கிறிஸ்து பிறப்பும், நற்செய்தியும்..


கிறிஸ்து பிறப்பும், நற்செய்தியும்..
x
தினத்தந்தி 26 Dec 2021 7:19 AM GMT (Updated: 26 Dec 2021 7:19 AM GMT)

கடவுள் வடிவில் விளங்கிய இறைமகன் இயேசு, மனிதர்களின் மீட்புக்காகத் தம்மையே வெறுமையாக்கி, கன்னி மரியாவின் வயிற்றில் மனித உடலேற்றார்.

இறைமகன் மனிதரான இந்த கிறிஸ்துமஸ் விழாவில், கடவுள் வெளிப்படுத்திய அன்பையும் தாழ்ச்சியையும் கற்றுக் கொள்ள அழைக்கப்படுகிறோம். மாட்சிமிகு கடவுள் தமது அன்பின் வெளிப்பாடாக தமது ஒரே மகனை இந்த உலகிற்கு பரிசாக அளித்தார் என்பது நம் மகிழ்ச்சியை அதிகரிக்கிறது.

தொடக்கத்தில் கடவுளோடு கடவுளாக இருந்த கடவுளின் வாக்கே மனித வடிவில் இயேசுவாகத் தோன்றினார். கடவுளின் வாக்கை மீறி கீழ்ப்படியாமையால் மனிதர் செய்த பாவம், மனித வடிவில் தோன்றிய கடவுளின் வாக்கான இயேசுவில் நம்பிக்கை கொண்டு அவருக்கு கீழ்ப்படிவதன் வழியாக நீக்கப்படுகிறது. இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டால் விண்ணக வாழ்வைப் பெறுவதற்கான மீட்பு நமக்கு கிடைக்கும் என்பது உறுதி.

கடவுள் தமது ஒரே மகனை, கன்னி மரியாளின் மகனாக சாதாரண பெண்ணிடம் பிறந்தவராக அனுப்பினார். இறைமகன் இயேசு மனிதராகப் பிறந்ததால் நமது மீட்பு உறுதியானது. இயேசுவின் பிறப்பு முதலில் இடையர்களுக்கு அறிவிக்கப்பட்டது என்று பைபிள் கூறுகிறது. யூத சமூகத்தில் இடையர்கள் ஏழைகளாக இருந்ததுடன் பாவிகள் என்று ஒதுக்கப்பட்ட நிலையில் வாழ்ந்தார்கள். இத்தகைய மக்களுக்கு புதுவாழ்வு அளிப்பதே இயேசுவின் திருப்பணியாக அமைந்தது.

இயேசுவின் பிறப்பை விண்மீன் அடையாளத்தால் அறிந்த கீழ்த்திசை ஞானிகள், தங்களைத் தாழ்த்திக் கொண்டு இறைமகனை வணங்கச் சென்றார்கள். பொன், சாம்பிராணி, வெள்ளைப்போளம் என்று அவர்கள் இயேசுவுக்கு அளித்த காணிக்கைகள், அவரது மூன்று இயல்புகளைக் காட்டுகின்றன.

அரசர் என்பதைப் பொன்னும், கடவுள் என்பதை சாம்பிராணியும், மனிதர் என்பதை வெள்ளைப்போளமும் காட்டுகின்றன. இயற்கை அனைத்தின் அரசரான கடவுள் நம்மிடையே வந்து குடிகொள்ள மனிதராகப் பிறந்தார் என்ற செய்தியை ஞானிகள் உணர்த்துகின்றனர். இவ்வாறு இயேசுவின் அன்பையும், தாழ்ச்சியையும் வெளிப்படுத்தும் விழாவாக கிறிஸ்துமஸ் அமைந்துள்ளது. கடவுள் தமது ஒரே மகனை நமக்கு பரிசாக அளித்தப் பகிர்வின் மகிழ்ச்சியை அனைவருக்கும் வழங்குவதே கிறிஸ்துமஸ் விழாவின் நற்செய்தியாக இருக்கிறது.

நண்பர்கள், உறவினர்களோடு சேர்ந்து கிறிஸ்துமஸ் கொண்டாடுவதை விடவும், நமது பகைவர்களை மன்னித்து, ஏழைகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்து அவர்களோடு சிறப்பித்தால் இவ்விழா அர்த்தமுள்ளதாக அமையும். இறைமகன் இயேசுவில் வெளிப்பட்ட தாழ்ச்சியையும், அன்பையும் பிறருக்கு பகிர்வதன் வழியாக, நாம் சமத்துவ, சகோதரத்துவ சமூகத்தை உலகெங்கும் கட்டியெழுப்ப முடியும்.

-ஆக்னல் ஜோஸ், பணகுடி.

Next Story