ஆன்மிகம்

அங்க குறைபாடுகளை நீக்கும் அஷ்ட லிங்கங்கள் + "||" + Eliminate organ defects Ashta Lingas

அங்க குறைபாடுகளை நீக்கும் அஷ்ட லிங்கங்கள்

அங்க குறைபாடுகளை நீக்கும் அஷ்ட லிங்கங்கள்
திவ்ய தேசங்களான புள்ளபூதங்குடி மற்றும் ஆதனூர் ஆகிய இரண்டு வைணவத் தலங்களுக்கு இடையே இந்த திருத்தலம் அமைந்திருக்கிறது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை அடுத்து அமைந்துள்ளது சுவாமிமலை திருத்தலம். இங்கிருந்து திருவைகாவூர் செல்லும் சாலையில் சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது, கூனஞ்சேரி திருத்தலம். இது மிகவும் சிறப்பு மிக்க சிவாலயத் தலமாகும். திவ்ய தேசங்களான புள்ளபூதங்குடி மற்றும் ஆதனூர் ஆகிய இரண்டு வைணவத் தலங்களுக்கு இடையே இந்த திருத்தலம் அமைந்திருக்கிறது. கூனஞ்சேரியில், பார்வதி உடனாய கயிலாசநாதர் திருக்கோவில் அமைந்திருக்கிறது.

தல வரலாறு

முன் காலத்தில் தானவ மகரிஷி என்பவர், தண்ட காருண்ய வனத்தில் தனது மனைவியுடன் இல்லற தர்மத்தில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு நீண்ட நாட்களாக புத்திரப் பேறு இல்லை. இதனால் அந்த தம்பதியர் சிவபெருமானை வேண்டிவந்தனர். இதை அடுத்து தானவ மகரிஷி கனவில் தோன்றிய ஈசன், “ஏழைச் சிறுவர்களுக்கு வேத ஆகமங்களைப் போதித்து வந்தால், விரைவில் புத்திரன் பிறப்பான்” என்று அருள்வாக்கு கூறினார். அதன்படியே ஏழைச் சிறுவர்களுக்கு, வேதங்களை போதித்து வந்தார், தானவ மகரிஷி. இதன் பலனாக தானவ மகரிஷியின் மனைவி சில காலத்திலேயே கருத்தரித்தாள்.

தானவ மகரிஷி மனைவி கர்ப்பவதியாக இருந்த காலத்தில் ஒரு நாள், தானவ மகரிஷி தன்னுடைய மாணவர்களுக்கு வேதங்களைக் கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு மாணவன் அயர்ந்து தூங்கிவிட்டான். அதைக் கண்ட மகரிஷி, அந்த மாணவனை எழுப்பி திட்டினார். அப்போது அவரது அருகில் நின்ற மனைவியின் வயிற்றில் இருந்த கரு விழித்துக் கொண்டது. அது, “தகப்பனாரே.. இரவு, பகலும் ஓய்வின்றி பிள்ளைகளுக்குப் பாடம் போதித்து வந்தால் பிள்ளைகள் தூங்கத்தானே செய்வார்கள்? வேதம் போதிக்கும் குருவான உங்களுக்கு இதுகூடவா தெரியவில்லை?” என்றது.

தன்னை எதிர்த்துப் பேசுவது தன் வாரிசு என்றும் பார்க்காமல், “நீ பிறப்பதற்கு முன்பே அதிகப் பிரசங்கித்தனமாக கேள்வி கேட்கிறாயா? வளைந்த கேள்விக்குறி போலவே, நீ அஷ்டகோணலாகப் பிறக்கக் கடவாய்” என்று சாபம் கொடுத்தார். இதனால் அந்தக் குழந்தைப் பிறந்தபோது, அஷ்ட கோணலாக பிறந்தது. உடலில் எட்டு வளைவுகளுடன் பிறந்ததால், அந்தக் குழந்தை ‘அஷ்ட வக்கிரன்’ என்றே அழைக்கப்பட்டது.

அஷ்ட வக்கிரரின் பிறப்புக்கு இன்னொரு கதையும் சொல்வார்கள். அதாவது ஈசனின் அருளால் கருவானவர் என்பதால், தானவ மகரிஷியின் குழந்தை கருவிலேயே நல்ல ஞானம் பெற்றிருந்தது. தானவ மகரிஷி வேத அறிவில் அவ்வளவு சிறந்தவரல்லர். அதனால் அவர் தன்னுடைய குரு உபதேசித்த மந்திரங்களை, தப்பும் தவறுமாக தனிமையில் அமர்ந்து சொல்வார். இதை தாயின் கருவில் இருந்து கேட்கும் குழந்தை, தன்னுடைய உடலை அஷ்ட கோணலாக மாற்றிக்கொண்டதாகவும், அப்படியே பிறந்ததாகவும் ஒரு கதை உண்டு.

அஷ்டவக்கிரர் தன்னுடைய புலமையின் காரணமாக, ஜனக மகாராஜாவின் அரண்மனையில் ஆஸ்தான பண்டிதராக இருந்தவரை வாக்குவாதத்தில் வென்று பெரும் புகழை அடைந்தவர். இவர் தன்னுடைய உடலில் அஷ்ட கோணல்களும் நீங்கப்பெற்ற திருத்தலமாக கூனஞ்சேரி திகழ்கிறது. இங்கு அவர் எட்டு பைரவ லிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டதன் பலனாக தன்னுடைய அங்க குறைபாடுகள் நீங்கப்பெற்றார். இதனால் இந்த ஊர், ‘கூன் நிமிர்ந்தபுரம்’ என்று ஆரம்ப காலத்தில் அழைக்கப்பட்டு, பின்னர் ‘கூனஞ்சேரி’ என்று மாறியிருக்கிறது.

இந்தக் கோவிலில் சிவபெருமான், ‘கயிலாசநாதர்’ என்ற பெயரில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அம்பாளின் திருநாமம் ‘பார்வதி’ என்பதாகும். ஆலயத்தின் வெளிப்பிரகாரத்தில் அஷ்டவக்கிரர் வழிபட்ட எட்டு லிங்கங்கள் உள்ளன. அதன் அருகில் ஜடாமகுட சவுந்தர்ய நாயகி என்று அழைக்கப்படும் அம்மன் சன்னிதியும் இருக்கிறது.

கோவிலின் வடக்கு பிரகாரத்தில், கிழக்கு நோக்கியபடி பைரவ மூர்த்தியின் பார்வையுடன் இந்த எட்டு சிவலிங்கங்களும் அஷ்ட வக்கிரரால் நிறுவப்பட்டுள்ளன. இவை பஞ்ச பூதங்கள் மற்றும் சூரிய, சந்திரன், ஆன்மா ஆகியவற்றை குறிப்பதாக உள்ளன. பிருத்வி லிங்கம், அப்பு லிங்கம், அக்னி லிங்கம், வாயு லிங்கம், ஆகாச லிங்கம், சூரிய லிங்கம், சந்திர லிங்கம், ஆத்ம லிங்கம் ஆகியவையே அந்த அஷ்ட லிங்கங்கள்.

உடல் ஊனமுற்றவர்கள், வாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபாடு செய்தால், அங்க குறைபாடுகள் நீங்குவதாக நம்பிக்கை. தொடர்ந்து 11 அஷ்டமி தினங்களில் இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். முதல் அஷ்டமியன்று, கோவிலில் உள்ள விநாயகருக்கு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். 2-வது அஷ்டமி அன்று, கயிலாசநாதரையும், 3-வது அஷ்டமி முதல் தொடர்ந்து எட்டு அஷ்டமிகள் அஷ்ட லிங்கங்களையும், இறுதியாக 11 அஷ்டமி அன்று பார்வதி தேவியையும் வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமாக அங்க குறைபாடுகள் நீங்கும் என்கிறார்கள்.