நன்மையின் பக்கம் அழைத்துச்செல்லும் நற்செயல்கள்


நன்மையின் பக்கம் அழைத்துச்செல்லும் நற்செயல்கள்
x
தினத்தந்தி 29 Jun 2021 1:40 PM GMT (Updated: 29 Jun 2021 1:40 PM GMT)

இறைவனின் அருளால் சொர்க்கத்திற்கு சொந்தக்காரர்கள் ஆக வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பம்.

இறைவனின் அருளால் சொர்க்கத்திற்கு சொந்தக்காரர்கள் ஆக வேண்டும் என்பதே நம் அனைவரின் விருப்பம். இதற்கு, அந்த ஏக இறைவன் அல்லாஹ் வகுத்த வழியில் நமது வாழ்க்கையை வாழ வேண்டும்.

இறைவன் காட்டிய வழியில் நமது வழிபாடுகள், செயல்கள் அனைத்தும் அமைய வேண்டும். நற்செயல்களை அதிகமாக செய்வதன் மூலம் நாம் அறிந்தும், அறியாமலும் செய்த பாவங்களில் இருந்து மன்னிப்பு பெற முடியும்.

மனிதர்களை நன்மையின் பக்கம் வழிநடத்திச்செல்ல ஏராளமான நற்செயல்கள் உள்ளன. அதில் குறிப்பிடத்தக்கவை இந்த நான்கு முக்கிய செயல்கள். அவை வருமாறு:-

1) “இறைவன் ஒருவனே, வணக்கத்திற்கு உரியவன் அந்த அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் இல்லை” என்று பொருள் தரும் முதலாவது கலிமாவை அதிகமாக ஓதி வரவேண்டும்.

2) வாழ்நாளில் செய்த பாவமான செயல்கள், காரியங்களை நினைத்து மனம் வருந்தி கண்ணீர் சிந்தி இறைவனிடம் பாவ மன்னிப்பு கேட்க வேண்டும். மீண்டும் அதுபோன்ற பாவங்களை செய்யாமல் இருக்க வேண்டும்.

3) இந்த உலக வாழ்க்கையில் நிறைய நன்மைகள் செய்து அதன் மூலம் மறுமையில் சொர்க்கத்தை பெறும் வகையில் இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

4) நரகத்தில் மனிதனை தள்ளும் தீய செயல்கள், தீய எண்ணங்கள் போன்றவற்றில் இருந்து பாதுகாப்பு தருமாறு இறைவனிடம் மன்றாடி கேட்டுக்கொள்ள வேண்டும்.

இதுபோன்ற நற்செயல்கள் மூலம் நாம் அதிகமாக நன்மைகள் செய்து, பாவங்கள், தீமைகளை விட்டு விலகி இருந்து சொர்க்கத்தைப்பெற முயற்சி செய்திட வேண்டும். இது சொல்வதற்கு எளிதாக இருக்கலாம். ஆனால் இதை கடைப்பிடிப்பது மிகவும் கடினம்.

ஆசையிலும், ஆணவத்திலும் ஆர்வம் கொண்டுள்ள மனித மனம் இதைச்செய்ய விடாமல் தடுக்கும். எனவே ஒவ்வொரு மனிதனும் இறைவனின் அருளைப்பெறும் வகையில் தன்னை தகுதிப்படுத்திக்கொள்வது மிக முக்கியம்.

அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை பெறும் வகையில் நமது அன்றாட வாழ்க்கை முறைகளையும், செயல்பாட்டையும் அமைத்துக்கொள்வது அவசியம். அப்போது தான் அல்லாஹ்வின் அருட்பார்வை நமக்கு கிடைக்கும். இதைப்பெறுவது என்பது எளிதானது அல்ல. இறைவனிடம் இருந்தே இதற்கும் பல்வேறு வகையில் சோதனைகள் நமக்கு வரத்தான் செய்யும். குறிப்பாக நடைமுறை வாழ்க்கையில் ஒவ்வொரு பொருளையும் பார்க்கும் போதே மனதில் ஆசை தூண்டப்பட்டு சோதனைகள் வரத்தொடங்கும்.

இதுபற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறும்போது, “பார்வை என்பது ஷைத்தானின் விஷம் கலந்த அம்புகளில் ஒன்று. அல்லாஹ்வின் தண்டனைக்குப் பயந்து தன் பார்வையை எவர் பாதுகாத்துக்கொள்வாரோ அவருக்கு உள்ளத்தில் ஈமான் (இறையச்சம்) பாதுகாக்கப்படும்” என்றார்கள். (நூல்: ஹாகிம்).

மனிதனுக்கு ஏற்படும் சோதனைகள் குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:

“நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன; ‘நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு’ என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள்”. (திருக்குர்ஆன் 8:28).

“மனிதனை யாதேனும் தீங்கு அணுகும் சமயத்தில், (அதனை நீக்கும்படி) நம்மிடமே அவன் பிரார்த்தனை செய்கின்றான். (அதனை நீக்கி) அவனுக்கு நாம் யாதொரு அருள் புரிந்தாலோ, ‘தான் அதனை அடைந்ததெல்லாம் தன்னுடைய அறிவின் சாமர்த்தியத்தால்தான்’ என்று கூறுகின்றான். (அது சரி) அல்ல; அதுவும் (அவர்களுக்கு) ஒரு சோதனையாகும். ஆயினும், அவர்களில் அனேகர் இதனை அறிந்து கொள்வதில்லை” (திருக்குர்ஆன் 39:49).

இறைவன் நம்மை சோதிப்பது எல்லாம் அவன் தரும் அருட்கொடைகளுக்கு நம்மை தகுதியானவர்களாக ஆக்குவதற்குத்தான். அதை நாம் புரிந்து கொண்டு எத்தனை சோதனைகள் வந்தாலும் அதை இறைவன் பொருட்டால் ஏற்றுக்கொண்டு, இறைவழியில் செயல்பட்டு நற்செயல்கள் செய்துவந்தால் இம்மையிலும், மறுமையிலும் நன்மைகள் பெற முடியும்.

நன்மைகள் பக்கம் நம்மை அழைத்துச்செல்லும் நற்செயல்களை எப்போதும் செய்வோம், மற்றவர்களையும் அதுபோன்ற செயல்களை செய்யும்படி தூண்டுவோம். இதன் மூலம் ஒட்டுமொத்த மனித சமுதாயமும் இறையச்சத்துடன் திகழும், இறைவனின் அன்பும், கருணையும் நம்மை வழிநடத்தி நன்மைகளை பெற்றுத்தரும்.

Next Story