அனுமன் வழிபாட்டு பலன்


அனுமன் வழிபாட்டு பலன்
x

ராமாயண இதிகாசத்தில் வரும் அனுமன் அதிக சிறப்புகளைக் கொண்டவர். மனிதனாக பிறந்து, மனிதனாக வாழ்ந்த ராமபிரானின் முதன்மை பக்தனாகவும், தூதனாகவும் இருந்து சிறப்பு பெற்றவர் அனுமன். நம் நாட்டில் பெருமாளுக்கு நிகராக, ஆஞ்சநேயருக்கும் ஏராளமான கோவில்கள் அமையப்பெற்றுள்ளன.

இன்றைய பரபரப்பான உலகத்தில், இறை வழிபாடு செய்வதற்குக்கூட பலருக்கும் நேரமில்லை. இறைவனின் அருளைப் பெறுவதற்கு ஆடம்பரமாக பூஜை செய்துதான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. அந்த வகையில் ஆஞ்சநேயரின் அருளைப் பெறுவது மிகவும் சுலபமான காரியம். சாதாரணமாக ‘ஸ்ரீராம் ஸ்ரீராம்’ என்று கூறினாலே, அனுமனின் அருளைப் பெற்றுவிட முடியும். ஏனெனில் ராமபிரானைவிடவும், அவரது ‘ராம’ நாமத்திற்கு சக்தி அதிகம் என்று நம்பியவர், ஆஞ்சநேயர்.

எங்கெல்லாம் ராம நாமம் சொல்லப்படுகிறதோ, அங்கெல்லாம் அந்த நாமத்தைக் கேட்பதற்காக அனுமன் விரைந்து வருவதாக புராணங்கள் சொல்கின்றன. ஆஞ்சநேயரை வழிபட்டால், அவரின் அருளை மட்டுமல்லாது, ராமபிரானின் அருளையும், சிவபெருமானின் அருளையும் கூட சேர்த்தே பெற முடியும். ஏனெனில் தன்னுடைய பக்தனின் பக்தர்கள், ராமனுக்கும் பக்தர்கள்தான். அதே போல் ராமாயணத்தில் அனுமன், சிவபெருமானின் அம்சமாக தோன்றியவர் என்று புராணங்கள் சொல்கின்றன. அதனால் ஆஞ்சநேயரை வணங்கினால், ஈசனின் அருளையும் பெற்றுவிடலாம். அதோடு அனுமனை வழிபட்டால், சனி பகவானின் அனுக்கிரகமும் நமக்கு கிடைக்கும். சனி பகவானால் பிடிக்க முடியாதவர் களாக விநாயகப்பெருமானும், ஆஞ்சநேயரும் மட்டுமே இருப்பதாக புராணக் கதைகள் கூறுகின்றன. எனவே சனிக்கிழமையில் அனுமனை வழிபாடு செய்து வந்தால், சனியின் கடுமையான பார்வையில் இருந்தும் கொஞ்சம் விலக்கு கிடைக்கும்.

ஆலயத்திற்குச் சென்று வழிபட முடியாதவர்கள், இல்லத்திலேயே அனுமனின் படத்தை வைத்து, வெண்ணெய் சாத்தி வழிபாடு செய்யலாம். அதன் மூலம் நம்முடைய துன்பங்களும், வெண்ணெய்யைப் போலவே கரைந்து போகும். ஏதாவது இக்கட்டான சூழ்நிலையில் இருந்தாலோ, அல்லது எதாவது ஒரு விஷயத்தில் வெற்றி தேவை என்று கருதினாலோ, ஆஞ்சநேயருக்கு வெற்றிலையை மாலையாக தொடுத்து சூட்டி வணங்குங்கள். அந்த காரியம் மிக விரைவிலேயே சுமுகமாக நிறைவேறிவிடும். சனிக்கிழமை தோறும் அனுமன் கவசம் படித்து வந்தால், எதிரிகளின் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள்.

அனுமனுக்கு பிடித்தமான நைவேத்தியமாக வெண்ணெய், வடை உள்ளது. அதே போல் திராட்சைப் பழமும் அவருக்கு பிடித்த நைவேத்தியம் ஆகும். காரிய வெற்றிக்கு திராட்சைப் பழத்தை படைத்து வழிபடலாம். அனுமனுக்கு செந்தூரம் பூசி, வடை மாலை சாத்தி, ஸ்ரீராமஜெயம் எழுதி அதை காகித மாலையாக அணிவித்து வந்தால், வேண்டிய வரம் கிடைக்கும். திருமணத்தடை நீங்க வேண்டுமானால், வியாழக்கிழமைகளில் அனுமனுக்கு வெற்றிலை மாலை சாத்தி வழிபட வேண்டும்.

எந்த நைவேத்தியத்தையும், எந்த மாலையையும் சூட்டி வழிபட முடியாதவர்கள், ஏதொன்றும் செய்யத் தேவையில்லை. ‘ஸ்ரீராம் ஜெய்ராம், ஜெய ஜெய ராம்’ என்ற வாக்கியத்தை உச்சரித்து வந்தாலே, உங்கள் வாழ்க்கை இன்பமானதாக மாறும்.

Next Story