பெருமாள் திதி கொடுத்த திருத்தலம்


பெருமாள் திதி கொடுத்த திருத்தலம்
x
தினத்தந்தி 5 Oct 2021 1:40 PM GMT (Updated: 5 Oct 2021 1:40 PM GMT)

சென்னை அடுத்த செங்கல்பட்டு அருகே உள்ளது, நென்மேலி கிராமம். அந்தக் காலத்தில் இந்த ஊர் ‘புண்டரீக நல்லூர்’, ‘பிண்டம் வைத்த நல்லூர்’ என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது. இங்கு லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இவ்வாலயம் காசி, கயா திருத்தலங்களுக்கு இணையாகப் போற்றப்படுகிறது.

இந்த ஆலயத்தில் மகாளய அமாவாசை நாட்களில் தர்ப்பணம் செய்வது சிறப்பான பலனைப் பெற்றுத் தரும் என்கிறார்கள். இந்த ஆலயத்தின் உற்சவ மூர்த்தியாக ‘சிரார்த்த சம்ரட்சண நாராயணர்’ அருள்கிறார்.

ஆற்காடு நவாப் காலத்தில் திவானாகப் பணிபுரிந்தவர், ஸ்ரீயாக்ஞ வல்கியரைக் குருவாகக் கொண்ட யாக்ஞ நாராயண சர்மா. இவரது மனைவி சரஸ வாணி. இவர்களுக்கு நென்மேலி தலத்தில் உள்ள பெருமாளின் மீது அளவுகடந்த பக்தி இருந்தது. அந்த பக்தியின் காரணமாக, அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரிப்பணத்தைக் கூட, ஆலயத்தின் திருப்பணிக்காக செலவிட்டுவிட்டனர். இதனால் அவர்களுக்கு அரசாங்கம் தண்டனை வழங்கியது.

அந்த தண்டனையை ஏற்க விரும்பாத அந்த தம்பதி, திருவிடந்தை ஆலய திருக்குளத்தில் மூழ்கி தங்களுடைய உயிரை மாய்த்தனர். அவர்களின் ஈம காரியங்களைச் செய்ய வாரிசு என்று யாரும் இல்லை. இதனால் அவர்களின் ஆன்மா நற்கதி கிடைக்காமல் அலைந்தது. அவர்களின் ஆன்மாவுக்கு நன்மை செய்ய நினைத்த நென்மேலி லட்சுமி நாராயணப் பெருமாள், அந்த தம்பதியருக்கு ஈமக் காரியங்களை செய்ததாக தல வரலாறு சொல்கிறது. தினந்தோறும் பகல் 12 மணி முதல் 1 மணி வரையான காலம், பித்ருக்களின் காலம் என்று கருதப்படுகிறது. இந்த காலவேளையில் நடைபெறும் பூஜையை ஏற்றபடி, இத்தலப் பெருமாள் விரதமிருப்பதாக சொல்லப்படுகிறது.

எனவே இந்த ஆலயத்தில் திதி செய்ய விரும்புபவர்கள், இங்கு பித்ரு கால பூஜை நடைபெறும் வேளையில், அதில் கலந்துகொண்டு பெருமாளிடம் தங்களின் காரியத்தை ஒப்படைக்க வேண்டும். இதனை திதி சம்ரட்சணம் என்கிறார்கள். அந்த நேரத்தில் பெருமாளுக்கு வெண் பொங்கல், தயிர் சாதம், பிரண்டை மற்றும் எள் கலந்து செய்த துவையல் ஆகியவை நைவேத்தியமாக படைக்கப்படுகிறது. இந்த நைவேத்தியங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய பித்ருக்களை திருப்திப்படுத்தும் பணியை பெருமாள் செய்வதாக நம்பிக்கை.

முன்னோர்களின் திதி நாட்கள், அமாவாசை, ஏகாதசி போன்ற நாட்களில், இந்த ஆலயத்தில் நடைபெறும் பித்ரு கால பூஜையில் பங்கேற்பவர்களுக்கு, கயா மற்றும் காசிக்கு சென்று திதி கொடுத்த பலன் கிடைக்கும். இந்த ஆலயத்திற்கு வந்து வழிபடுபவர்களுக்கு, பித்ரு தோஷம் நீங்கும். முன்னோர்களின் சாபத்தால் தடைபட்டு வந்த காரியங்கள் விரைவாக நடைபெறும்.

செங்கல்பட்டில் இருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில், சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, நென்மேலி திருத்தலம்.


Next Story