பிரச்சினையை கடக்க உதவும் ‘புன்னகை’


பிரச்சினையை கடக்க உதவும் ‘புன்னகை’
x
தினத்தந்தி 22 Jun 2021 12:06 AM GMT (Updated: 22 Jun 2021 12:06 AM GMT)

என்னதான் பாடுபட்டு உழைத்தாலும், வாழ்வில் மகிழ்ச்சி என்பதே இல்லாததுபோல் காணப்பட்டான்.

ஏழை மீனவன் அவன். தினமும் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வந்து, அதை விற்று கிடைக்கும் பணத்தில் குடும்பத்தை நடத்தி வந்தான். என்னதான் பாடுபட்டு உழைத்தாலும், வாழ்வில் மகிழ்ச்சி என்பதே இல்லாததுபோல் காணப்பட்டான். அதை மற்றவர்களிடம் சொல்லி வருத்தப்பட்டுக் கொள்வான். அவனுடைய முகம் எப்போதும் வருத்தம் தோய்ந்த நிலையில் கடுகடுப்புடனேயே இருக்கும்.

ஒரு நாள் அவன் தன்னுடைய பால்ய கால நண்பனை சந்தித்தான். அவனை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து வந்து உபசரித்தான். பின்னர் அவனுடைய நலம் விசாரித்து, வருமானம் மற்றும் குடும்ப நிலைகளை கேட்டறிந்தான். அப்போது அவன் தன்னை விடவும் ஏழ்மை நிலையில் இருக்கிறான் என்பதை புரிந்துகொண்டான். ஆனால் அவனைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை. எப்போதும் புன்னகை பூத்த முகத்துடனேயே காட்சியளித்தான். நண்பன் சென்ற பிறகு, அன்றைய இரவு முழுவதும் மீனவனுக்கு உறக்கம் வரவில்லை. தன்னுடைய நண்பனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தான்.

‘நமது நண்பனுக்கு வருமானமும் குறைவு, நம்மை விட பிரச்சினைகளும் அதிகம். ஆனால் மகிழ்ச்சிக்கு குறைவே இல்லாமல் வாழ்கிறானே.. அது எப்படி?’ என சிந்தித்து சிந்தித்து மனக் குழப்பத்திலேயே உறங்கிப்போனான். மறுநாள் காலை எழுந்தபோதும், அவனுடைய மனக்குழப்பம் தீர்த்தபாடில்லை.

அந்த ஊரில் ஒரு துறவி இருந்தார். அவர் தன்னிடம் வருபவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, அதற்கு தீர்வு சொல்லி வந்தார். ‘அந்த துறவியை சென்று பார்த்தால், நம் மனக்குழப்பம் தீர வாய்ப்பு கிடைக்குமா?’ என்று கருதிய மீனவன், உடனடியாக புறப்பட்டு துறவியின் குடிலுக்குச் சென்றான். குடிலுக்குள் அமர்ந்திருந்த துறவியை வணங்கிய மீனவன், தன்னுடைய குழப்பங்களை எடுத்துரைத்தான். அவரோ அவன் கூறிய அனைத்தையும் கேட்டுவிட்டு அமைதியாக புன்னகைத்தபடி, அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டார்.

‘நம்முடைய மனக்குழப்பத்திற்கு பதிலளிக்காமல், சிரித்துவிட்டு செல்கிறாரே’ என்று சற்றே கோபம் வந்தாலும், துறவியை நிறுத்தி அது பற்றி கேட்க அவனுக்கு பயமாக இருந்தது. ஏதாவது சாபம் கொடுத்துவிட்டால் என்ன செய்வது? அந்த பயத்தால் வீடு திரும்பிவிட்டான். ஆனால் அடுத்த நாள் காலையும் துறவியைப் பார்க்கச் சென்றான். இப்போதும் துறவியிடம் இருந்து அதே புன்னகைதான் வெளிப்பட்டது. பதில் கிடைக்கவில்லை. இப்படியே ஒரு மாத காலம் சென்றுவிட்டது. மீனவன், துறவியைப் பார்க்க வருவதும், அவர் ஏதும் சொல்லாமல் புன்னகைத்தபடி சென்றுவிடுவது வாடிக்கையாகிப் போனது.

ஒரு நாள் துணிச்சல் வந்தவனாக, “ஐயா நான் எனது பிரச்சினைகளை உங்களிடம் கூறினேன். ஆனால் நீங்களோ அதற்கான தீர்வைக் கூறாமல், சிரித்தபடியே என்னை கடந்து சென்று விடுகிறீர்கள். இதற்கு என்ன பொருள்?” என்று கேட்டான்.

இப்போது துறவி பதிலளித்தார். “நீ உன்னுடைய வருமானத்தை குறைவாக நினைக்கிறாய். அதே சமயம் உனக்கு வரும் பிரச்சினைகளை உயர்வாக கருதுகிறாய். இந்த உலகத்தில் பிரச்சினை இல்லாத மனிதர்களே இல்லை. கிடைக்கும் வருமானம் மட்டும் போதும் என்று சொல்பவர்களும் இங்கே இல்லை. இருப்பதைக் கொண்டுதான் சிறப்பாக வாழ வேண்டும். ஆசை கொள்வதில் தவறில்லை என்றாலும், பேராசை ஆபத்தானது. உன்னுடைய பிரச்சினையே உன் மனம் முழு வதும் ஆக்கிரமித்திருக்கிறது. அதனால் உனக்கு சிரிப்பு என்பதே மறந்து விட்டது. அதைத்தான் நான் உனக்கு இவ்வளவு நாளும் நினைவு படுத்தினேன். அதோடு எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், அதை சிறு புன்னகையோடு கடந்து செல்ல முயற்சி செய். அது உன் வாழ்வை அழகாக்கும்” என்றார்.

இப்போது அந்த மீனவனின் உள்ளம் தெளிவடைந்திருந்தது. அந்த தெளிவை அவனது உதடு புன்னகைத்து வெளிக்காட்டியது.

Next Story