சமூக பொறுப்புணர்வு அவசியம்...
நபி (ஸல்) அவர்கள் தும்மல் வரும் போது முகத்தை மூடுதலை நோய்த் தடுப்புச் சார்ந்தவையாகக் கருதி, இரு கைகள் அல்லது ஏதேனும் துணிகளைக் கொண்டு முகத்தை மூட கட்டளையிட்டுள்ளார்கள்.
உலகை ஒரு சேர அச்சுறுத்தி வரும் சொல் “கொரோனா”. பலரது வாழ்க்கையைக் கேள்விக் குறிபோல் நிமிரவிடாமல் துரத்துகிறது. இதில் இருந்து மக்களை பாதுகாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. ஆனால் சிலர், அரசின் கட்டுப்பாட்டு விதிகளுக்குச் செவி மடுக்காமல் செயல்படுவது வேதனைக்குரியது. தொற்று நோய் காலங்களில் சமூக விலகலை பின்பற்றுவதே சிறந்தது. இதையே இஸ்லாம் வரவேற்கிறது.
தன்னைச் சுற்றியுள்ள மக்களுக்கு இடையூறு இல்லாத வாழ்க்கை முறைகளை அமைப்பது சமூக பொறுப்புணர்வாகும். இது ஒவ்வொரு மனிதனுக்குள் இருக்க வேண்டிய அழகிய பண்புகளில் ஒன்றாகும்.
தும்மல், இருமல் போன்றவை நோய்கள் பரவ ஒரு காரணியாகும். இது இயற்கையானது என்றாலும் அதனால் மற்றவர்களுக்கு பாதிப்பு எதுவும் வராமல் செயல்படுவது இஸ்லாம் வகுத்த சமூக நலன் கலந்த ஒழுக்க முறைகளாகும்.
நபி (ஸல்) அவர்கள் தும்மல் வரும் போது முகத்தை மூடுதலை நோய்த் தடுப்புச் சார்ந்தவையாகக் கருதி, இரு கைகள் அல்லது ஏதேனும் துணிகளைக் கொண்டு முகத்தை மூட கட்டளையிட்டுள்ளார்கள். இதை பின்வரும் நபிமொழி மூலம் அறியலாம்.
“நபி (ஸல்) அவர்களுக்குத் தும்மல் வந்தால் தமது கைகளாலோ அல்லது ஆடையாலோ தம் முகத்தை மூடி சப்தத்தைக் குறைப்பார்கள்”. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: அபூதாவூத் - திர்மிதி - ஹாக்கிம்)
எச்சிலும், நோய்க்கிருமிகள் பரவ காரணமாக அமைகிறது. இதனால் பல நாடுகளில் பொது இடங்களில் எச்சில் துப்புதல் குற்றமாகக் கருதப்படுகிறது. பொது இடங்களில் எச்சில் துப்புவதை நபி (ஸல்) அவர்களும் கண்டிக்கின்றார்கள். இதுதொடர்பான நபிமொழிகள் வருமாறு:
“ஒரு தினத்தின் அழகிய செயலைச் செய்பவர் யார் எனில்? தமது எச்சிலை ஒதுக்குப்புறமாக, மனிதர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் துப்பியவர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “என் சமூகத்தின் நல்ல செயல்களும், தீய செயல்களும் எனக்கு எடுத்துக்காட்டப்பட்டன. அவற்றில் மூடப்படாத எச்சிலே தீய செயல்களின் பட்டியலில் அதிகமாக இருப்பதாகக் கண்டேன்” (நூல்: முஸ்லிம்).
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக ஒரு முஸ்லிம், தனது முஸ்லிம் சகோதரரை நோய் விசாரிக்கச் சென்று திரும்பும்வரை சுவனத்தின் கனிகளை பறித்துக் கொண்டிருக்கிறார்”. (நூல்: ஸஹீஹ் முஸ்லிம்).
நபி (ஸல்) கூறினார்கள், “நீங்கள் இருக்கும் ஒரு தேசத்தில் தொற்று நோய் பற்றி நீங்கள் அறிந்து கொண்டால், அதிலிருந்து ஓடாதீர்கள்; அது ஒரு குறிப்பிட்ட தேசத்தில் பரவுவதாக நீங்கள் கேள்விப்பட்டால், அந்நிலத்திற்குள் நுழைய வேண்டாம்”. (நூல்: புகாரி).
கொரோனா தொற்றின் வேகம் குறைந்திருந்தாலும், அரசின் கட்டளைகளை பின்பற்றி, நாம் சமூக விலகலை கடைப்பிடித்து, முறையாக முகக்கவசம் அணிந்து, தடுப்பூசிகளையும் பிற மருத்துவ ஆலோசனைகளையும் பயன்படுத்தி வாழ்வோம். நோயற்ற சமூகத்தை உருவாக்க அரசுக்கு ஒத்துழைப்பு கொடுப்போம்.
Related Tags :
Next Story