ஆன்மிகம்

பாவங்களில் இருந்து விடுபடுவது எப்படி? + "||" + How to get rid of sins?

பாவங்களில் இருந்து விடுபடுவது எப்படி?

பாவங்களில் இருந்து விடுபடுவது எப்படி?
தன் வாழ்நாளில் ஒரு மனிதன் பாவத்தில் இருந்து விடுபட்டு வாழ வேண்டும் என்றால், கண்களையும் மனதையும் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும். கண்கள் காணும் காட்சிகள், மனதில் ஆசைகளாக மாறி அதனை அடைய முற்படும் போது தான் மனிதன் பாவச்சேற்றில் சிக்கிக்கொள்கிறான்.
கண்களில் படும் அனைத்தையும் அடைந்துவிட வேண்டும் என்ற சுயநலமும் பேராசையும் தான் மனிதனின் பாவத்திற்கு காரணமாகின்றது. அதனை அல்லாஹ் அறிந்தவனாக இருக்கிறான். இதையே திருக்குர்ஆனில் அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான்:

‘மனிதர்களின் கண்கள் செய்யும் சூதுகளையும், உள்ளங்களில் மறைத்து இருப்பவைகளையும் இறைவன் நன்கறிவான்’ (திருக்குர்ஆன் 40:19).

தவறான பார்வைகளை தவிர்த்தாலே மனங்களும் அதன் எண்ண ஓட்டங்களும் நம் கட்டுப்பாட்டில் வந்துவிடும். அதற்கான வழிமுறைகளையும் அல்லாஹ் திருக்குர்ஆனில் அழகாக குறிப்பிடுகின்றான்:

“நபியே! நம்பிக்கையாளர்களான ஆண்களுக்கு நீங்கள் கூறுங்கள், அவர்கள் தங்கள் பார்வைகளை கீழ்நோக்கியே வைத்திருக்கவும். இது அவர்களை பரிசுத்தமாக்கி விடும்” (திருக்குர்ஆன் 24:30).

அதேபோன்று பெண்களையும் இவ்வாறு எச்சரிக்கின்றது திருமறை:

“நபியே! நம்பிக்கை உள்ள பெண்களுக்கும் நீங்கள் கூறுங்கள், அவர்களும் தங்கள் பார்வையை கீழ்நோக்கி வைத்துக் கொள்ளட்டும், தங்கள் கற்பையும் பாதுகாத்துக் கொள்ளட்டும்” (திருக்குர்ஆன் 24:31).

பெண்களுக்கு பார்வையை தாழ்த்திக் கொள்ளுங்கள் என்ற எச்சரிக்கையோடு மட்டும் விட்டுவிடவில்லை தங்கள் கற்பை பாதுகாத்துக் கொள்ளட்டும் என்று சேர்த்தே எச்சரிக்கிறது திருக்குர்ஆன்.

ஒருவரது பார்வை தற்செயலாக ஒரு பெண்ணின் மேல் விழுந்து விட்டாலும், அது அவன் மனதில் சஞ்சலங்களை ஏற்படுத்தாத வகையில் அந்தப்பெண்கள் தாங்கள் அணியும் ஆடைகளை அமைத்துக் கொள்ள வேண்டும். இதனை ஒரு 
பெண் கவனத்தில் கொள்ளும்போது அவளும் பாதுகாப்பு பெறுகிறாள், பாவத்தை தூண்டும் செயலிலிருந்து மற்றவர்களையும் தடுத்து விடுகின்றாள். இந்த அறிவுரைகளை பின்பற்றும் போது பாவங்கள் நிகழாதவண்ணம் பரிசுத்தமான நிலை அங்கே உருவாகிவிடும்.

இந்த கட்டளைகளை மீறும் மனித குலத்திற்கு பெரும் தண்டனை மறுமை நாளில் காத்திருக்கிறது என்றும் இறைவன் எச்சரிக்கின்றான். மறுமைநாளில் கேள்வி கணக்கு கேட்கப்படும் சமயத்தில் அவனிடமிருந்து பதிலை அல்லாஹ் 
எதிர்பார்ப்பதில்லை. அவர்களின் வாய்களுக்கு முத்திரை வைக்கப்பட்டு விடும், அவர்களின் கண்களும் செவிகளும், தோல்களும் பேச ஆரம்பிக்கும். மனிதன் செய்த பாவங்களை அவனின் ஒவ்வொரு உறுப்பும் சாட்சியாக விவரிக்கும்போது மனிதனால் அதை மறுக்க முடியாது.

“அல்லாஹ்வுடைய எதிரிகளை நரகத்தின் பக்கம் ஒன்று சேர்க்கப்படும் நாளில் (அதன் சமீபமாக வந்ததும்) அவர்கள் (விசாரணைக்காக நல்லோரில் இருந்து) பிரித்து நிறுத்தப்படுவார்கள். அச்சமயம் (பாவம் செய்த) அவர்களுக்கு விரோதமாக அவர்களுடைய செவிகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய (உடல்) தோல்களும் அவைகள் செய்தவைகளைப் பற்றி சாட்சி கூறும்” என்று திருக்குர்ஆன் (41:19,20) எச்சரிக்கை செய்கின்றது.

இணைவைத்தலை தவிர அத்தனை பாவங்களையும் மன்னிக்கக் கூடிய இரக்கமுள்ள இரட்சகன் அல்லாஹ். அவனிடம் இரு கரம் ஏந்தி பாவமன்னிப்பு கேட்போம். நம் பார்வைகளை பாதுகாத்து பாவங்களை தவிர்த்து வாழ்வோம். 

இம்மையிலும் மறுமையிலும் நன்மைகளை பெற்றுக்கொள்வோம்.