் மயங்கி, அவரிடமே சீடராக சேர்ந்துவிட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த சகலாகம பண்டிதர், தானே நேரடியாக சென்று மெண்கண்டாரை சந்தித்தார். அவர் வந்த நேரத்தில் தன்னுடைய சீடர்களுக்கு ஆணவம் (அறியாமை) பற்றி உபதேசம் செய்து கொண்டிருந்தார், மெய்கண்டார். அதை நிதானத்துடன் கேட்ட சகலாகம பண்டிதர், “ஆணவத்துக்கு ஒரு வடிவை காட்ட இயலுமா?” என்று கேட்டார். அதற்கு மெய்கண்டார், “28 ஆகமங்களும் கற்றுதேர்ந்தும், ஆணவத்திற்கு வடிவம் இல்லை என்ற உண்மையை உணராத நீங்கள்தான் ஆணவத்தின் வடிவம்” என்று பதிலுரைத்தார். மேலும் அவரை தலை முதல் கால் வரை பார்த்தார். அந்த ஞானப் பார்வையில், சகலாகம பண்டிதரின் அறியாமை நீங்கியது. ‘இவரே என்னை ஆட்கொள்ள வந்த குரு’ என்று உணர்ந்த சகலாகம பண்டிதர், மெய்கண்டாரின் பாதம் பணிந்து தம்மை 
சீடராக ஏற்கும்படி வேண்டினார். மெய்கண்டாரும், சகலாகம பண்டிதருக்கு திருநீறு இட்டு, ‘அருள்நந்தி சிவம்’ என்னும் பெயரிட்டு தன்னுடைய தலைமைச் சீடராக ஏற்றுக்கொண்டார். இந்த ‘அருள்நந்தி சிவம்’ என்பதே ‘அருணந்தி சிவாச்சாரியார்’ என்றானது. அருணந்தி சிவாச்சாரியார் அருளிய இரண்டு நூல்களில் சிறந்ததாக அறியப்படுவது, ‘சிவஞான சித்தியார்’. இந்த மகான், புரட்டாசி மாதம் பூரம் நட்சத்திர நாளில் முக்தி அடைந்தார். இவருக்கு திருத்துறையூரில் திருக்கோவில் இருக்கிறது.

மறைஞான சம்பந்தர்
அருணந்தி சிவாச்சாரியாரிடம் சீடராக இருந்தவர், மறைஞானசம்பந்தர். இவர் வெள்ளாற்றின் கரையோரம் உள்ள பெண்ணாகரத்தில் அவதரித்தார். ‘சிவதர்மம்’ என்னும் ஆகமத்தின் உத்தரபாகத்தை, தமிழில் மொழி பெயர்த்தார். ஒருமுறை சிதம்பரம் நடராஜர் கோவிலில் அர்ச்சகராக இருந்த உமாபதி சிவம் என்பவர், பூஜைகளை முடித்துக் கொண்டு, மேளதாளத்துடன் வீட்டுக்கு பல்லக்கில் சென்று கொண்டிருந்தார். (அந்த காலத்தில் கோவிலில் பணிபுரியும் அர்ச்சகர்களை, பல்லக்கில் அழைத்துச் சென்று வீட்டில் விடுவது வழக்கம். அப்போது பகலாக இருந்தாலும் கூட பல்லக்கின் முன்னும், பின்னுமாக தீவட்டி ஏந்திச் செல்வார்கள்). அப்போது வழியில் ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்திருந்தார், மறைஞானசம்பந்தர். அவர் இந்த பல்லக்கு காட்சியைப் பார்த்து விட்டு, “பட்ட மரத்தில் பகல் குருடு போகுது பார்” என்று உமாபதி சிவம் காதில் விழும்படி உரக்கச் சொன்னார். கற்பூரத்தின் அருகில் நெருப்பைக் கொண்டு சென்றாலே பற்றிக்கொள்வது போல, மறைஞானசம்பந்தரின் அந்த வார்த்தை உமாபதி சிவத்தின் மனதில் ஞான அக்கினியை பற்றவைத்தவிட்டது. உடனடியாக பல்லக்கில் இருந்து இறங்கியவர், மறைஞானசம்பந்தரின் பாதம் பணிந்து தன்னை சீடரான ஏற்கும்படி வேண்டினார். ஆனால் ஒரு வார்த்தை கூட பேசாமல் அங்கிருந்து எழுந்து நடக்கத் தொடங்கினார், மறைஞானசம்பந்தர். உமாபதி சிவமும் விடுவதாக இல்லை, அவரைப் பின்தொடர்ந்து சென்றார். ஒரு வீட்டின் முன்பாக நின்ற மறைஞானசம்பந்தருக்கு, அந்த வீட்டில் இருந்து வெளிப்பட்ட ஒருவர், கூழை அவரது கைகளில் பிச்சையாக வார்த்தார். அதை ‘சிவ பிரசாதம்’ என்று சொல்லியபடியே அருந்தினார், மறைஞானசம்பந்தர். அப்போது அவரது கையிடுக்கு வழியாக கூழ் வழியத் தொடங்கியது. அதை தன்னுடைய கையில் ஏந்திய உமாபதி சிவம், ‘குரு பிரசாதம்’ என்று சொல்லியபடி அதை குடித்தார். அது முதல் அவர், மறைஞானசம்பந்தரின் சீடரானார்.

உமாபதி சிவாச்சாரியார்
சைவ சித்தாந்த நூலாசிரியர்களுள் இவர் சிறப்புக்குரியவா். நாயன்மார்களுக்குப் பின், சைவ சித்தாந்தக் கோட்பாடுகளை பரப்பியவர்களுள் முக்கியமானவர். இவர் சிதம்பரத்தில் தில்லைவாழ் அந்தணர் மரபில் தோன்றியவர். மறைஞான சம்பந்தரைக் குருவாகக் கொண்டு அவரிடம் சைவ நூல்களைப் பயின்றவர். சிவப்பிரகாசம், திருவருட் பயன், வினா வெண்பா, போற்றிப் பஃறொடை, கொடிக்கவி, நெஞ்சுவிடுதூது, உண்மை நெறி விளக்கம், சங்கற்ப நிராகரணம் என்னும் எட்டு நூல்கள் இவரால் இயற்றப்பட்டவை. மேலும் சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணத்தை சுருக்கி, ‘திருத்தொண்டர் புராண சாரம்’ என்ற பெயரிலும், சேக்கிழாரின் வரலாற்றை ‘சேக்கிழார் புராணம்’ என்ற பெயரிலும் எழுதினார். சிதம்பரம் கோவிலின் வரலாற்றை ‘கோயிற் புராணம்’ என்னும் பெயரில் 100 பாடல்களாக பாடினார். 

திருமுறை கண்ட புராணம், திருப்பதிக் கோவை போன்ற பிரபந்தங்களும் இவரால் இயற்றப்பட்டவைதான். சிதம்பரம் கோவிலில் பூஜை செய்யும் உரிமை கொண்டவர்களில் ஒருவர் உமாபதி சிவாச்சாரியார். அவர், தீட்சிதர் அல்லாதவரை குருவாக ஏற்றதால், அவருக்கு கோவிலில் பூஜை செய்யும் உரிமை மறுக்கப்பட்டது. அவரை தங்கள் சமுதாயத்தில் இருந்தும் நீக்கிவைத்தனர். இதனால் உமாபதி சிவம், சிதம்பரத்தை விட்டு வேறு இடத்தில் வாழ்ந்தார். இந்த நிலையில் சிதம்பரம் கோவிலில் கொடியேற்றுவதற்கென உமாபதி சிவத்திற்குரிய முறை வந்தது. ஆனால் அங்கிருந்தவர்கள், வேறு 
ஒருவரிடம் கொடியேற்றும் பொறுப்பை அளித்தனர். ஆனால் அவர் ஏற்றும்போது கொடி ஏறவில்லை. பலர் முயற்சித்தும் பலனில்லை. சிவபெருமானின் திருவருளை உணர்ந்த தீட்சிதர்கள், உமாபதி சிவத்தை அழைத்து கொடியேற்றச் சொன்னார்கள். அவர் நான்கு பதிகங்களைக் பாடி கொடியை ஏற்றிவைத்தார். இந்த பாடல்களே ‘கொடிக்கவி’ என்ற பெயரில் அழைக்கப் படுகிறது.

Next Story