ஆன்மிகம்

வாழ்க்கையின் நோக்கம் + "||" + The purpose of life

வாழ்க்கையின் நோக்கம்

வாழ்க்கையின் நோக்கம்
மாலுமி இல்லாத கப்பல், ரேடார் இல்லாத விமானம், இலக்கு இல்லாத பயணி எப்படி இல்லையோ, அவ்வாறே நோக்கம் இல்லாத வாழ்க்கையும் இல்லை. வாழ்க்கை ஒரு பயணம். தாயின் கருவறை அதன் ஒரு நிலையம் என்றால் இவ்வுலகமும் ஒரு நிலையம்தான். எனவே பயணம் தொடர்கிறது.
இவ்வுலகில் மனிதன் அமைதியாக வாழ உலக படைப்புகள் அவனுக்கு சேவை செய்கின்றன. நிலம், காற்று, நீர், கடல், இரவு, பகல், காலை, மாலை என்று சொல்லிக்கொண்டே போகலாம். இவைகள் அனைத்தும் மனிதனுக்கு சேவை செய்கின்றன என்றால் மனிதன் யாருக்கு சேவை செய்ய வேண்டும் என்ற இயல்பான, அடிப்படையான கேள்வி எழுகின்றது.

திருக்குர் ஆன் கூறுகிறது: “நாம் இந்த வானத்தையும், பூமியையும், அவற்றிக்கிடையே உள்ள இந்த உலகத்தையும் வீணாகப் படைத்திடவில்லை”. (38:27)

“நாம் இந்த வானத்தையும், பூமியையும், அவற்றிக்கிடையே உள்ளவற்றையும் விளையாட்டிற்காக படைக்கவில்லை”. (21:16)

இறைவன் இவ்வுலகில் மனிதனைப் படைத்து, அவன் வாழ்வதற்குத் தேவையான எல்லா வாழ்க்கை வசதிகளையும் ஏற்படுத்தித் தந்திருக்கிறான். எல்லாவிதமான நற்பேறுகளையும், அருட்கொடைகளையும் அவனுக்கு கொடுத்திருக்கிறான். ஆக எல்லா படைப்புக்கும் நோக்கம் உண்டு. நமது வாழ்க்கைக்கும் நோக்கம் உண்டு. எதுவும் தற்செயலாக, நோக்கமில்லாமல் இயங்குவதில்லை. வீண் விளையாட்டிற்காகவும் அல்ல. எல்லா படைப்புகளும் மனிதனுக்காக, மனிதனோ படைத்த இறைவனை வணங்கி, அவன் வழிகாட்டல்படி வாழ்ந்து நன்றி செலுத்துவதற்காக.

“என்னை அடிபணிவதற்க்கே மனிதர்களை நான் படைத்தேன்” என்று திருக்குர் ஆன் எடுத்துரைக்கிறது.

இறைவன் நமக்குச் சிந்திக்கும் ஆற்றலைத் தந்திருக்கிறான். எது நல்லது? எது கெட்டது? என்பதைப் பிரித்தறியும் ஆற்றலைத் தந்திருக்கிறான். இதைப் புரிந்து கொண்டு நாம் நல்ல செயல்களில் ஈடுபட வேண்டும். இதுதான் இவ்வுலகில் இறைவன் புறத்திலிருந்து நாம் சந்திக்கும் சோதனையாகும்.

“அவன் மரணத்தையும், வாழ்வையும் ஏற்படுத்தினான், உங்களில் யார் மிகச்சிறந்த செயல் புரியக்கூடியவர் என்று உங்களைச் சோதிக்கும் பொருட்டு! மேலும், அவன் வல்லமை மிக்கவனாகவும் பெரும் மன்னிப்பாளனாகவும் இருக்கின்றான்”. (திருக்குர் ஆன் 67:2).

எனவே இறைவன் வைத்த சோதனையில் நாம் வெற்றி பெற வேண்டும். இவ்வுலக வாழ்க்கை ஒரு நிலையம் என்றால், மரணம் பிறிதொரு நிலையம். மறுமை என்ற மரணத்திற்கு பின் வரும் வாழ்க்கை, தீர்ப்பு நாள் ஆகும். நல்லவர்களுக்கு சொர்க்கம், தீயவர்களுக்கு நரகம் என்று இந்த பயணம் இறுதியாக முடிவு பெறுகிறது.

நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்: “நாளை மறுமையில் ஐந்து கேள்விகளுக்கு மனிதன் பதில் சொல்லாத வரையில் அவன் அந்த இடத்தை விட்டு நகர முடியாது. அவை: 1. தனது வயதை எந்தச் செயல்களில் கழித்தான்?, 2. தன் இளமையை எதில் பயன்படுத்தினான்?, 3. செல்வத்தை எவ்வாறு சம்பாதித்தான்?, 4. சம்பாதித்த செல்வத்தை எவ்வாறு செலவழித்தான்?, 5. கற்ற கல்வியின்படி எந்த அளவுக்குச் செயல் புரிந்தான்?”

எனவே, நோக்கம் அறிந்து வாழ்வோம், நமது பயணம் சுக பயணமாக அமையட்டுமாக!

நசீர் அதாவுல்லாஹ், சென்னை.