ஆன்மிகம்

பிரிந்த தம்பதிகளை ஒன்றுசேர்க்கும் உமாமகேஸ்வர விரதம் + "||" + God Uma Maheswara united divorced couples

பிரிந்த தம்பதிகளை ஒன்றுசேர்க்கும் உமாமகேஸ்வர விரதம்

பிரிந்த தம்பதிகளை ஒன்றுசேர்க்கும் உமாமகேஸ்வர விரதம்
சிவபெருமானை வழிபட எண்ணற்ற விரதங்கள் இருக்கின்றன. அவற்றுள் முக்கியமானதாக எட்டு விரதங்கள் குறிப்பிடப்படுகின்றன.
அவை:- ‘சோமவார விரதம், திருவாதிரை விரதம், சிவராத்திரி விரதம், பிரதோஷ விரதம், பாசுபத விரதம், அஷ்டமி விரதம், கேதார கவுரி விரதம், உமாமகேஸ்வர விரதம் ஆகியவை ஆகும். இதில் உமா மகேஸ்வர விரதத்தை ஒருவர் முறைப்படி கடைப்பிடித்தால், மற்ற விரதங்களை மேற்கொள்ள வேண்டியதில்லை. அந்த அளவுக்கு அனைத்து சவுபாக்கியங்களையும் தரக்கூடிய விரதமாக ‘உமாமகேஸ்வர விரதம்’ இருக்கிறது.

சிவபெருமானின் காருண்ய மூர்த்தங்களாக 25 மூர்த்தங்கள் குறிப்பிடப்படுகின்றன. ஈசனின் ஐந்து முகங்களான ஈசான முகம், தத்புருஷம், அகோரமுகம், வாமதேவம், சத்யோஜாதம் ஆகிய 5 முகங்களுக்கும், தலா ஐந்து காருண்ய மூர்த்தங்கள் சொல்லப்பட்டுள்ளன. இவற்றுள் சத்யோஜாதம் முகத்திற்குரிய காருண்ய மூர்த்தங்களில் ஒன்றாக இருக்கிறது, ‘உமாமகேஸ்வர வடிவம்.’ சிவபெருமானின் ஈடுஇணையற்ற வடிவங்களில் இது மிகவும் முக்கியமானது. ஏனெனில் இந்த உருவத்தில் சிவபெருமானும், சக்தியும் இணைந்து, சிவ-சக்தி தத்துவத்தை உணர்த்துவதால், இது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.சிவனையும், சக்தியையும் ஒரு சேரத் தியானித்து வழிபட்டால், சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும். அவர்களை வழிபட சிறந்த நாளாக, புராட்டாசி மாதத்தில் வரும் பவுர்ணமி தினம் இருக்கிறது.

இந்த விரதத்தை ஒரு புரட்டாசி மாத பவுர்ணமியில் தொடங்கி, 16 வருடங்கள் தொடர்ச்சியாக கடைப்பிடிக்க வேண்டும். விரத நாளன்று காலையில் குளித்து முடித்து இறைவனை எண்ணி சங்கல்பம் செய்துகொள்ள வேண்டும். பின்னர் ஒரு கலசத்தில் உமா மகேஸ்வரரை ஆவாகனம் செய்து ஷோடச உபசார பூஜைகள் செய்ய வேண்டும். சிலர் உமா மகேஸ்வரர் சிலையை வைத்தும் வழிபடுவார்கள். அப்படி வழிபட்டால் 16 ஆண்டுகள் கழித்து அந்த சிலையை சிவன் கோவிலுக்கு கொடுத்து விட வேண்டும். முதல் ஆண்டு இந்த விரதத்தை தொடங்குபவர்கள் நைவேத்தியமாக அதிரசம் செய்ய வேண்டும். மற்ற ஆண்டுகளில் சிவனுக்கு விருப்பமான எதையும் செய்து படைக்கலாம்.பூஜை முடிந்ததும் சிவனடியார்கள், விருந்தினர்களுக்கு உணவிட்டு, அதன் பிறகே விரதமிருந்தவர்கள் உணவு எடுத்துக்கொள்ளலாம். இந்த விரதத்தின் முக்கிய நோக்கியமே உணவிடுவதுதான். இந்த விரதத்தை மேற்கொண்டால், பிரிந்த தம்பதிகள் மீண்டும் ஒன்றுசேர வாய்ப்பு வந்து சேரும்.

பவுர்ணமியும்.. சிறப்பும்..

சித்திரை மாதம் - சித்ரா பவுர்ணமி

வைகாசி மாதம் - வைகாசி விசாகம்

ஆனி மாதம் - சாவித்திரி விரதம்

ஆடி மாதம் - கோபத்ம விரதம்

ஆவனி மாதம் - ஆவணி அவிட்டம்

புரட்டாசி மாதம் - உமாமகேஸ்வர விரதம்

ஐப்பசி மாதம் - சிவாலயங்களில் அன்னாபிஷேக விழா

கார்த்திகை மாதம் - கார்த்திகை தீபத் திருவிழா

மார்கழி மாதம் - திருவாதிரை விரதம்

தை மாதம் - தைப்பூசம்

மாசி மாதம் - மாசி மகம்

பங்குனி மாதம் - பங்குனி உத்திரம்