தீபாவளி தினத்தில் செய்ய வேண்டிய வழிபாடுகள்


தீபாவளி தினத்தில் செய்ய வேண்டிய வழிபாடுகள்
x
தினத்தந்தி 3 Nov 2021 2:22 AM GMT (Updated: 3 Nov 2021 2:22 AM GMT)

தீபாவளித் திருநாளானது, அந்தப் பண்டிகையைக் கொண்டாட மட்டுமின்றி, சில பூஜைகளை செய்யவும் ஏற்ற நாளாக அமைந்திருக்கிறது. தீபாவளித் திருநாளில் இல்லத்தில் செய்யப்பட வேண்டிய பூஜைகளில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.

மகாலட்சுமி பூஜை

திருமகளான லட்சுமிதேவி அவதரித்த நாளாக, தீபாவளி சொல்லப்படுகிறது. எனவே அன்றைய தினம், வீட்டு பூஜை அறையில் மகாலட்சுமி படத்தை வைத்து, அதனை மலர்களால் அலங்கரிக்க வேண்டும். பின்னர் சர்க்கரைப் பொங்கலை நைவேத்தியமாக படைத்து, தீப- தூபங்களால் ஆராதனை செய்து வழிபடுங்கள். இதனால் திருமணம் கைகூடும். வீட்டில் லட்சுமி கடாட்சமும் வந்துசேரும்.

குபேர பூஜை

செல்வத்திற்கு அதிபதி மகாலட்சுமி என்றாலும், அவற்றைப் பிரித்து வழங்கும் நிதிகள் அனைத்தும் குபேரனின் வசம் இருப்பதாக புராணங்கள் சொல்கின்றன. அந்த நிதிகளுக்கு அதிபதியாக குபேரன் பொறுப்பேற்ற தினமாக தீபாவளி இருக்கிறது. எனவே அன்றைய தினம், குபேரன் படத்தை வீட்டில் வைத்து, அதன் இரண்டு பக்கமும் குத்துவிளக்கேற்றி வைத்து, குபேரனுக்கு இனிப்பு பலகாரங்களை நைவேத்தியமாக படைத்து வழிபடுங்கள். இதனால் செல்வ வளம் தேடிவரும்.

கேதார கவுரி விரதம்

சிவபெருமானை நினைத்து பார்வதி தேவி வழிபட்டு பலன் பெற்ற தினம், தீபாவளி. அந்த விரதத்தை ‘கேதார கவுரி விரதம்’ என்பார்கள். சிவ- பார்வதி படத்தை வீட்டில் வைத்து வழிபாடு செய்தால் தம்பதியருக்குள் ஒற்றுமை பலப்படும். இல்லற வாழ்வு சிறப்பாக அமையும். சிவ- பார்வதி படத்திற்கு பதிலாக, அர்த்தநாரீஸ்வரர் படத்தை வைத்து வழிபடுவது இன்னும் சிறப்பு சேர்க்கும்.

சத்யபாமா பூஜை

நரகாசுரன் வதம் செய்யப்பட்ட தினம் தீபாவளி. நரகாசுரனின் தாய் பூமாதேவியாவார். நரகாசுரனுக்கு அவனது தாயால்தான் மரணம் என்பது வரமாக அளிக்கப்பட்டிருந்தது. எனவே பூமாதேவியின் அம்சமாக கிருஷ்ண அவதாரத்தின் போது தோன்றியவர், சத்யபாமா. அவர்தான் கிருஷ்ணருடன் சேர்ந்து நரகாசுரனை அழித்தார். எனவே தீபாவளி அன்று, சத்யபாமாவை வீர லட்சுமியாக பாவித்து பூஜித்து வணங்க வேண்டும்.

முன்னோர் வழிபாடு

துலா மாதமாக சொல்லப்படும் ஐப்பசி மாத அமாவாசை தினம், முன்னோர் வழிபாட்டிற்குரிய முக்கியமான தினமாகக் கருதப்படுகிறது. அவரவர் இல்லத்தில் முன்னோரை நினைத்து இயன்ற அளவு அன்னதானம் செய்வதும், ஆடை தானம் செய்வதும் குடும்பத்தில் மகிழ்ச்சியை வரவழைக்கும்.

குலதெய்வ பூஜை

நாம் எத்தனை தெய்வங்களை வழிபட்டாலும், அவை எதுவும் குலதெய்வ வழிபாட்டிற்கு ஈடாகாது. குலதெய்வத்தை வணங்கினாலே, அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் கிடைத்து விடும். ஒருவரின் குடும்பம் சீராகவும், நல்ல முறையிலும், சச்சரவுகள் இன்றியும் நடைபெற குலதெய்வத்தின் ஆசிர்வாதம் அவசியமானது. எனவே எந்த பண்டிகையாக இருந்தாலும், வீட்டில் குலதெய்வத்தின் படத்தை வைத்து, முதலில் அவரை வணங்கி விட்டு, பிறகு மற்ற தெய்வங்களை வழிபாடு செய்யுங்கள். எல்லா நன்மைகளும் வந்துசேரும்.

Next Story