திருமணத் தடை நீக்கும் புராதனவனேஸ்வரர்
சிவபெருமானை வழிபடும் அடியவர்கள் உச்சரிக்கும் முக்கியமான, வார்த்தையில் ஒன்று ‘திருச்சிற்றம்பலம்.’ மாணிக்கவாசகர் அருளிய நூல் ‘திருவாசகம்.’ இதனை மாணிக்கவாசகர் சொல்லச் சொல்ல சிவபெருமானே எழுதியதாகவும், அந்த பாடலின் முடிவில், ‘திருச்சிற்றம்பலமுடையான்’ என்று கையெழுத்திட்டதாகவும் வரலாறு சொல்கிறது. இதனால் `திருச்சிற்றம்பலம்' என்ற வார்த்தை முக்கியத்துவம் பெறுகிறது.
இந்த சிறப்புமிக்க வார்த்தையின் பெயரில் ஒரு திருத்தலமே அமைந்திருப்பது மேலும் சிறப்பானது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து கீரமங்கலம் செல்லும் சாலையில் இருக்கிறது, திருச்சிற்றம்பலம் என்ற திருத்தலம். இந்த ஆலயத்தில் அருளும் இறைவன் ‘புராதனவனேஸ்வரர்’ என்றும், அம்பாள் ‘பெரியநாயகி’ என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
திருவாரூரில் பிறந்தால் முக்தி, திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி என்பார்கள். அந்த வரிசையில் திருச்சிற்றம்பலம் மண்ணை பூசிக் கொண்டால் முக்தி கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.
இந்த ஆலயத்தில் கொடிமரம் கிடையாது. ஆலயத்திற்கு வெளியே நந்தியம்பெருமானும், அவருக்கு எதிரில் வடக்கு பக்கமாக இரட்டைப் பிள்ளையார் சன்னிதியும் காணப்படுகின்றன. மூலவர் புராதனவனேஸ்வரர் கிழக்கு நோக்கியும், அம்பாள் தெற்கு நோக்கியும் அருள்பாலிக்கிறார்கள். ஆலயத்தின் உட்பிரகாரத்தில் மகா கணபதி காட்சி தருகிறார். இவர் தனது தும்பிக்கை முகத்தை, வடக்குபுறமாக திரும்பிய நிலையில் இருக்கிறார்.
இது தவிர மகாலட்சுமி, வள்ளி-தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான், தட்சிணாமூர்த்தி, சப்தமாதர், சண்டிகேஸ்வரர், லிக்கோத்பவர், பிரம்மன், துர்க்கை, பைரவர், சூரிய- சந்திரர், நவக்கோள்களுடன் கூடிய சிவலிங்கங்கள் என்று வித்தியாசமான திருமேனிகள் பல உள்ளன. ஆலயத்தில் தல விருட்சமாக வில்வ மரம் உள்ளது.
இந்த ஆலயம் திருமணத் தடை நீக்கும் அற்புதத் தலமாக விளங்குகிறது. ஆடி மற்றும் மார்கழி மாதங்களைத் தவிர்த்து மற்ற மாதங்களில் வரும் சுபமுகூர்த்த நாட்களில், இங்கு ஏராளமான திருமண நிகழ்வுகள் நடைபெறுகின்றன. மேலும் காதுகுத்து, நிச்சயதார்த்தம் போன்ற சுப நிகழ்வுகளும் அரங்கேறுகின்றன. இந்த ஆலயம் சிறந்த பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது. இங்குள்ள இறைவனையும், இறைவியையும் வழிபாடு செய்தால், ஆயுள் கூடும் என்பது ஐதீகம்.
Related Tags :
Next Story