விண்ணுலக வாழ்வு தரும் பயணங்கள்


விண்ணுலக வாழ்வு தரும் பயணங்கள்
x
தினத்தந்தி 5 Oct 2021 7:03 PM IST (Updated: 5 Oct 2021 7:03 PM IST)
t-max-icont-min-icon

மனிதர்கள் தங்களுடைய தேவைக்காகவும், மன நிம்மதிக்காகவும், வாழ்நாள் முழுவதும் பல இடங்களுக்கு பயணங்களை மேற்கொள்கிறார்கள். அத்தகைய பயணங்கள் அவர்களுடைய வாழ்க்கையில் பல மாற்றங்களையும், அனுபவங்களையும் பெற உதவுகிறது.

இன்னும் சிலருக்கு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கிறது. ‘மீண்டும் இப்படி ஒரு பயணத்தை மேற்கொள்ள முடியுமா?’ என்ற வியப்பை ஏற்படுத்துகிறது. அப்படிபட்ட சில பயணங்கள் விவிலியத்தில் தொடக்க நூல் முதல் வெளிப்பாடு வரை காணப்படுகின்றன. அவற்றில் சிலவற்றை குறித்து பார்ப்போம்.

விண்ணுலக பயணம்

விவிலியத்தில் வித்தியாசமான பயணம் மேற்கொண்டவர்களில் இருவர் ஏனோக்கும், எலியாவும். ஏனோக்கு கடவுளோடு நடந்து கொண்டிருந்த போது அவரை காணவில்லை. ஏனெனில் கடவுள் அவரை எடுத்துக் கொண்டார். எலியாவையோ ஆண்டவர் சுழற்காற்றின் வழியாக விண்ணுலகுக்கு அழைத்துக்கொண்டார். இவர்கள் இருவரும் வெவ்வேறு காலங் களில் வாழ்ந்தாலும், தேவன் தாமே அவர்களை உயிருடன் விண்ணகத்திற்கு அழைத்துக் கொண்டார் என்று விவிலியம் கூறுகிறது.

நோவாவின் பேழை பயணம்

மனிதர்களால் மண்ணுலகில் பாவம் பெருகியபோது, அதை கண்ட தேவன், மனிதரை உருவாக்கியதற்காக மனம் வருந்தினார். அதனால்தான் படைத்த மனிதர் முதல் கால்நடைகள், ஊர்வன, வானத்துப் பறவைகள் வரை அனைத்தையும் அழிக்க அவர் திருவுளமானார். அதேவேளையில் நோவாவோ தம் காலத்தவருள் நேர்மையானவராகவும், குற்றமற்றவராகவும் இருந்தார். நோவா கடவுளோடு நடந்தார். அதனால் தேவன், அவரை ஒரு பேழை செய்யச் சொன்னார். அந்த பேழையில் நோவாவையும் அவரது குடும்பத்தினரையும் மற்றும் அனைத்து உயிரினங்களிலும் ஒரு ஜோடியை ஏற்றி கதவினை அடைத்தார். மண்ணுலகில் மழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்தது. உயர்ந்த மலைகள் கூட நீரில் மூழ்கிப்போயின. ஆனால் நோவா இருந்த பேழையோ, பெரு வெள்ளம் வற்றும் வரை நீரின் மீது பயணம் செய்தது.

செங்கடல் பயணம்

எகிப்தில் அடிமையாக இருந்த இஸ்ரவேல் மக்கள், மோசே தலைமையில் அங்கிருந்து புறப்பட்டனர். அவர்கள் செங்கடல் அருகே வந்தபோது, எகிப்து அரசன் பார்வோன், தன்னுடைய படைகளுடன் அவர்களை பிடிக்க பின்தொடர்ந்து வந்தான். இறைவன் மோசேயை கொண்டு செங்கடலை இரண்டாக பிரித்து, வலப்பக்கத்திலும், இடப்பக்கத்திலும் உள்ள நீர்த்திரளை அவர்களுக்குச் சுவராக நிற்க வைத்து, அதன் நடுவே உலர்ந்த தரையில் அவர்களை நடக்கச் செய்தார். அவர்களுக்கு பின்னால் பார்வோனின் படைகளும் பின் வந்தது. நடுக்கடலில் வந்தபோது அந்த படைகளின் தேர் சக்கரங்களை தேவன் மண்ணில் புதைந்து போக செய்தார். மேலும் பிரிந்த நீர் திரள் ஒன்றாய் சேர்ந்ததில், பார்வோன் படையினர் நீரீல் மூழ்கி இறந்தனர். இஸ்ரவேல் மக்களோ தங்கள் கால்கள் நனையாதபடி செங்கடலை கடந்து பயணம் செய்தனர்.

யோனாவின் பயணம்

இறைவன், தன்னுடைய பணியை செய்யும்படி யோனாவை நினிவே மாநகருக்கு போகச் சொன்னார். அவரோ அதைக் கேட்காமல் ஆண்டவரிடம் இருந்து தப்பியோட நினைத்து, கப்பலில் ஏறி தர்சீசுக்குப் புறப்பட்டார். ஆனால் இறைவன் கடலில் கொந்தளிப்பை ஏற்படுத்தி, மாலுமிகள் மூலம் அவரை கடலில் தூக்கி எறியும் படிச் செய்தார். கடலில் விழுந்த யோனாவை ஒரு பெரிய மீன் விழுங்கும்படி செய்த தேவன், அந்த மீனின் வயிற்றில் இருந்தபடியே யோனாவை, நினிவே மாநகரை அடையும்படி செய்தார்.

இவ்வாறு விவிலியத்தில் பல பயணங்கள் யாரும் கற்பனை செய்திராத வகையில் அமைந்துள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக இயேசு, தனது தந்தையின் கட்டளைப்படி பயணப்பட்டு நம்மை மீட்க விண்ணுலகில் இருந்து மண்ணுலகிற்கு வந்தார். இறைவனின் விருப்பத்தை நிறைவேற்றியவுடன், மீண்டும் விண்ணுலகிற்கு ஏறிச் சென்றார்.

இந்த உலகில் பல பயணங்களை நாம் மேற்கொண்டாலும், நமக்கென்று ஒரு முக்கியமான பயணம் உள்ளது. அது விண்ணுலகை நோக்கி நாம் செல்ல வேண்டிய பயணம். எனோக்கு, நோவா மற்றும் எலியாவை போன்று நாமும் இறைவனின் சித்தத்தை உணர்ந்து அதன்படி செய்யும் போது, செங்கடலில் கால் நனையாமலும், நீரில் சிக்கிக்கொள்ளாமலும் அதனை கடந்து சென்ற இஸ்ரவேல் மக்களைப் போல, இந்த உலகின் பொல்லாப்புகளில் இருந்து நம்மை தப்பிவித்து, நாம் விண்ணகத்தை நோக்கி பயணம் செய்ய இறைவன் நமக்கு அருள் செய்வார்.


Next Story