இயேசு கற்றுக்கொடுத்த ஜெபம்


இயேசு கற்றுக்கொடுத்த ஜெபம்
x
தினத்தந்தி 2 Aug 2021 6:12 PM GMT (Updated: 2 Aug 2021 6:12 PM GMT)

“நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இவ்வாறு சொல்லுங்கள். தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக.

இயேசு ஓரிடத்தில் இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார். அது முடிந்ததும் அவருடைய சீடர்களுள் ஒருவர் அவரை நோக்கி, “ஆண்டவரே, யோவான் தம் சீடருக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடுத்ததுபோல் எங்களுக்கும் கற்றுக்கொடும்” என்றார்.

அவர் சீடர்களிடம், “நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இவ்வாறு சொல்லுங்கள். தந்தையே, உமது பெயர் தூயதெனப் போற்றப்பெறுக. உமது ஆட்சி வருக. எங்கள் அன்றாட உணவை நாள்தோறும் எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோர் அனைவரையும் நாங்கள் மன்னிப்பதால் எங்கள் பாவங்களையும் மன்னியும். எங்களை சோதனைக்கு உட்படுத்தாதேயும். (தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்)’’ என்று கற்பித்தார்.

மேலும் அவர் அவர்களை நோக்கிப் பின்வருமாறு கூறினார் “உங்களுள் ஒருவர் தம் நண்பரிடம் நள்ளிரவில் சென்று, ‘நண்பா, மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகக் கொடு. என்னுடைய நண்பர் ஒருவர் பயணம் செய்யும் வழியில் என்னிடம் வந்திருக்கிறார். அவருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை’ என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம்.

உள்ளே இருப்பவர், ‘எனக்குத் தொல்லை கொடுக்காதே. ஏற்கனவே கதவு பூட்டியாயிற்று. என் பிள்ளைகளும் என்னோடு படுத்திருக்கிறார்கள். நான் எழுந்திருந்து உனக்குத் தர முடியாது’ என்பார். எனினும் அவர் விடாப்பிடியாய் கதவைத் தட்டிக் கொண்டேயிருந்தால், அவர் தம் நண்பர் என்பதற்காக எழுந்து கொடுக்காவிட்டாலும், அவரது தொல்லையின் பொருட்டாவது எழுந்து அவருக்குத் தேவையானதைக் கொடுப்பார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

மேலும் நான் உங்க ளுக்குச் சொல்கிறேன். கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும். தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள். தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெனில் கேட்போர் எல்லாரும் பெற்றுக்கொள்கின்றனர். தேடுவோர் கண்டடைகின்றனர். தட்டுவோருக்குத் திறக்கப்படுகிறது.

பிள்ளை மீனைக் கேட்டால் உங்களுள் எந்தத் தந்தையாவது மீனுக்குப் பதிலாகப் பாம்பைக் கொடுப்பாரா?, முட்டையைக் கேட்டால் அவர் தேளைக் கொடுப்பாரா?, தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப்பது எத்துணை உறுதி’’ என்றார்.

உலகிலுள்ள நம் நண்பர் உறக்கத்தில் இருக்கிறார், நம் தேவையை அறிந்தும் உதவி செய்யவில்லை, தொல்லையைத் தாங்கமுடியாமல் உதவுகிறார். ஆனால் இறைவன் உறங்குவதில்லை, கேட்குமுன்னரே நம் தேவையை அறிவார். ஆனால், நாம் கதவைத் தட்டவேண்டும், இறைவனைத் தேடவேண்டும், கேட்போர் எல்லாரும் பெற்றுக்கொள்கிறார்கள் என்றே இயேசு கூறுகிறார்.

அதேபோல கேளுங்கள் தரப்படும் என்பது வாக்கு மட்டுமல்ல, அது நம் நம்பிக்கையை குறிக்கிறது.

நமது நம்பிக்கையை அழிக்கும் சோதனைகளும், பெரும் துன்பங்களும் நம் அனைவரின் வாழ்விலும் ஏற்படுகிறது. இந்நேரங்களில், இறைவேண்டல் நமக்கு ஆறுதலையும், நம்பிக்கையையும், வழிகாட்டுதலையும் தருகிறது. நற்செய்தியைக் கைக்கொண்டு, இறையாட்சியின்படி செயல்பட இறைவனிடம் நாம் வேண்டுதல் செய்யவேண்டும். தூய ஆவியின் அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் ஆகிய பண்புகளை இறைவன் அளிக்கிறார். இந்த வெகுமதிகளை நாம் பெற்றுக்கொள்ள முயற்சி செய்வோம்.

Next Story