செல்வ வளம் சேர்க்கும் ‘அபரா ஏகாதசி’ 5-7-2021 அன்று ‘அபரா ஏகாதசி விரதம்’


செல்வ வளம் சேர்க்கும் ‘அபரா ஏகாதசி’ 5-7-2021 அன்று ‘அபரா ஏகாதசி விரதம்’
x
தினத்தந்தி 29 Jun 2021 2:41 PM GMT (Updated: 29 Jun 2021 2:41 PM GMT)

பெருமாளை வழிபடுவதற்கு உகந்த தினமாக ஏகாதசி திதி உள்ளது. தேய்பிறை, வளர்பிறை என மாதத்திற்கு இரண்டு ஏகாதசிகளாக, ஆண்டுக்கு 24 ஏகாதசிகள் வரும்.

பெருமாளை வழிபடுவதற்கு உகந்த தினமாக ஏகாதசி திதி உள்ளது. தேய்பிறை, வளர்பிறை என மாதத்திற்கு இரண்டு ஏகாதசிகளாக, ஆண்டுக்கு 24 ஏகாதசிகள் வரும். சில நேரங்களில் வருடத்திற்கு 25 ஏகாதசிகள் வருவதும் உண்டு. ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது. அந்த வகையில் ஆனி மாதம் தேய்பிறையில் வரும் ஏகாதசி, ‘அபரா ஏகாதசி’ என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஏகாதசி தினத்தில் நோன்பை கடைப்பிடித்து இறைவனை வழிபாடு செய்து வந்தால், சிறப்பான பலன்களைப் பெற முடியும்.

‘அபரா’ என்பதற்கு ‘அபாரமான’, ‘அளவில்லாத’ என்று பொருள். இந்த அபரா ஏகாதசி விரதமானது அனைத்துவிதமான பாவங்களையும் அழிப்பதுடன், அளவில்லாத செல்வத்தையும் அளிக்கக்கூடியது என்கின்றன புராணங்கள்.

அம்பரீஷன் எனும் மன்னன் திருமாலின் அதிதீவிர பக்தன். வருடம் முழுவதும் தவறாமல் ஏகாதசி விரதமிருந்து விஷ்ணுவின் பாதங்களைச் சரணடைந்து அருளைப் பெற்று வந்தான். ஒருமுறை மன்னன் ஏகாதசி விரதமிருந்து, அதை முடிக்கும் தறுவாயில் துர்வாச முனிவர் அங்கு வந்துவிட்டார். விரத வேளையிலும் துர்வாச முனிவரை ஓடிச்சென்று வரவேற்ற மன்னன், அவரை உணவருந்த அழைத்தான். முனிவரும் அம்பரீஷனின் வேண்டுகோளை ஏற்று நதியில் நீராடிவிட்டு வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றார். ஆனால், நீராடப்போன துர்வாச முனிவர் குறித்த நேரத்துக்குள் திரும்பி வரவில்லை. விரத காலம் முடிவதற்குள் மன்னன் விரதத்தை முடித்து, உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், இத்தனை வருடங்களாகத் தொடர்ந்து கடைப்பிடித்து வரும் ஏகாதசி விரதத்தின் பலனைப் பெறமுடியாமல் போய்விடும். இதனால், மன்னன் திருமாலை நினைத்தபடியே துளசி தீர்த்தத்தை அருந்தி தனது உபவாசத்தை முடித்துக்கொண்டான்.

இதைத் தனது ஞான சக்தியால் அறிந்த துர்வாசர், கடும் கோபம் கொண்டு தனது தலைமுடியைப் பிடுங்கி ஆயுதமாக்கி எறிந்தார். அது பூதமாக மாறி மன்னனைத் துரத்தத் தொடங்கியது. மன்னன் திருமாலின் பாதங்களைச் சரணடைந்தான். திருமால், தன் பக்தனைக் காக்க சக்கராயுதத்தை ஏவினார். சக்கராயுதம் துர்வாச முனிவர் ஏவிய பூதத்தை அழித்துவிட்டு அவரையும் விரட்டியது. வேறு வழியில்லாமல் திருமாலிடமே சரணடைந்தார் துர்வாசர். திருமால், “என் பக்தனுக்கே நான் அடிமை. என் பக்தன் உன்னை மன்னித்தால் நானும் உன்னை மன்னிக்கிறேன்” என்று சொல்லி அனுப்பி வைத்தார். துர்வாசர் வேறு வழியின்றி, அம்பரீஷனிடம் சென்று மன்னிப்பு கேட்டார். மன்னன் சக்கரத்தாழ்வாரிடம் வேண்டி அவரைக் காப்பாற்றினான். அன்றைய தினத்தில் அம்பரீஷன் மேற்கொண்ட விரதம்தான் ‘அபரா ஏகாதசி’ விரதம். அந்த விரதம் அவனைக் காப்பாற்றியதுடன் அளவற்ற செல்வத்தையும், புகழையும் கொண்டு வந்து சேர்த்தது. துர்வாச முனிவரும் அபரா ஏகாதசி விரதத்தை மேற்கொண்டு, திருமால் பக்தனைத் தாக்க பூதத்தை ஏவிய தனது பாவத்தைப் போக்கிக்கொண்டார்.

அபரா ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடித்து திருமாலை, திரிவிக்ரமர் (உலகளந்த திருக்கோலம்) உருவத்தில் வழிபட்டால், எல்லா வளங்களும் வந்து சேரும். அவர்கள் இல்லங்களைத் தேடிவந்து லட்சுமி தேவி அருள்புரிவாள். லட்சுமி கடாட்சம் நிறையும், செல்வ வளமும் சேரும்.

Next Story