சிறப்புகள் நிறைந்த ஊட்டத்தூர் ஆலயம்


சிறப்புகள் நிறைந்த ஊட்டத்தூர் ஆலயம்
x
தினத்தந்தி 13 July 2021 11:41 AM GMT (Updated: 13 July 2021 11:41 AM GMT)

திருச்சி மாவட்டத்தில் உள்ளது, ஊட்டத்தூர் திருத்தலம். இங்கு அகிலாண்டேஸ்வரி உடனாய சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ளது, ஊட்டத்தூர் திருத்தலம். இங்கு அகிலாண்டேஸ்வரி உடனாய சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. 1000 ஆண்டுகளுக்கும் முந்தைய இந்தக் கோவில், பிரம்மதேவனால் வழிபாடு செய்யப்பட்டது என்று ஆலய வரலாறு சொல்கிறது. திருச்சியில் இருந்து 45 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது பாடலூர். இங்கிருந்து 5 கிலோமீட்டர் தூரம் சென்றால், ஊட்டத்தூரை அடையலாம். இந்த ஆலயத்தின் சிறப்புகளை இங்கே பார்க்கலாம்.

பிரம்மன் வழிபட்ட தலம்

ஒரு முறை பிரம்மனுக்கு சாபம் உண்டானது. அந்த சாபம் நீங்க, பிரம்மதேவன் இந்தத் திருத்தலத்திற்கு வந்தார். அவர் தீர்த்தம் ஒன்றை உண்டாக்கி, சிவபெருமானை வழிபாடு செய்து, சாபம் நீங்கப் பெற்றார். பிரம்மனால் உருவாக்கப்பட்ட தீர்த்தம், ‘பிரம்ம தீ்ர்த்தம்’ என்றே அழைக்கப்படுகிறது. இந்த தீர்த்தத்தில் நீராடினால் பல்வேறு வியாதிகள் நீங்குவதாக நம்பப்படுகிறது. மூலவர் முன்பாக உள்ள மகா மண்டபத்தின் எதிரில் இருக்கும் பிரம்ம தீர்த்தம், கோடை காலத்திலும், மழை இல்லாத காலத்திலும் வற்றாமல் இருப்பது இறைவனின் திருவருளால் நடக்கும் அற்புதமாகும். இந்த தீர்த்தமே இறைவனுக்கு அபிஷேகம் செய்ய நாள்தோறும் பயன்படுத்தப்படுகிறது.

பஞ்சநதன நடராஜர்

இந்த ஆலயத்தில் சுமாா் 8 அடி உயரம் கொண்ட நடராஜர் திருமேனி உள்ளது. கல்லால் ஆன மிகப்பெரிய நடராஜ உருவத்தில் இதுவும் ஒன்று. இவருக்கு தினமும் காலை 10 மணி முதல் 11 மணி வரை அபிஷேகம் நடைபெறும். ஆலிங்க நதனம், பஞ்ச நதனம், சிங்க நதனம், யானை நதனம், யாழி நதனம் என்று ஐவகையான நதனக் கற்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதில் சிறப்பு வாய்ந்த பஞ்ச நதனக் கல்லால் ஆனது, இந்த நடராஜர் திருமேனி. சாபம் காரணமாக, தான் இழந்த இந்திரலோக பதவியை, இந்த நடராஜரை வழிபட்டுதான் இந்திரன் பெற்றதாக தல வரலாறு சொல்கிறது. சிறுநீரக பாதிப்பை நீக்கும் சக்தி படைத்தவராக, இந்த பஞ்ச நதன நடராஜர் திகழ்கிறார். சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்கள், ஒரு கிலோ வெட்டி வேரை வாங்கி, அதை 48 துண்டுகளாக்கி, மாலையாக கோர்க்க வேண்டும். பின்னர் நடராஜருக்கு அர்ச்சனை செய்து, ஆலயத்தில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் உள்ள நீரை வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும். தினமும் ஒரு துண்டு வெட்டி வேரை, பிரம்ம தீர்த்தத்தில் ஊறவைத்து, அதன் சாற்றை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வரவேண்டும். தொடர்ந்து 48 நாட்கள் (ஒரு மண்டலம்) இவ்வாறு செய்வதால், சிறுநீரக நோய் பாதிப்பு குறையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ராஜராஜனால் அமைக்கப்பட்ட ஆலயம்

ஊட்டத்தூரின் மேற்குப் பகுதியில் சோழேசுவரர் என்ற மேட்டுக்கோவிலை, ராஜராஜ சோழன் கட்டியிருந்தார். வில்வ வனத்தின் ஒரு பகுதியில் அமைந்த இந்த ஆலயத்திற்கு ராஜராஜ சோழன் அவ்வப்போது வருவதுண்டு. அதுபோன்ற நேரங்களில், மன்னர் செல்லும் வழியில் இடையூறுகளை நீக்க வேண்டி, முட்புதர் மற்றும் வளர்ந்த புற்களை அகற்றும் பணி நடைபெறும். அப்படி ஒருமுறை நடந்து கொண்டிருந்த பணியின் போது, ஓாிடத்ைத பணியாளா்கள் மண்வெட்டியால் வெட்ட, அதில் இருந்து ரத்தம் பீரிட்டது. தகவல் கிடைத்து அங்கு வந்த மன்னன், ரத்தம் வந்த இடத்தை சுற்றிலும் புதர்களை நீக்கச் சொன்னார். அந்த இடத்தில் பழமையான சிவலிங்கம் ஒன்று வெட்டுத் தழும்போடு காட்சியளித்தது. அந்த இடத்திலேயே கோவில் அமைக்க மன்னன் உத்தரவிட்டார். அதுவே ஊட்டத்தூர் அகிலாண்டேசுவரி உடனாய சுத்தரத் தினேசுவரர் திருக்கோவில் ஆகும். லிங்கத்தின் தலைப்பகுதியில் உள்ள வெட்டுக் காயத்தை இன்றும் நாம் காண முடியும்.

நந்தியாறு நந்திகேசுவரர்

சிவாலயங்களில் இருக்கும் நந்தி, பெரும்பாலும் மூலவரைப் பார்த்து மேற்கு நோக்கித்தான் காட்சியளிப்பார். ஆனால் இந்த ஆலயத்தில் உள்ள நந்தியாறு நந்திகேசுவரர், கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். ஒரு முறை கங்கை, யமுனை, கோதாவரி, பிரம்மபுத்திரா உள்ளிட்ட நதிகளுக்குள், ‘யார் பெரியவர்?’ என்ற போட்டி ஏற்பட்டது. அதனால் சிவபெருமான், நந்தியெம்பெருமானிடம் ‘அனைத்து நதிகளின் நீரையும் குடித்துப் பார்க்க வேண்டும். குடிக்க முடியாத நதிதான் பெரிய நதி’ என்று கூறினார். அதன்படி ஒவ்வொரு நதியின் நீரையும் குடித்த நந்தியெம்பெருமானால், கங்கை நதியின் நீரைக் குடிக்க முடியவில்லை. அந்த வகையில் கங்கையே பெரிய நதி என்று அறிவிக்கப்பட்டது.

இறந்தவரின் அஸ்தியை இத்திருக்கோவிலுக்கு அருகிலுள்ள ஆற்றில் கரைத்த போது, அது புஷ்பமாக மாறியது. அதன்படி கங்கையை விடவும் சக்தி வாய்ந்தது நந்தியாறு என்று ஈசன் அருளினாா். இதன் காரணமாகவே நந்தியாறு செல்லும் கிழக்கு திசை நோக்கி நந்தியம்பெருமான் வீற்றிருப்பதாக சொல்லப்படுகிறது. நந்தியின் பெயரும் ‘நந்தியாறு நந்திகேஸ்வரர்’ என்றானது.

Next Story