மனம் மாறுவோம்... நற்செயல்கள் செய்வோம்...


மனம் மாறுவோம்... நற்செயல்கள் செய்வோம்...
x
தினத்தந்தி 21 Jun 2021 6:14 PM GMT (Updated: 21 Jun 2021 6:14 PM GMT)

யோவானின் சீடரும், பரிசேயரும், மறைநூல் அறிஞரும் இயேசுவை நோக்கி, “யோவானுடைய சீடர்கள் அடிக்கடி நோன்பிருந்து மன்றாடி வருகிறார்கள்.

அந்நாட்களில்... யோவானுடைய சீடரும் பரிசேயரும் நோன்பைக் கடைப்பிடிப்பதில் உறுதியுடன் செயல்பட்டார்கள். எனவே, யோவானின் சீடரும், பரிசேயரும், மறைநூல் அறிஞரும் இயேசுவை நோக்கி, “யோவானுடைய சீடர்கள் அடிக்கடி நோன்பிருந்து மன்றாடி வருகிறார்கள். பரிசேயர்களின் சீடரும் அவ்வாறே செய்கின்றனர். உம்முடைய சீடரோ உண்பதும் குடிப்பதுமாக இருக்கின்றனரே, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை?” என்றார்கள். அதற்கு இயேசு அவர்களை நோக்கி, “மணமகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா? மணமகன் அவர்களோடு இருக்கும் காலமெல்லாம் அவர்கள் நோன்பிருக்க முடியாது. ஆனால் மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்’’ என்றார். இதன் மூலம் தன்னுடைய விண்ணேற்றத்திற்கு பிறகு, தன்னுடைய சீடர்களும், மக்களும் நோன்பிருப்பதை முன்கூட்டியே அறிவித்தார்.

மேலும் அவர் அவர்களுக்கு ஓர் உவமையையும் கூறினார், “எவரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப் போடுவதில்லை. ஏனெனில் அவ்வாறு ஒட்டுப்போட்டால், அந்த ஒட்டு பழைய ஆடையைக் கிழித்துவிடும். கிழிசலும் பெரிதாகும். புதிய துண்டு பழையதோடு பொருந்தாது. அதுபோலப் பழைய தோற்பையில், எவரும் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை. ஊற்றிவைத்தால் புதிய மது தோற்பையை வெடிக்கச் செய்யும், மதுவும் சிந்திப்போகும், தோற்பையும் பாழாகும். புதிய மதுவைப் புதிய தோற்பைகளில்தான் ஊற்றி வைக்க வேண்டும். அப்போது இரண்டும் வீணாய்ப் போகாது. மேலும் பழைய திராட்சை மதுவைக் குடித்தவர் எவரும் புதியதை விரும்பமாட்டார் ஏனெனில் ‘பழையதே நல்லது’ என்பது அவர்கள் கருத்து” என்றார்.

இயேசுவின் காலத்தில் நற்செய்தியைக் கேட்டும் பரிசேயர்கள் மனம் மாறவிரும்பவில்லை. திருச்சட்டத்தின் சடங்குகளைக் கைக்கொண்டு, பழைய ஆடையாகவும் பழைய தோற்பைகளாகவும் இருக்கவே விரும்பினார்கள் . “அவர்கள் நம்பிக்கையை அடிப்படையாகக் கொள்ளாமல் திருச்சட்டத்தின் செயல்களின் அடிப்படையில் முயற்சி செய்தார்கள். எனவே, தடைக்கல்லின் மேல் தடுக்கி விழுந்தார்கள்’’, என்று திருத்தூதர் பவுல் குறிப்பிடுகிறார்.

இக்காலத்தில் நாமும்கூட பரிசேயரைப்போல் பழையதே நல்லது என்று எண்ணுகிறோம். நாம் பழைய ஆடையாகவும், பழைய தோற்பையாகவும் இருக்கிறோம். நம்மில் பலர் இயேசுவின் நற்செய்தியைக் கேட்டாலும் அதை கைக்கொள்ள விரும்புவதில்லை. ஏனெனில், அது நம்மை கிழித்துவிடுகிறது. நம் தவறுகளை அறியவோ, மனம் மாறவோ, இயேசுவின் கட்டளைகளைக் கைக்கொள்ளவோ நாம் விரும்புவதில்லை. நாம் வெளிவேடக்காரராக வாழ்கிறோம். இயேசுவைத் துதிக்கிறோம். இறைவழிபாட்டின் சடங்குகளை நிறைவேற்றுகிறோம்.

வெளிவேடக்காரராக வாழ்வதை நாம் அறியவேண்டும். மனம் மாறி, நற்செய்தியைக் கைக்கொண்டு, புதிய உடன்படிக்கையின் புதிய மனிதராக வாழ நாம் முயற்சி மேற்கொள்ளவேண்டும். அப்போதுதான் இயேசுவின் மணவிருந்தில் நாம் கலந்துகொள்ள முடியும். நாம் புதிய தோற்பையாக இருக்கிறோமா?

Next Story