ஆன்மிகம்

முருகப்பெருமானின் ஏழாம் படைவீடு + "||" + Seventh Invasion of Lord Murugan

முருகப்பெருமானின் ஏழாம் படைவீடு

முருகப்பெருமானின் ஏழாம் படைவீடு
முருகப்பெருமானுக்கு ஆறு படைவீடுகள் உண்டு என்பது நமக்குத் தெரியும். மருதமலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவில் அவரது 7-ம் படைவீடாக போற்றப்படுகிறது. இங்கு விநாயகரும், முருகப்பெருமானும் சுயம்பு மூர்த்தியாக அருள்கிறார்கள்.
இந்த ஆலயம் பற்றி இங்கே பார்ப்போம்..

* கோவையில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, மருதமலை முருகப்பெருமான் திருக்கோவில்.

* இயற்கை எழில் சூழ்ந்த மலை மீது அமைந்த ஆலயம் இது. மலை மீதுள்ள முருகனை தரிசிக்க 837 படிகள் ஏறிச் செல்ல வேண்டும்.

* மருத மரம் நிறைந்த பகுதி என்பதால் இந்த மலை ‘மருதமலை’ எனப்படுகிறது. இங்கு அருள்பாலிப்பதால் முருகனுக்கு ‘மருதாச்சலமூர்த்தி’ என்ற பெயரும் உண்டு.

* சிவன்- அம்பாளுக்கு நடுவில் முருகன் இருப்பதை, ‘சோமாஸ்கந்தர்’ அமைப்பு என்பார்கள். அந்த வகையில் முருகன் சன்னிதிக்கு வலதுபுறம் பட்டீஸ்வரர், இடதுபுறம் மரகதாம்பிகை சன்னிதிகள் உள்ளன.

* ஆலயத்தின் அடிவாரத்தில் ‘தான்தோன்றி விநாயகர்’ சன்னிதி உள்ளது. இவர் சுயம்பு மூர்த்தியாவார், உடல் இல்லாமல் யானை தலையோடு மட்டுமே காட்சி தருகிறார். இவருக்கு அருகில் முழு உருவ விநாயகர் சிலையும் உள்ளது.

* மூலவரான முருகப்பெருமான், ராஜ அலங்காரம், விபூதிக் காப்பு, சந்தனக்காப்பு என தினமும் மூன்றுவித அலங்காரத்தில் காட்சி தருவார். அர்த்தஜாம பூஜையில் மட்டுமே இந்த மூலவரை தண்டாயுதபாணியாக சுய உருவத்தில் தரிசிக்க முடியும்.

முருகப்பெருமானின் அருள்பெற்றவர், பாம்பாட்டி சித்தர். இவர் வடித்த சிலையே, தற்போது கோவில் மூலஸ்தானத்தில் உள்ளது.

`ஆதி முருகன்’ சன்னிதி தனியாக உள்ளது. இவர் சுயம்பு மூர்த்தியாவார். இவருடன் வள்ளி- தெய்வானையும் சுயம்புவாக உள்ளனர். இவருக்கு பூஜை செய்யப்பட்ட பிறகே, மூலவருக்கு பூஜை செய்யப்படும்.

அரசு, அத்தி, வேம்பு, வன்னி, கெரக்கட்டை ஆகிய ஐந்து மரங்கள் இணைந்து வளர்ந்த மரத்தின் அடியில் ‘பஞ்ச விருட்ச விநாயகர்’ அருள்கிறார்.

பாம்பாட்டி சித்தருக்கு தனிச் சன்னிதி உள்ளது. இவருக்கு, முருகன் பாம்பு வடிவத்தில் காட்சி தந்தார். அதனால் இங்குள்ள நாகர் உருவத்தை, முருகப்பெருமானாகவே நினைத்து வழிபடுகின்றனர்.

இங்குள்ள தீர்த்தத்திற்கு ‘மருது சுனை’ என்று பெயர். ஒரு மருத மரத்தின் அடியில் இந்த சுனை உற்பத்தியாகிறது. இந்த தீர்த்தம்தான், சுவாமிக்கு அபிஷேகம் செய்ய பயன்படுத்தப்படுகிறது.

திருமண வரம், புத்திரப்பேறு வேண்டுபவர்கள், இங்குள்ள மரத்தில் மாங்கல்யக் கயிறு மற்றும் தொட்டில் கட்டி வேண்டிக்கொள்கிறார்கள்.