ஆன்மிகம்

பலவித கோலத்தில் தட்சிணாமூர்த்தி + "||" + God Dakshinamurthy in various spheres

பலவித கோலத்தில் தட்சிணாமூர்த்தி

பலவித கோலத்தில் தட்சிணாமூர்த்தி
ஜடாயுபுரீஸ்வரர் கோவிலின் பிரகாரத்தில் 12 ராசிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட ராஜ சிம்மாசனத்தில் தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார்.
* மன்னார்குடியில் இருந்து பெருகவாழ்ந்தான் செல்லும் வழியில் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, கழுகத்தூர். இங்கு சவுந்தரநாயகி உடனாய ஜடாயுபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் பிரகாரத்தில் 12 ராசிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட ராஜ சிம்மாசனத்தில் தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். இங்கு ஒரு ராசியைக் கூறி அர்ச்சனை செய்தால், 12 ராசிகளுக்கும் அர்ச்சனை செய்த பலன் கிடைக்கும்.

* பொதுவாக சிவன் கோவில்களில் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தி, சிவன் சன்னிதியின் கோஷ்டத்தில் தெற்கு திசை நோக்கி அருள்பாலிப்பார். ஆனால், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகிலுள்ள திருநறையூர் (நாச்சியார்கோயில்) சித்தநாதேஸ்வரர் கோவிலில், தட்சிணாமூர்த்தியை மேற்கு நோக்கிய கோலத்தில் தரிசிக்கலாம். இத்தலத்தில் மூலவர் சித்தநாதேஸ்வரரும், மேற்கு நோக்கியே இருப்பது கூடுதல் சிறப்பு. இங்குள்ள தட்சிணாமூர்த்திக்கு எதிரே நவக்கிரக சன்னிதி இருக்கிறது. ஜாதக ரீதியாக தோஷம் உள்ளவர்கள் தட்சிணாமூர்த்திக்கும், நவக்கிரக சன்னிதியில் உள்ள குரு பகவானுக்கும் பூஜை செய்து வழிபடுகிறார்கள்.

* தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் உள்ளது, திருவிடைமருதூர். இங்கு மகாலிங்க சுவாமி கோவில் இருக்கிறது. இங்குள்ள தட்சிணாமூர்த்தி ராஜ அலங்காரத்தில் சிம்மாசனத்தில் மனைவியுடன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

* திருவையாறு ஐயாறப்பன் கோவிலில் கபாலமும் சூலமும் ஏந்தியவராக தட்சிணாமூர்த்தி காட்சியளிக்கிறார். இவர் காலடியின் கீழ் ஆமை போன்ற உருவம் காணப் படுகிறது. இதுபோன்ற அமைப்பை வேறெந்த கோவிலிலும் காணமுடியாது.

* தஞ்சாவூர் மாவட்டம் திருவைகாவூர் திருத்தலத்தில் வில்வவனேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் வேறு எங்கும் இல்லாத வகையில், கையில் கோலேந்திய தட்சிணாமூர்த்தி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

* தஞ்சாவூர் மாவட்டம் மேலைத்திருப்பூந்துருத்தியில் புஷ்பவனேஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள தட்சிணாமூர்த்தி, கையில் வீணையுடன் ‘வீணா தட்சிணாமூர்த்தி’யாக அருள்பாலிக்கிறார்.

* எல்லா கோவில்களிலும் அபயமுத்திரையுடன் காட்சியளிக்கும் குரு பகவான், தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாளுக்கு அருகிலுள்ள திருலோக்கியில் அஞ்சலி முத்திரையில், கும்பிட்ட பெருமானாகக் காட்சி தருகிறார்.

கடலூர் மாவட்ட குரு தலங்கள்

* கடலூர் அருகிலுள்ள தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீஸ்வரர் கோவிலில் இரண்டு கால்களையும் மடக்கி பீடத்தின் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார், தட்சிணாமூர்த்தி. இவருக்கு கீழே முயலகன் இல்லை. நான்கு சீடர்கள் மட்டும் உள்ளனர். விவசாய தம்பதியருக்கு அருள் செய்வதற்காக, முதியவர் வேடத்தில் வந்த சிவன், அவர்கள் படைத்த உணவை வயலில் இரண்டு கால்களையும் மடக்கி அமர்ந்து சாப்பிட்டுச் சென்றார். இதன் அடிப்படையிலேயே, இக்கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி கோலம் அமைந்திருப்பதாகச் சொல்கிறார்கள். இவரை ‘தவ தட்சிணாமூர்த்தி’ என்று அழைக்கிறார்கள். இவரிடம் வேண்டிக்கொண்டால் உணவிற்கு பஞ்சம் இல்லாத நிலை ஏற்படும், விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கை.

* கடலூர் ஓமாம்புலியூர் பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் கோவிலில் சுவாமி சன்னிதிக்கும், அம்மன் சன்னிதிக்கும் மத்தியில் மகாமண்டபத்தில் தட்சிணாமூர்த்தி அமர்ந்து அருள்பாலிக்கிறார். உமாதேவியாருக்கு பிரணவ மந்திரத்தின் பொருளை சிவன் உபதேசித்ததால், இது குருமூர்த்தி தலமாக கருதப்படுகிறது. குருவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இத்தலத்தில் மற்ற நவக்கிரகங்கள் கிடையாது. இப்படிப்பட்ட அமைப்பு தமிழகத்தில் வேறு எங்கும் இல்லை.

* சிதம்பரத்துக்குத் தென்கிழக்கில் 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிவபுரி என்னும் திருநெல்வாயை அடுத்துள்ள மேலை திருக் கழிப்பாலை திருத்தலத்தில் அமைந்துள்ள தட்சிணாமூர்த்தி, காசியில் இருந்து கொண்டுவரப்பட்ட பளிங்குக்கல்லால் உருவானவர்.

* சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வடதிசையில் உள்ள ஆத்மநாதசுவாமி கோவிலில் தட்சிணாமூர்த்தி யோகநிலையில் அருள்பாலிக்கிறார்.