நலிந்தவர்களின் நலன் காப்போம்...


நலிந்தவர்களின் நலன் காப்போம்...
x
தினத்தந்தி 19 Nov 2021 9:53 AM GMT (Updated: 19 Nov 2021 9:53 AM GMT)

நலிந்தவர்களின் உரிமைகளை மீட்டுக்கொடுப்பதில் இஸ்லாம் முனைப்புக் காட்டுகிறது. சமுதாயத்தில் செல்வாக்கு மிக்க பலசாலிகளுடன் போட்டி போட்டு தங்களின் உரிமைகளை போராடி பெறுவதில் பலமிழந்து பின்தங்கி இருப்பவர்கள்தான் இந்த நலிந்த பிரிவினர்.

தங்களின் உரிமைகளையும், சலுகைகளையும் பெறமுடியாமல் தவியாய் தவிக்கும் இவர்களின் முன்னேற்றத்திற்கு அவர்களின் இயலாமையும், பலவீனமும் காரணமாக அமைந்து விடுகிறது. இந்த பிரிவினர் சமுதாயத்தில் பலவிதமான முகங்களாக பரவலாக காணப்படுகின்றனர்.

இவர்களின் கண்ணீரைப் போக்க, துயரங்களை துடைக்க இஸ்லாம் பாடுபடுகிறது, ஆக்கப்பூர்வமான பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

பராஉ பின் ஆஸிப் (ரலி) அறிவிக்கிறார்: “நபி (ஸல்) அவர்கள் ஏழு விஷயங்களைக் கடைப்பிடிக்கும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். அவற்றில் ஒன்று ‘நலிந்தவருக்கு உதவுவது’ என்றார்கள்”. (நூல்: புகாரி)

‘கணவனை இழந்த கைம்பெண்ணுக்காகவும், ஏழைகளுக்காகவும் பாடுபடுபவர் இறைவழியில் அறப்போர் புரிபவரைப் போன்றவராவார், அல்லது இரவில் நின்று வணங்கி, பகலில் நோன்பு நோற்பவர் போன்றவராவார் என நபி (ஸல்) கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)

“ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், ‘நான் இந்த அறப்போரில் கலந்து கொள்ளட்டுமா?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘உனக்குத் தாய்-தந்தை உண்டா?’ என்று கேட்டார்கள். அவர், ‘ஆம்’, என்றார். ‘அவ்வாறாயின் அவர்கள் இருவருக்காகவும் பாடுபடு’ என்று கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: புகாரி)

முஸ்அப் பின் ஸஅத் (ரலி) அறிவிக்கிறார்: “என் தந்தை ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) ‘தம் வீரச்செயல்களின் காரணத்தால் தமக்குப் பிறரைவிட ஒரு சிறப்பு இருக்கவேண்டும். (போரில் கிடைக்கும் செல்வத்தில் அதிகப்பங்கு கிடைக்க வேண்டும்)’ எனக் கருதினார். உடனே நபி (ஸல்) அவர்கள், ‘உங்களிடையேயுள்ள நலிந்தவர்களின் பொருட்டால்தான் உங்களுக்கு (இறைவனின் தரப்பிலிருந்து) உதவி கிடைக்கிறது’ என்று கூறினார்கள்”. (நூல்: புகாரி)

“இறைவனின் உதவி இந்த சமுதாயத்திற்கு கிடைப்பதெல்லாம் நலிந்தவர்களின் பிரார்த்தனையாலும், அவர்களின் தொழுகையாலும், அவர்களின் தூய எண்ணத்தினாலும்தான் என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: முஸ்அப் பின் ஸஅத் (ரலி), நூல்: நஸயீ)

“என்னை நலிந்தவர்களுடன் தேடிக்கொள்ளுங்கள் என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அபூதர்தா (ரலி), நூல்: நஸயீ)

“சொர்க்கவாசிகள் யார் என்று நான் உங்களுக்கு தெரிவிக்கட்டுமா? அவர்கள் (மக்களின் பார்வையில்) நலிந்தவர்கள்; பணிவானவர்கள். அவர்கள் இறைவனின் மேல் ஆணையிட்டு எதையேனும் கூறினால், இறைவன் அதை அவ்வாறே நிறைவேற்றி வைப்பான் என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர் : ஹாரிஸா பின் வஹ்ப் (ரலி), நூல்: புகாரி)

ஆபூபக்கர் (ரலி) அவர்கள் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்த போது, அவர்கள் ஆற்றிய முதல் உரையில், ‘மக்களே! நான் உங்கள் மீது தலைமை பொறுப்பேற்றுள்ளேன். நான் உங்களைக் கொண்டு உயர்ந்தவன் அல்ல. நான் நல்லது செய்தால், எனக்கு உதவிடுங்கள். நான் தவறு செய்தால் என்னை நேராக வழி நடத்துங்கள். உண்மை அமானிதமாகும். பொய் மோசடியாகும். உங்களில் நலிந்தவர் என்னிடம் பலசாலி ஆவார். அவரின் (இழந்த) உரிமைகளை மீட்டுக் கொடுப்பேன். உங்களில் பலசாலி என்னிடம் பலம் அற்றவர் ஆவார். அவரிடமிருந்து நலிந்தவரின் உரிமையை மீட்டெடுப்பேன்’ என்று சபதம் எடுத்தார்கள்.

“இறைவா! பெண்கள், அநாதைகள் ஆகிய இரு நலிந்த பிரிவினரின் உரிமைகளை நான் பாழ்படுத்துவதை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு வேண்டுகிறேன் என நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்”.

நலிந்தவர்களின் உரிமைகளை பறிக்காமல், அவர்களின் உரிமைகளை வழங்கிட இஸ்லாம் வலியுறுத்துகிறது. அதன்படி நடக்க நாம் அனைவரும் உறுதி கொள்வோம்.

அ. செய்யது அலி மஸ்லஹி, திருநெல்வேலி டவுண்.

Next Story