சிவ-சக்தியின் பேரருளை பெற்றுத் தரும் அபிஷேகம்


சிவ-சக்தியின் பேரருளை பெற்றுத் தரும் அபிஷேகம்
x
தினத்தந்தி 15 July 2021 12:38 PM GMT (Updated: 15 July 2021 12:38 PM GMT)

மிகவும் பழமையான, பெருமைக்குரிய ஆலயங்களில் 6 கால பூஜைகள் நடைபெற்று வருவதைக் காணலாம். ஒரு நாளில் வைகறை, காலை, உச்சி, மாலை, இரவு, அர்த்தஜாமம் என்று 6 பொழுதுகள் உண்டு. இந்த பொழுதுகளானது மனிதர்களாகி நமக்கும், வானுலகில் வாழும் தேவர்களுக்கும் மாறுபடும் என்று புராணங்கள் எடுத்துரைக்கின்றன. மனிதர் களுக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள்தான்.

அந்த வகையில் தேவர்களுக்கு வைகறை நேரம் என்பது நமக்கு மார்கழி மாதமாகும். தேவர்களுக்கு காலை பொழுது நமக்கு மாசி மாதமாகும். தேவர் களுக்கு உச்சி காலம் என்பது நமக்கு சித்திரை மாதத்தைக் குறிக்கும். தேவர் களுக்கு மாலை நேரம் என்பது நமக்கு ஆனி மாதத்தைக் குறிக்கும். அதுபோல தேவர்களுக்கு இரவு நேரம் என்பது நமக்கு ஆவணி மாதத்தைக் குறிக்கும். அர்த்த ஜாமம் என்பது புரட்டாசி மாதத்தைக் குறிக்கும்.

இந்த 6 காலங்களில் நடக்கும் பூஜைகள், அபிஷேகங்கள் இறைவனை மிகவும் குளிர்ச்சிப்படுத்தும். அதை பிரதிபலிக்கும் வகையில் சிதம்பரம் நடராஜருக்கு ஆண்டுக்கு 6 தடவை அபிஷேகம் செய்வார்கள். மாசி சதுர்த்தசி, சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மார்கழி திருவாதிரை ஆகியவையே அந்த 6 அபிஷேக நாட்கள். இந்த 6 நாட்களில் மார்கழி திருவாதிரை, ஆனி உத்திர திருமஞ்சனம் ஆகிய இரு நாட்களில் நடைபெறும் அபிஷேகம், பூஜைகள் சிறப்பானதாக கருதப்படுகிறது.

திருமஞ்சனம் என்றால் ‘புனித நீராட்டல்’ என்று பொருள். ஆனி திருமஞ்சன நாளில், சிதம்பரம் நடராஜப் பெருமானை பல்வேறு வகைப் பொருட்களால் நீராட்டுவார்கள். மற்ற சிவாலயங்களிலும் சிவலிங்கத்திற்கு இத்தகைய அபிஷேகங்கள் நடைபெறும். மன அமைதியும், உடல் வலிமையும் தரக்கூடிய மகத்துவம் வாய்ந்த இந்த புண்ணிய தினத்தில் சிவாலயங்களுக்குச் சென்று இறைவனையும் இறைவியையும் வழிபட்டால் நம்முடைய வாழ்வு சிறப்பாக அமையும்.

ஆனி பவுர்ணமி தினத்தன்று உத்திர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது ‘ஆனி திருமஞ்சனம்’ கொண்டாடுவார்கள். உத்திரம் நட்சத்திர நேரத்தில் கொண்டாடப்படுவதால் இந்த விழாவுக்கு ‘ஆனி  உத்திரம்’ என்றும் ஒரு பெயர் உண்டு. அபிஷேக பிரியரான சிவபெருமானுக்கு மனம் குளிர்விக்கும் வகையில் விதம் விதமான பொருட்களால் அபிஷேகம் செய்வார்கள். அதை நேரில் கண்டு 
வழிபட்டால் பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகமாகும். அபிஷேகம் முடிந்ததும் கண்கவர் வகையில் அலங்காரம் செய்யப்படும். அபிஷேக, அலங்காரம் முடிந்த பிறகு நடராஜருக்கு 16 வகை தீபங்களால் ‘ஷோடச ஆராதனை’ காட்டுவார்கள்.

நடராஜரின் இடது பாகம், சக்தி தேவியின் பாகமாக கருதப்படுகிறது. எனவே நடராஜரை வழிபடும்போது அவரது இடது பக்கம் மற்றும் இடது காலையும் சேர்த்து பார்த்து வழிபடுதல் வேண்டும். அப்படி வழிபாடு செய்தால் சிவன்-சக்தி இருவரது அருளாசியையும் பெறலாம். அதுபோல நடராஜரின் வலது பாகம் செல்வத்தை குறிக்கும். அந்த பாகத்தை பார்த்து தரிசனம் செய்தால் குடும்பத்தில் செல்வ வளம் அதிகரிக்கும். ஆனித் திருமஞ்சனம் விழா முதன் முதலில் பஞ்ச பூதத்தலங்களில் ஆகாயத்தைக் குறிக்கும் சிதம்பரம் தலத்தில்தான் தோன்றியது. பதஞ்சலி மகரிஷி இந்த திருவிழாவைத் தொடங்கி 
வைத்ததாக சொல்லப்படுகிறது.

ஆனித் திருமஞ்சனத்தை நேரில் பார்த்தால், என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை நம் முன்னோர்கள் வரையறுத்துள்ளனர். முதலாவது பலன்- நாடு முழுவதும் போதும், போதும் என்று சொல்லும் அளவுக்கு மழை பெய்து, விவசாயம் செழிக்குமாம். விவசாயம் செழித்தால், மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்வார்கள். சுமங்கலிகள் இந்த விழாவில் கலந்து கொண்டால் நீடூழி வாழ்வார்கள். கன்னிப்பெண்கள் பங்கேற்றால் விரைவில் அவர்களுக்கு உரிய இடத்தில் திருமணம் நடைபெறும். எல்லாவற்றுக்கும் மேலாக சிவ-சக்தியின் பேரருள் கிடைக்கப் பெறும்.

Next Story