மன்னனுக்கு அருள்செய்த கூர்மநாதர்


மன்னனுக்கு அருள்செய்த கூர்மநாதர்
x
தினத்தந்தி 6 July 2021 10:16 AM GMT (Updated: 6 July 2021 10:16 AM GMT)

திருமாலின் தசாவதாரங்கள் மிகவும் சிறப்புக்குரியவை. அதில் 2-வது அவதாரமான ‘கூர்ம அவதாரம்’ முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

ஏனெனில் மற்ற அவதாரங்கள் அனைத்துமே, ஏதோ ஒரு அசுர அழிவை முன்னிறுத்தியே எடுக்கப்பட்டவை. ஆனால் கூர்ம அவதாரம், மற்றவர்களின் நலனுக்காக திருமாலால் எடுக்கப்பட்டது. எனவே தான் மற்ற அவதாரங்களில் இருந்து கூர்ம அவதாரம், வேறுபட்டு நிற்கிறது.

துர்வாச முனிவரின் சாபம் காரணமாக, இந்திரன் தன்னுடைய ராஜ்ஜியத்தை இழந்து, தேவர்கள் அனைவரும் அசுரர்களிடம் தோல்வியடையும் நிலை உருவானது. இதையடுத்து தேவர்களுக்கு, மகாவிஷ்ணு ஒரு உபாயம் சொன்னார். அதன்படி திருப்பாற்கடலை, மந்தார மலையைக் கொண்டு வாசுகி பாம்பை கயிறாக வைத்து கடைந்தால், அமிர்தம் கிடைக்கும். அதைப் பருகுவதால், தேவர்களின் வெற்றி சாத்தியப்படும் என்று கூறினார்.

ஆனால் பாற்கடலை கடைவதற்கு அசுரர்களின் உதவியும் தேவைப்பட்டது. இதையடுத்து தேவர்கள், அசுரர்கள் இணைந்து, திருப்பாற்கடலை கடைந்தனர். அப்போது மந்தார மலை சரியத் தொடங்கியது. இதையடுத்து மகாவிஷ்ணு, கூர்ம (ஆமை) வடிவம் எடுத்து, கடலுக்கடியில் சென்று மந்தார மலையை தாங்கிக்கொண்டார். இதையடுத்து திருப்பாற்கடலில் இருந்து பல பொருட்களும், அப்ரசஸ்களும், தெய்வ சக்தி பெற்றவர்களும் வெளிப்பட்டனர். இப்படி தேவர்களுக்கும், மக்களுக்கும் நன்மை அளிப்பதற்காக எடுக்கப்பட்டது கூர்ம அவதாரம்.

தமிழ்நாட்டில் திருவரங்கம் அரங்கநாதர் கோவிலில், தசாவதார சன்னிதியில் கூர்மநாதரை தரிசிக்கலாம். அதே போல் சென்னை பெசன்ட்நகரில் உள்ள அஷ்டலட்சுமி ஆலயத்தில் உள்ள தசாவதார சன்னிதியிலும் கூர்மநாதர் அருள்கிறார். ஆனால் கூர்மநாதருக்கு தனிக்கோவில் ஆந்திர மாநிலம் ஸ்ரீகூர்மம் என்ற இடத்தில் அமைந்திருக்கிறது. மகா விஷ்ணுவின் கூர்ம அவதாரத்திற்கான ஒரே கோவிலாக இது மட்டுமே திகழ்கிறது. இந்த ஆலயத்தில் கூர்மநாதர் என்ற பெயரில் இறைவன் அருள்பாலித்து வருகிறார். தாயாரின் திருநாமம், கூர்மநாயகி என்பதாகும்.

தல வரலாறு

ஸ்வேதபுரத்து அரசர் ஸ்வேதனின் மனைவி விஷ்ணு ப்ரியா. இவள் திருமாலின் பக்தை. அவள் ஒரு ஏகாதசி திதியன்று பெருமாளுக்கு பூஜை செய்து கொண்டிருந்தாள். அப்போது ஸ்வேத மன்னன், மனைவியை தாம்பத்யம் வைத்துக் கொள்ள அழைத்தான். ‘தான் விரதம் இருப்பது தெரிந்தும் மன்னன் இப்படி நடந்து கொள்கிறாரே. இவரால் விரதத்திற்கு பங்கம் வரக்கூடாதே’ என்று நினைத்தவள், மானசீகமாக திருமாலை வணங்கினாள். அப்போது திடீரென தம்பதியர் இடையே ஒரு நதி உருவாகி ஓடியது.

அதைக் கண்டு திடுக்கிட்ட மன்னன், “மாதவா! நான் இந்த ஆற்றைக் கடக்க, என்னைத் தாங்கிச் செல்லும் கூர்மமாகத் தாங்கள் வரவேண்டும்” என வேண்டினான். அப்படியே திருமாலும் கூர்மமாக மாறி நதியில் மிதந்து வர, பளிச்சென்று மன்னனுக்கு ஞானம் பிறந்தது. அந்த அவதாரத் திருவுருவிலேயே திருமாலுக்கு அங்கு ஒரு ஆலயம் எழுப்பினான். பெருமாள் மிதந்து வந்த நதி சுருங்கி, ‘ஸ்வேத புஷ்கரணி’யாக மாறியது.

இத்தல இறைவனின் திருமுகத்தில் உள்ள திருநாமம் வெள்ளித் தகட்டிலும், விழிகள் தங்கத்தாலும், வால்பகுதி சாளக்கிராமத்தாலும் அமையப்பெற்றிருக்கிறது. அழகிய சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட இந்த ஆலயத்தில் ஆமைகளும் வளர்க்கப்படுகிறது. இந்தத் திருத்தலம் முன்காலத்தில் ‘கூர்ம லிங்கேஸ்வரம்’, ‘பஞ்சலிங்க ஆத்மேஸ்வரம்’ என்ற பெயர்களால் அழைக்கப்பட்டு வந்துள்ளது. ராமானுஜர் தனது திக்விஜயத்தின்போது இத்தலம் வந்தார். அங்கு திருமாலே சாளக்ராம (ஆமை) வடிவில் அருள்வதை உணர்ந்தார். உலகோருக்கு அதை அறியவைக்க நினைத்தார். ஆலயத்தின் கிழக்கு வாசல் எதிரில் அமைந்திருந்த கொடிமரம் அருகே சென்றவர், நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கி வலம் வந்தார். அவர் தெற்கு திசை நோக்கித் திரும்பியபோது, கருவறையில் வீற்றிருந்த கூர்மமூர்த்தியும் அத்திசை நோக்கித் திரும்பி நிலைகொண்டார். கொடிமரமும் மேற்கில் திரும்பி விட்டது. இதைக் கண்டு வியந்த மக்கள், அன்றிலிருந்து கூர்மமூர்த்தியை திருமாலாக எண்ணி ஆராதிக்கத் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

அமைவிடம்

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் நகரில் இருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஸ்ரீகாகுளம். இங்கிருந்து நெடுஞ்சாலையில் அம்புக் குறியிடப்பட்ட பாதையில் 10 கி.மீ. தொலைவு சென்றால் ஸ்ரீகூர்மம் ஊருக்கான கிளைச்சாலை பிரியும். அதனுள் 3 கி.மீ. தொலைவு பயணித்தால் ஸ்ரீகூர்மநாதர் ஆலயத்தை அடையலாம். ஸ்ரீகாகுளத்தில் இருந்து அடிக்கடி நகரபேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Next Story