தெற்கு முகமாக அருளும் தட்சிணாமூர்த்தி


தெற்கு முகமாக அருளும் தட்சிணாமூர்த்தி
x
தினத்தந்தி 18 Nov 2021 9:38 AM GMT (Updated: 18 Nov 2021 9:38 AM GMT)

‘தட்சிணம்’ என்பதற்கு ‘தெற்கு’ என்று பொருள். அதற்கு ‘ஞானம்’ என்ற மற்றொரு அர்த்தமும் உண்டு. ஞானத்தின் திருவுருவமாக தெற்கு நோக்கி அமர்ந்து, தன் பக்தர்களுக்கு அருளை வழங்கும் மூர்த்தி என்பதால் இவருக்கு ‘தட்சிணாமூர்த்தி’ என்று பெயர்.

சின் முத்திரை

வலது கை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டை விரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், சுண்டுவிரல் ஆகிய மூன்றும் தனித்து நிற்கும் அடையாளத்தையே ‘சின்முத்திரை’ என்பார்கள். இதில் கட்டை விரல் கடவுளைக் குறிக்கும். சுட்டு விரல் மனிதனைக் குறிக்கும். நடுவிரல் ஆசையையும், மோதிர விரல் கர்மம் என்ற செயலையும், சுண்டு விரல் மாயையையும் குறிக்கும். மனிதனை மாயை மறைத்து நின்று, ஆசையை ஏற்படுத்தி, கெட்ட கர்மங்களை செய்ய வைக்கிறது. அந்த மூன்றையும் கடந்து, இறைவனை நினைத்து வழிபட்டால், அந்த இறைவனோடு ஐக்கியமாகலாம் என்பதையே இந்த முத்திரை நமக்கு பறைசாற்றுகிறது.

குருவாக வணங்குவது ஏன்?

குரு என்ற வடமொழி சொல்லுக்கு, பெரியவர், பிதா, அரசன் போன்ற பொருள் உண்டு. ‘கு’ என்பது ‘இருள்’ அல்லது ‘அறியாமை’ என்றும், ‘ரு’ என்றால் ‘போக்குவது’ என்றும் பொருள்படும். உயிர்களின் அறியாமையை போக்குபவரே குரு. சிவனும் மக்களின் உலக இன்பம் தேடும் அறியாமையைப் போக்கி, தன்னோடு இணைத்து நிரந்தரமான இன்பம் தருபவர். அனைத்திலும் பெரியவராகவும், ஜீவராசிகளுக்கெல்லாம் தந்தையாகவும், சிறந்த அரசனாகவும் இருப்பவர். அதனாலேயே தட்சிணாமூர்த்தியையும் குருவாக நினைத்து வழிபடுகிறோம்.

வியாக்யான தட்சிணாமூர்த்தி

யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யானம் என்ற நான்கு நிலைகளில், தட்சிணாமூர்த்தி வழிபடப்படுகிறார். பெரும்பாலான கோவில்களில் வியாக்யான தட்சிணாமூர்த்தியே வீற்றிருப்பதை நாம் காணலாம். வேதாகமங்களின் நுட்பமான உண்மைகளை இவரே விளக்கி அருள்கிறார். வேதத்தின் பொருள் புரியாத சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்ற நான்கு முனிவர்களுக்கும், வேதத்தின் பொருளை விளக்கிக் கூறினார். எனவேதான் இந்த நான்கு முனிவர்களும் அவர் பாதத்தின் அடியில் வீற்றிருக்கின்றனர்.

வழிபாடு

தட்சிணாமூர்த்திக்கு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், நெய் ஆகியவை கலந்து விளக்கேற்றி வழிபட வேண்டும். 11 அல்லது 21 விளக்குகள் ஏற்றலாம். தட்சிணாமூர்த்தியை வலம் வரும்போது 3, 9, 11 ஆகிய முறைகளில் சுற்றிவர வேண்டும். அவருக்கு பிடித்த முல்லைப்பூ மாலை அணிவித்து, கொண்டைக்கடலை, வெற்றிலை, பாக்கு, பழத்துடன் வழிபட வேண்டும்.

குரு - தட்சிணாமூர்த்தி வித்தியாசம்

பக்தா்கள் பலரும் தட்சிணாமூர்த்தியையும், நவக்கிரகத்தில் வீற்றிருக்கும் குரு பகவானையும், ஒருவரே என்று நினைத்து வழிபடுகிறார்கள். ஆனால் தட்சிணாமூர்த்தி வேறு.. நவக்கிரகத்தில் வீற்றிருக்கும் குரு பகவான் வேறு என்பதை நாம் உணர வேண்டும். தட்சிணாமூர்த்தியின் திசை தெற்கு. அவர் சிவாலயங்களில் தெற்கு நோக்கி வீற்றிருப்பதை நாம் காண முடியும். அதே நேரம் நவக்கிரகத்தில் உள்ள குரு பகவான் அதில் வடக்கு திசை நோக்கி இருப்பார். ஆனால் இருவரும் தங்களின் தொழிலால் ஒன்றுபடுகிறார்கள். ஆம்... இருவருமே குருவிற்கான வேலையைச் செய்கிறார்கள். தேவர்களின் ஆலோசகராகவும், குருவாகவும் இருப்பவர் பிரகஸ்பதி. இவரை வியாழ பகவான் என்பார்கள். 

இவரே நவக்கிரக அந்தஸ்து பெற்ற குரு பகவான். தட்சிணாமூர்த்தி என்பவர், சிவபெருமானின் அம்சமாக தோன்றியவர். இவர் அம்பாளுக்கும், சனகர், சனாதனர் உள்ளிட்ட நான்கு முனிவர்களுக்கும், நான்கு வேதங்களையும் கற்பித்தவர். இருவருக்கும் மஞ்சள் ஆடையே, வஸ்திரமாக அணிவிக்கப்படுகிறது.

Next Story