வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்


வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்
x
தினத்தந்தி 21 Jun 2021 6:59 PM GMT (Updated: 2021-06-22T00:29:56+05:30)

மனித சமூகம் நல்லொழுக்கங்களுடன் வாழ, ஒழுக்கம் சார்ந்த அம்சங்களை இஸ்லாம் போதனை செய்யத் தவறியதில்லை.

ஒரு மனிதன் நன்நடத்தைகளுக்குச் சொந்தமானவன் என்பதற்குப் பல பண்புகள் சான்று வழங்கினாலும், அனைத்திற்கும் முதன்மையானது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாகும். ‘கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றா மனிதன் நிறை மனிதனல்ல’ என்கிறது இஸ்லாம்.

வாக்குறுதிகளை முழுமைப்படுத்துவதே இறை நம்பிக்கையாளரின் அடையாளங்களில் ஒன்றாக முன்வைத்து அதனை முழுமைப்படுத்துவதை ஆணையிடுகிறது திருக்குர்ஆன்.

முஃமின்களே! (நீங்கள் செய்து கொண்ட) உடன்படிக்கைகளை (முழுமையாக) நிறைவேற்றுங்கள். (திருக்குர்ஆன் 5:1)

படாடோபத்திற்குப் போகிற போக்கில் வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு அதனை அலட்சியம் செய்வது இறை நம்பிக்கைக்குச் சேதம் ஏற்படுத்தும் செயலாக பார்க்கிறது இஸ்லாம்.

“எவரிடம் நம்பி ஒப்படைக்கப்பட்டதை நிறைவேற்றும் தன்மை இல்லையோ, அவரிடம் இறை நம்பிக்கை இல்லை. எவரிடம் கொடுத்த வாக்கை நிறைவேற்றும் தன்மை இல்லையோ அவரிடம் இஸ்லாம் மார்க்கம் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: அஹ்மது)

கொடுத்த வாக்குறுதிகளை மீறுவது நயவஞ்சகனின் குணங்களில் ஒன்றாக நபிமொழி சுட்டிக் காட்டுகின்றது. நயவஞ்சகனின் அடையாளம் மூன்றாகும். 1) பேசினால் பொய்யுரைப்பான். 2) வாக்களித்தால் மாறு செய்வான் 3) நம்பினால் மோசடி செய்வான். (நபி மொழி)

நம்பிக்கையின் மறு பிரதிபலிப்பே வாக்குறுதிகளாகும். அதனை நிறைவேற்றாமல் கடந்து செல்வது மனிதனுக்குச் செய்ய வேண்டிய உரிமைகளை மீறுவதாகும். நாளை மறுமையில் இதற்கான கேள்விகளுக்குப் பதில் கூறும் சங்கட நிலை ஏற்படும். வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பதும் அநியாயம் என்கிறது இஸ்லாம்.

தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் இவைகளை முறையாகச் செய்துவந்து, ஆனால் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினால், செய்த நற்செயல்கள் அனைத்தும் வீணாகிவிடும்.

நம்மால் செய்ய இயலும் காரியங்களை மட்டும் வாக்குறுதிகளாகக் கூறக் குர்ஆன் வலியுறுத்துகிறது. செய்ய இயலா ஒன்றைப் பெருமைக்காகப் பேசிவிட்டுச் செல்வது அல்லாஹ்வை கோபமடையச் செய்யும் செயலாக குர்ஆன் கண்டிக்கின்றது.

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்?. நீங்கள் செய்யாததை நீங்கள் கூறுவது அல்லாஹ்விடம் பெரிதும் வெறுப்புடையதாக இருக்கிறது. (திருக்குர்ஆன் 61:2-3)

வாக்குறுதிகளை நிறை‌வேற்றுவது இறைவனின் பண்பாகும். மற்றும் அவனது தூதுவர்களின் பண்புகளில் ஒன்றாகும். இஸ்மாயீல் (அலை) அவர்களின் நற்பண்புகள் குறித்து இறைவன் பேசுகையில் ‘அவர் வாக்கை காப்பாற்றுபவர்’ என்றும் குறிப்பிடுகின்றான்.

‘(நபியே) இஸ்மாயீலைப் பற்றியும் இவ்வேதத்தில் (உள்ளதைக்) குறிப்பிடுவீராக. திண்ணமாக, அவர் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுபவராகவும், தூதராகவும், நபியாகவும் இருந்தார்’. (திருக்குர்ஆன் 19:54)

வாக்குறுதிகளை நிறைவேற்றுதல் மற்றவர்களுக்கு நம்மைப் பண்பாளர் என்பதை அறிமுகம் செய்கிறது. இதனை கவனித்து வாக்குறுதிகளை நிறைவேற்றும் பண்புகளை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதே இஸ்லாம் விரும்பும் அறங்களில் ஒன்றாகும்.

Next Story