வித்தியாசமான அம்மன் திருக்கோலம் - இந்த வார விசேஷங்கள்


வித்தியாசமான அம்மன் திருக்கோலம் - இந்த வார விசேஷங்கள்
x
தினத்தந்தி 2 Aug 2021 7:20 PM GMT (Updated: 2 Aug 2021 7:29 PM GMT)

ஆடி மாதத்தில், வித்தியாசமான கோலத்தில் அருள்பாலிக்கும் அம்மனைப் பற்றி அறிந்துகொள்வோம்.

ஆடி மாதம் அம்மன் வழிபாட்டிற்கு உகந்த மாதமாகத் திகழ்கிறது. இந்த ஆடி மாதத்தில், வித்தியாசமான கோலத்தில் அருள்பாலிக்கும் அம்மனைப் பற்றி அறிந்துகொள்வோம்.

* காரைக்குடியில் உள்ள கொப்புடையம்மன் கோவிலில், மூல விக்கிரகம் கிடையாது. உற்சவர் விக்கிரகமே மூலவராக வழிபடப்படுகிறது.

* திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்டான் அருகில் உள்ளது பராஞ்சேரி. இங்கு பள்ளிகொண்ட கோலத்தில் துர்க்கை அம்மனை தரிசிக்கலாம்.

* திருவெண்காட்டில் பிரம்மனுக்கு ஞானம் அருளும் சக்தியாக, ‘பிரம வித்யாம்பிகை’ என்ற பெயரில் அம்பாள் வீற்றிருக்கிறார்.

* மயிலாடுதுறை அடுத்த தருமபுரத்தில் துர்க்கை அம்மனுக்கு தனிக் கோவில் அமைந்துள்ளது.

* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில், எட்டுக் கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் உள்ள துர்க்கை அம்மனை தரிசனம் செய்யலாம்.

* திருவண்ணாமலை மாவட்டம் தேவிகாபுரத்தில் பெரியநாயகி அம்மன் சன்னிதி மலை அடிவாரத்திலும், கனககிரீஸ்வரர் சன்னிதி மலைக்கு மேலேயும் அமைந்திருக்கிறது.

* கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள மாசாணியம்மன் கோவிலில், சயன கோலத்தில் அம்மன் காட்சி தருகிறாள்.

* திருவாரூர் தியாகராஜர் கோவிலில் முருகப்பெருமானின் தலையை தடவிய நிலையில் நீலோத்பலாம்பாளையும், கால்மேல் கால்போட்ட கோலத்தில் கமலாம்பாளையும் தரிசிக்கலாம்.

* திருவெண்காட்டில் உள்ள புதன் தலத்தில், திருஞானசம்பந்தரை இடுப்பில் தூக்கி வைத்த நிலையில் பெரியநாயகி அம்மன் காணப்படுகிறாள்.

* காஞ்சிபுரத்தில் உள்ள ஆதி காமாட்சி ஆலயத்தில், லிங்கத்தின் பாணத்தில் அம்மன் வடிவம் காணப்படுகிறது. இதனை ‘அர்த்தநாரீஸ்வர லிங்கம்’ என்கிறார்கள்.

* கும்பகோணம் அய்யவாடி பிரத்தியங்கிரா ஆலயத்தில், சிம்ம முகத்துடன் அம்மன் அருள்பாலிக்கிறார்.


இந்த வார விசேஷங்கள்

ஆகஸ்டு 3 - ஆடிப்பெருக்கு

ஆகஸ்டு 4 - சர்வ ஏகாதசி

ஆகஸ்டு 5 - கூற்றுவநாயனார் குருபூஜை

ஆகஸ்டு 6 - பிரதோஷம்

ஆகஸ்டு 7 - பர்வதவர்த்தினி பவனி

ஆகஸ்டு 8 - ஆடி அமாவாசை

ஆகஸ்டு 9 - நயினார்கோவில் ரதம்

Next Story