குழந்தை வரம் அருளும் மாங்கனித் திருவிழா 24-6-2021 மாங்கனித் திருவிழா


குழந்தை வரம் அருளும் மாங்கனித் திருவிழா 24-6-2021 மாங்கனித் திருவிழா
x
தினத்தந்தி 22 Jun 2021 12:15 AM GMT (Updated: 22 Jun 2021 12:34 AM GMT)

பிறப்பும், இறப்பும் இல்லாதவர் சிவபெருமான். ஆனால் அவருக்கும் ஒரு ‘அம்மை’ இருக்கிறார் என்றால், அது காரைக்கால் அம்மையார் மட்டுமே.

அப்பர், சுந்தரர், திருஞானசம்பந்தர் ஆகிய மூவரும் பாடிய தேவாரத்துக்கு முன்மாதிரியானவை, இவர் பாடிய பதிகங்கள். இன்னும் சொல்லப்போனால், தமிழில் முதன் முதலாக பதிகம் பாடும் முறையை அறிமுகம் செய்தவரே காரைக்கால் அம்மையார்தான். இவர் பாடிய பதிகங்களைப் பின்பற்றியே, மூவரின் தேவார பதிகங்கள் பாடப்பட்டன. தமிழுக்கு ‘அந்தாதி’ என்னும் இலக்கண முறையை அறிமுகம் செய்து வைத்தவர்.

புனிதவதியாக பிறந்து மண வாழ்க்கையில் நுழைந்தவர், காரைக்கால் அம்மையார். ஒரு முறை பணியாள் மூலமாக கணவர் கொடுத்தனுப்பிய மாங்கனிகளில் ஒன்றை, அடியாராக வந்த ஈசனுக்கு விருந்தாக அளித்து விட்டார். அதோடு தயிர் அன்னமும் படைத்து அனுப்பினார். மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்த கணவருக்கு, எஞ்சியிருந்த ஒரு மாங்கனியை சாப்பிடக் கொடுத்தார். அந்த மாங்கனி சுவையாக இருந்ததால், மீதமிருந்த மற்றொரு மாங்கனியையும் கொண்டு வரும்படி கணவர் கூற, புனிதவதி திகைத்துப் போனார். ‘அடியாருக்கு விருந்து படைத்து விட்டேன் என்று கூறினால், கணவர் கோபித்துக் கொள்வாரோ?’ என பயந்த புனிதவதி, பூஜை அறைக்குச் சென்று ஈசனை வேண்டினார். அப்போது அவரது கையில் ஒரு மாங்கனி வந்தது. அதைக் கொண்டு போய் கணவனுக்கு கொடுத்தார்.

முன்பு சாப்பிட்ட பழத்தை விட, இந்தப் பழம் அதிக சுவையுடன் இருந்தது. ஒரு மரத்தின் காயில் எப்படி வேறுபட்ட சுவை கிடைக்கும் என்று சந்தேகித்த புனிதவதியின் கணவன், அவரிடம் உண்மையைக் கூறும்படி வலியுறுத்த, நடந்த விவரங்களைச் சொன்னார்.

இப்போதுதான் கணவரின் சந்தேகம் மேலும் வலுப்பெற்றது. இறைவனே மாங்கனியைக் கொடுத்தானா என்று அதிர்ந்தவர், “அப்படியானால் ஈசனிடம் வேண்டி மீண்டும் ஒரு மாங்கனியைப் பெற்றுவா” என்று மனைவிக்கு கட்டளையிட்டார். புனிதவதியும் அதன்படியே ஈசனை வேண்டி, மற்றொரு கனியை பெற்றார். இதைக் கண்டு அதிர்ச்சியும் பயமும் கொண்ட புனிதவதியின் கணவன், ‘இவள் தெய்வப்பெண்’ என்று கருதி, அவளை விட்டு நீங்கி வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இதையறிந்த புனிதவதி இனியும் தனக்கு இந்த அழகு எதற்கு என்று கருதி, ஈசனிடம் வேண்டி பேய் உருவத்தைப் பெற்றார். அந்த உருவத்தோடு பல தலங்களுக்குச் சென்று வந்தவர், இறுதியில் கயிலையில் வாழும் இறைவனை அங்கேயே சென்று தரிசிக்க முடிவு செய்தார். இறைவன் வாழும் கயிலையில் கால் பதித்து நடக்கக்கூடாது என்பதற்காக, தலையால் நடந்து சென்றார். அதைப் பார்த்த பார்வதிதேவி, “இறைவா.. தலையால் நடந்து வரும் இந்தப் பெண் யார்?” என்று கேட்க, அதற்கு சிவபெருமான், “இவள் நம்மை போற்றும் அம்மை காண்” என்று பதிலளித்தார்.

இறைவனே ‘அம்மை’ என்று அழைத்ததாலும், காரைக்காலில் பிறந்ததாலும், இவர் பின்னாளில் ‘காரைக்கால் அம்மையார்’ என்று அழைக்கப்பட்டார். 63 நாயன்மார்களில், ஒரே ஒரு பெண் நாயன்மாராக காரைக்கால் அம்மையார் திகழ்கிறார். மேலும் அனைத்து நாயன்மார்களும் நின்ற திருக்கோலத்திலேயே காட்சி தர, காரைக்கால் அம்மையார் மட்டும் அமர்ந்த கோலத்தில் அருள்வதைக் காணலாம். ஏனெனில் தாய்மைக்கு அவ்வளவு சிறப்பு இருக்கிறது.

இவ்வளவு சிறப்பு கொண்ட காரைக்கால் அம்மையாருக்கு, புதுச்சேரி மாநிலம் காரைக்கால் நகரில் தனிக் கோவில் அமைந்துள்ளது. இறைவனுக்கு மாங்கனியை விருந்தளித்த, இந்த அன்னையின் சிறப்பை எடுத்துரைக்கும் விதமாக காரைக்காலில் ஆண்டு தோறும் ‘மாங்கனி திருவிழா’ நடத்தப்படும். காரைக்கால் சுந்தராம்பாள் உடனாய கயிலாசநாதர் ஆலயத்தில் இருந்து காரைக்கால் அம்மையார் கோவிலுக்கு வரும் இறைவன் மீது, பக்தர்கள் பலரும் சூழ்ந்து நின்று மாங்கனிகளை வீசி வழிபாடு செய்வார்கள். அப்படி வீசப்படும் மாங்கனிகளை குழந்தைப் பேறு இல்லாதவர்கள் எடுத்து சாப்பிட்டால், அவர்களுக்கு குழந்தை பாக்கியம் விரைவாக கிடைக்கும் என்பது நம்பிக்கை.

கொரோனா பெருந்தொற்று காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காரணத்தால், கடந்த ஆண்டு இந்த விழாவிற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. விழாவும் கயிலாசநாதர் கோவிலுக்குள்ளேயே நடத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டும் பெருந்தொற்று காரணமாக கட்டுப்பாடுகள் தொடர்ந்து கொண்டிருப்பதால், இம்முறையும் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு, இந்த விழா நடத்தப்பட உள்ளது.

Next Story