“பிறர் நலம் நாடுவோம்”


“பிறர் நலம் நாடுவோம்”
x
தினத்தந்தி 17 Dec 2021 10:43 AM IST (Updated: 17 Dec 2021 10:43 AM IST)
t-max-icont-min-icon

இஸ்லாமிய மார்க்கம் என்பதே பிறர் நலம் சார்ந்துதான் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதன் அறிவுரைகள், வழிகாட்டு நெறிமுறைகள், வாழ்வியல் தத்துவங்கள் யாவும் பிறர் நலம் குறித்து அதிகம் பேசுவதை காண்கிறோம்.

சுயநலம் என்பது இஸ்லாத்திற்கு அப்பாற்பட்டது. பிறர்நலம் என்பது இஸ்லாத்திற்கு உட்பட்டது. சுயநலம் என்பது நயவஞ்சகத்தன்மை. பொதுநலம், பிறர்நலம் என்பது இறைநம்பிக்கையின் ஓர் அடையாளம்.

“அல்லாஹ்வுக்கும், அவனின் தூதருக்கும், முஸ்லிம்களின் தலைவர்களுக்கும், முஸ்லிம் பொது மக்களுக்கும் நலம் நாடுவதுதான் மார்க்கம் ஆகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: தமீமுத்தாரீ (ரலி), நூல்: புகாரி)

“நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘தொழுகையை நிலை நிறுத்துவதாகவும், ஜகாத் வழங்குவதாகவும், ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நலம் நாடுவதாகவும் உறுதிமொழி எடுத்தேன்’ என ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) கூறுகிறார்”. (நூல்: புகாரி)

ஜரீர் பின் அப்துல்லாஹ் கூறுவதாவது: “நான் ஒரு முறை நபி (ஸல்) அவர்களிடம் சென்று ‘இஸ்லாத்தைத் தழுவுவதாகத் தங்களிடம் உறுதிமொழி எடுக்க வந்திருக்கிறேன்’ என்றேன். அப்போது அவர்கள், ‘முஸ்லிம்கள் ஒவ்வொருவருக்கும் நலம் நாட வேண்டும்’ என எனக்கு நிபந்தனை விதித்தார்கள். அதன்படி உறுதிமொழி கொடுத்தேன்”. (நூல்: புகாரி)

நபி (ஸல்) அவர்கள் ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்களை, இறைநம்பிக்கை, இறைவணக்கங்களாக அமைந்துள்ள தொழுகை, ஜகாத் போன்றவற்றை செயல்படுத்துவதின் அடிப்படையில் மட்டுமே நிபந்தனை விதித்து, இஸ்லாத்தில் இணைத்துக் கொள்ளவில்லை. இதையும் தாண்டி ‘ஒவ்வொருவருக்கும் நலம் நாடவேண்டும்’ என்பதையும் சேர்த்து, நிபந்தனை விதித்து இஸ்லாத்தில் சேர்த்துக் கொண்டார்கள்.

பிறருக்கு நலம் நாடுவது என்றால் என்ன?

பிறர் நலம் நாடுவது என்றால் தமக்கு விரும்புவதையே பிறருக்கு விரும்புவதும், பிறர் நலனை கெடுக்காமலிருப்பதும், அவருக்கு அனைத்து நலன்களையும், பலன்களையும் சேர்த்து வைப்பதும் ஆகும். அவருக்கு தம்மால் வரும் கெடுதிகளையும், பிறரால் ஏற்படும் கெடுதிகளையும் விட்டு தடுப்பது ஆகும். அவரின் அறியாமை இருளை நீக்கி, கல்வி ஒளியை சேர்ப்பதும் ஆகும். இவ்வாறு நடப்பவரே உண்மையான முஸ்லிம் ஆவார். இவ்வாறு நடப்பதே உண்மை இஸ்லாம்.

“பிற முஸ்லிம்கள் எவருடைய நாவு, கையின் தொல்லைகளில்இருந்து பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே முஸ்லிமாவார் என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: புகாரி)

“இறைத்தூதர் அவர்களே! இஸ்லாத்தில் சிறந்தது எது?” என்று நபித்தோழர்கள் கேட்டதற்கு “எவருடைய நாவிலிருந்தும், கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறாரோ அவரின் செயலே சிறந்தது என்று நபி (ஸல்) பதில் கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அபூமூஸா (ரலி), நூல்: புகாரி)

“உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார் என நபி (ஸல்) கூறினார்கள்”. (அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி)

“ஒருவர், கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காகப் பிரார்த்தித்தால், அதற்கென நியமிக்கப்பட்டுள்ள வானவர், ‘ஆமீன் (இறைவா! ஏற்றுக் கொள்வாயாக) அதைப் போன்றே உமக்கும் கிடைக்கட்டும்!’ என்று கூறுகிறார் என நபி (ஸல்) தெரிவித்தார்கள்”. (அறிவிப்பாளர்: அபூதர்தா (ரலி), நூல்: முஸ்லிம்)

ஒருவர் தமது நலனுக்காக மட்டும் பிரார்த்திக்கும் போது, அந்த பிரார்த்தனை ஏற்பதற்காக யாரும் ‘ஆமீன்’ என்று சொல்வது கிடையாது. அதே வேளையில் பிறர் நலனுக்காக சேர்த்து பிரார்த்திக்கும் போது, அந்தப் பிரார்த்தனைக்கு வானவர் ‘ஆமீன்’ கூறி, அது இறைவனிடம் உடனடியாக ஏற்றுக் கொள்ளப்படுவதற்காக உதவியும் புரிகிறார். அவருக்கு கிடைப்பதெல்லாம் உனக்கும் கிடைக்கட்டும் என்றும் ஆசைப்படுகிறார். பிறர் நலனில் அக்கறை கொள்ளும்போது நமது நலனில் வானவரே அக்கறை கொள்கிறார். இறைவனும் அக்கறை கொண்டு நமது நலன் சிறக்க, நமது வாழ்வு வளம்பெற உதவியும், கருணையும் புரிகின்றான்.

பிறர் நலன் நாடு! உன் நலன் சிறக்கும்!

அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
1 More update

Next Story