உலக அமைதி


உலக அமைதி
x
தினத்தந்தி 5 Oct 2021 1:07 PM GMT (Updated: 5 Oct 2021 1:07 PM GMT)

உலகம் முழுவதும் அமைதி நிலவ வேண்டுமென நம் ஒவ்வொருவரின் உள்ளமும் எதிர்பார்க்கிறது, ஏங்குகிறது. உலக அமைதியை குலைக்கும் காரணிகளை ஒழித்தால் மட்டுமே உலகம் அமைதி பெற வாய்ப்புள்ளது.

நிறத்தால், மொழியால், பிறப்பால் உயர்வு-தாழ்வு கற்பித்தல், ஆளுக்கொரு நீதி, தாமதிக்கும் நீதி போன்றவை தான் அமைதி குலைக்கும் முக்கிய காரணிகள்.

நிறம்

ஒருவரின் தோலின் நிறம் வெள்ளையாக இருப்பதால் அவர் உயர்ந்தவர் அல்லர், கருப்பாக இருப்பதால் அவர் தாழ்ந்தவர் அல்லர். நிறம் நமது தேர்வு அல்ல. ஒரு குடும்பத்தில் பிறக்கும் சகோதரர்களிடமே நிறத்தால் வேறுபாடு இருப்பது உண்டு. தாயின் நிறம் தந்தையின் நிறம் இன்னும் மூதாதையர்களின் நிறம் கூட ஒரு குழந்தையின் நிறத்தை நிர்ணயிக்கவல்லது.

இறைவனுடைய அத்தாட்சிகளில் இவையும் ஒன்று என்று திருகுர்ஆன் இவ்வாறு கூறுகின்றது:

வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பதும், உங்கள் மொழிகளும், உங்கள் நிறங்களும் மாறுபட்டிருப்பதும் அவனுடைய சான்றுகளில் உள்ளவையே. திண்ணமாக, இவற்றிலெல்லாம் அறிவுடையோருக்கு நிறையச் சான்றுகள் உள்ளன.

மொழி

ஒருவர் தன் மொழியை நேசிப்பது, மதிப்பது இயல்பான விஷயம் தான். அதில் தவறு ஏதும் இல்லை. ஆனால் தன் மொழி மட்டும் தான் சிறந்தது, மற்ற மொழிகள் தாழ்வானவை என்ற எண்ணம் தான் தவறானது.

நபிகள் நாயகம் அவர்கள் தமது இறுதி ஹஜ்ஜி உரையில் கூறினார்கள், “ஒரு அரபி, அரபிஅல்லாதவரை விடவோ, உயர்ந்தவரோ, தாழ்ந்தவரோ அல்லர், வெள்ளையர் கருப்பரை விடவோ, கருப்பர் வெள்ளையரை விடவோ உயர்ந்தவரோ, தாழ்ந்தவரோ அல்லர்”.

மொழியாலும் நிறத்தாலும் பெருமை பேசி கொண்டிருந்த மக்களை தம் 23 ஆண்டு கால பிரச்சாரத்தின் மூலம் உயர்வு தாழ்வற்ற சமுதாயத்தை நபிகள் நாயகம் அவர்கள் உருவாக்கினார்கள்.

பிறப்பு

தான் பிறந்த இனம், குலம் உயர்ந்தது என்று ஒரு மாயை உலக அளவில் பல இடங்களில் காண முடிகிறது. இந்த மாயையை உடைத்தெறியவும் சர்வதேச சகோதரத்துவத்தை நிலைநாட்ட இறைமறையின் வசனம் கூறுவதைக் காண்போம்.

“மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும், கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில், உங்கள் இறைவனிடம் அதிக கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர்கள்தாம். திண்ணமாக, அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவனாகவும், தெரிந்தவனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன் 49:13)

உயர்ந்தவர் யாரென்றால், இறையச்சம் உடையவரே! என்று இறைவன் கூறுகின்றான். அவர் எந்த நாட்டை, மொழியை, இனத்தை, குலத்தைச் சார்ந்தவராயினும் சரியே. எனவே, எவரும் உயர்ந்தவராகலாம், இறையச்சம் உடையவராய்த் திகழ்வதன் மூலமாக என்று இறைவன் தெளிவு படுத்துகின்றான்.

ஆளுக்கொரு நீதி

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு பெண்மணி திருடிவிட்டாள். அவளுக்கு தண்டனை கொடுத்தால் உயர் குலத்தைச் சார்ந்தவராக கருதப்படக்கூடிய அந்த குலத்தாருக்கே அவமானம் என்பதால், அவளுக்கு தண்டனையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டுமென தூது அனுப்பினார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகுந்த கோபம் கொண்டவர்களாக கூறினார்கள், “உயர்ந்தவர்களுக்கு ஒரு நீதி, தாழ்ந்தவர்களுக்கு ஒரு நீதி என்று நடந்து கொண்டதால்தான் முன் சென்ற சமுதாயங்கள் அழிந்து போயின. எனவே, அப்படிப்பட்ட தவறைச் செய்வதற்கு நான் ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன். என்னுடைய மகள் பாத்திமா திருடியிருந்தாலும் அவளது கரங்களைத் துண்டிப்பேன்” என்று கூறி, ஆளுக்கொரு நீதி என்ற அநீதியைத் தடுத்தார்கள் என்பதை வரலாறு நிரூபிக்கிறது.

தாமதிக்கும் நீதி

ஒரு தவறு நடந்தால், தீமை நடந்தால் அதை விசாரித்து சாட்சியங்களைக் கொண்டு நிரூபித்துவிட்டு மிக விரைவாக உரிய தண்டனை வழங்கப்பட்டால்தான் தீமைகளைக் களைய முடியும். தவறுகள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க முடியும்.

இவ்வாறாக நிற, மொழி பாகுபாட்டைக் களைந்து பிறப்பால் அனைவரும் சமமானவர்கள் நாம் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்ற உயர் கொள்கைகளை நிலை நிறுத்தி அனைவருக்கும் சமநீதி மற்றும் உரிய நேரத்தில் விரைவான நீதியை வழங்கும் போது உலக அமைதி சாத்தியமாகும்.


Next Story