ஆன்மிகம்

ஆனந்த வாழ்வுதரும் ஆடி மாதம் + "||" + Audi month that gives a happy life

ஆனந்த வாழ்வுதரும் ஆடி மாதம்

ஆனந்த வாழ்வுதரும் ஆடி மாதம்
வருடம் முழுவதும் உள்ள 12 மாதங்களிலும் எத்தனையோ வெள்ளிக்கிழமைகள் வந்து போகின்றன. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்மன் வழிபாடு சிறப்பாக இருக்கும். என்றாலும், ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமையானது, தனிப்பெருமை பெற்று விளங்குகிறது.
அந்த நாளில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் செய்யப்படும். ஆடி வெள்ளியில் அம்மனுக்கு செய்யப்படும் சந்தனக் காப்பு அலங்காரம் மிகவும் பிரசித்திபெற்றது. அந்த திருக்காட்சியை தரிசனம் செய்பவர்களுக்கு, இன்பங்கள் இல்லம் தேடி வந்து சேரும்.

ஆடி வெள்ளிக்கிழமையில் அம்பாளை வழிபட்டால், நன்மைகள் பல கிடைக்கும் என்பதால்தான், ‘கோடி நன்மை தரும் ஆடி வெள்ளி’ என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். ஆடி வெள்ளியில் நாம் செல்ல வேண்டிய ஆலயம், அம்மன் கோவில் கொண்டிருக்கும் ஆலயம்தான். இந்த நாளில் அம்பாளை வழிபடுவதைப் போலவே, லட்சுமி தேவியையும் வழிபாடு செய்வார்கள். மங்கலகரமான வெள்ளிக்கிழமையில், மங்கலம் நிறைந்த திருமகளான லட்சுமியை வழிபடுபவதன் மூலமாக செல்வ வளத்தைப் பெருக்கிக்கொள்ள முடியும். ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் ‘அஷ்ட லட்சுமிகள்’ எனப்படும் எட்டு வகையான லட்சுமிகளுக்கும் விழா கொண்டாடுவார்கள்.

வெள்ளிக்கிழமையை ‘சுக்ர வாரம்’ என்றும் அழைப்பார்கள். கிரகங்களில் ‘வெள்ளி’ என்று அழைக்கப்படும் சுக்ரனுக்கும் உகந்தது இந்த நாள் என்பதால், அந்தப் பெயர் வந்தது. ஆடி மாதம் தேவா்களுக்கு இரவு நேரம் என்று புராணங்கள் சொல்கின்றன. எனவே ஆடி வெள்ளிக்கிழமை அன்று, மாலை நேரத்தில் அம்பாளை வழிபாடு செய்து வந்தால் ஏராளமான பலன்கள் கிடைக்கும். குடும்ப முன்னேற்றம், மாங்கல்ய பாக்கியம், தொழில் மேன்மை போன்றவையும், ஆடி வெள்ளியில் அம்பாளை வழிபடுவதன் மூலமாக வந்து சேரும்.

ஆடி வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் பலரும் குத்துவிளக்கு பூஜை நடத்துவார்கள். விளக்கு பூஜையின் முடிவில் சுமங்கலிகளுக்கு, ரவிக்கைத்துணி, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமம் கொடுப்பார்கள். இவ்வாறு செய்வதால் நம்முடைய இல்லத்தின் இன்பம் குடிகொள்ளும்.