ஐஸ்வரியங்களை அள்ளித்தரும் ஸ்ரீலலிதாம்பாள்


ஐஸ்வரியங்களை அள்ளித்தரும் ஸ்ரீலலிதாம்பாள்
x
தினத்தந்தி 8 Jun 2021 1:11 PM GMT (Updated: 8 Jun 2021 1:11 PM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது ‘திருமீயச்சூர்’ திருத்தலம். இங்கு ‘ஸ்ரீலலிதாம்பாள்’ என்ற திருநாமத்துடன் அம்பாள் வீற்றிருக்கும் ஆலயம் இருக்கிறது.

இந்த ஆலயத்திற்கு ஏராளமான பெருமைகள் உள்ளன. ‘சனீஸ்வரன், எமதர்மன், சூரியனின் தேரோட்டியான அருணன், கருடன், வாலி, சுக்ரீவன்’ ஆகிய 6 பேரும் அவதரித்த தலமாக இது போற்றப்படுகிறது. தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், திருமீயச்சூர் திருத்தலத்திற்கு வந்து வழிபாடு செய்து செல்பவர்களின் எண்ணிக்கை ஏராளம். அதற்கு ஒரே 
காரணம், லலிதாம்பாள் தான். உலகில் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு, ‘ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம்’ பாராயணம் செய்து, இந்த அன்னையை வேண்டிக்கொள்பவர்கள் மிக அதிகம். அந்த பாடலை பாராயணம் செய்தாலே நம்முடைய மனதில் உள்ள பாரங்களும், செய்த பாவங்களும் நீங்கிவிடும். அதுவே அன்னையை நேரில் சென்று வணங்கி வந்தால், அதன் பலன் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை எண்ணிப்பாருங்கள். சிறப்புமிக்க சக்திகொண்ட ‘ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம்’ உருவான தலமாகவும் திருமீயச்சூர் திகழ்கிறது.

ஒரு முறை பண்டாசுரன் என்னும் அரக்கனால், தேவர்களுக்கும், முனிவர்களும், உலக உயிர்களுக்கும் துன்பம் விளைந்தது. இதனால் அனைவரும் சிவபெருமானை சரணடைந்தனர். அவரோ அந்த அரக்கனை அழிக்க, பார்வதியை ‘ஸ்ரீலலிதை’ என்ற நாமத்துடன் அவதரிக்கச் செய்தார். கடும் உக்கிரத்துடன் தோன்றிய அந்த அன்னை, நீண்ட காலம் போராடி அந்த அரக்கனை அழித்தாள். அவனை அழித்த பிறகும், அன்னையின் உக்கிரம் குறையவில்லை. இந்த உக்கிரத்தை பூமி தாங்காது என்பதால் அனைவரும் மீண்டும் ஈசனை தஞ்சமடைந்தனர். அவர், ஸ்ரீலலிதையிடம் “நீ சென்று, ஸ்ரீபுரம் என்ற இடத்தில் தவம் செய்து வா.. உனது உக்கிரம் தணியும்” என்றார். அதன்படி ஸ்ரீலலிதை ஸ்ரீபுரத்துக்கு வந்தாள். அங்கே கடும் தவம் புரிந்தாள். அப்போது அன்னையின் உள்ளிருந்து எட்டு பேர் வெளிப்பட்டனர். அவர்கள் ஸ்ரீலலிதையை சுற்றி நின்று கொண்டு, அவளது கண்கள், கன்னம், நெற்றி, பாதம், கூந்தல் என்று அவளது அழகை புகழ்ந்து பாடினர். “அடடா.. என் கண்கள் இத்தனை அழகா? 
பிறகு ஏன் இவ்வளவு கொடூரமாக பார்க்க வேண்டும்?” என்றாள் ஒருத்தி. மற்றொருத்தியோ, “என் கன்னமும், நெற்றியும் அழகு பொருந்தியவையா? பின் எதற்காக முகத்தை உக்கிரமாக வைத்திருக்கவேண்டும்?” என்றாள். அடுத்து ஒருத்தி, “என் கரிய கூந்தலின் நீளம்தான் எத்தகையது. இதை இப்படி தலைவிரிக் கோலமாகவா வைத்திருப்பது?” என்றாள். இப்படி எட்டு பேரும் ஸ்ரீலலிதை அன்னையின் அழகை பாராட்டிப் புகழ்ந்தனர். இதனால் அன்னையின் உக்கிரம் தணிந்து, அவள் சாந்தமாக மாறிப்போனாள். பின்னர் அந்த திருத்தலத்திலேயே தேவி கோவில் கொண்டாள். அங்கு வரும் 
அன்பர்களுக்கு தன்னுடைய அருளை அள்ளி வழங்குகிறாள். உலகின் எந்த மூலையில் இருந்து கொண்டு, லலிதா சகஸ்ரநாமத்தை எவர் பாடினாலும், அவர் களது சகல தோஷங்களையும் போக்கி, சகல ஐஸ்வரியங் களைத் தந்து மகிழ்பவளாக இந்த அன்னை திகழ்கிறாள். இந்த ஆலயத்தில் ஸ்ரீசதாசிவ லிங்க பீடத்தில், ஸ்ரீசக்கரத்தின் மீது நின்ற திருக்கோலத்தில் வீற்றிருந்தபடி அன்னை இந்த உலகத்தை ஆட்சி செய்கிறாள். விஜயதசமி, மாசி மாதத்தில் வரும் அஷ்டமி தினம், வைகாசி மாதத்தில் வரும் பவுர்ணமி ஆகிய மூன்று தினங்கள், இந்த அன்னைக்கு அன்னப் பாவாடை சாத்தும் வைபவம் நிகழ்கிறது. இதைக்காண்பவர்களுக்கு வாழ்வில் எந்த துன்பமும் நிகழாது என்பது நம்பிக்கை.

திருவாரூரில் இருந்து சுமார் 26 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, திருமீயச்சூர் திருத்தலம்.

Next Story