மார்கழியில் தரிசனம் தரும் மரகத லிங்கம்


மார்கழியில் தரிசனம் தரும் மரகத லிங்கம்
x
தினத்தந்தி 26 Dec 2021 12:57 PM IST (Updated: 26 Dec 2021 12:57 PM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு மலையின் மீது அமைந்துள்ள அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில், பழமையும் புராணப் பெருமையும் கொண்ட திருத்தலம் ஆகும்.

இங்கு மூலவராக அர்த்தநாரீஸ்வரர் அருள்பாலிக்கிறார். அம்பாளின் திருநாமம் ‘பாகம்பிரியாள்’ என்பதாகும். பல அதிசயங்களையும், ஆச்சரியங்களையும் தன்னகத்தே கொண்டிருக்கும், இந்த திருக்கோவிலில், மார்கழி மாதத்தில் மட்டும் அபிஷேகம் செய்து வழிபடப்படும் மரகத லிங்கம் உள்ளது. இது பற்றிய தகவலை இங்கே பார்ப்போம்.

முன்பொரு சமயம், ஆதிசேஷனுக்கும், வாயுதேவனுக்கும் இடையே ‘யார் பலசாலி?’ என்ற வாதம் ஏற்பட்டது. அவர்களுக்குள் யுத்தம் நடைபெற்றால், உலகத்தில் பேரழிவு ஏற்படும் என்பதை உணர்ந்த முனிவர்கள், இதற்கு ஒரு யோசனையைக் கூறினர். ஆதிசேஷன் மேரு மலையை தன்னுடைய உடலால் சுற்றி வளைத்துப் பிடித்துக் கொள்ள, அவரது பிடியை வாயுதேவன் தன் சக்தியைக் கொண்டு தளர்த்த வேண்டும் என்பதே போட்டி. மலையை இறுகப் பற்றிக்கொண்ட ஆதிசேஷனின் பிடியை, வாயுதேவனால் தளர்த்த முடியவில்லை. இதனால் வாயுதேவன் தன்னுடைய மூச்சை அடக்கிக்கொண்டார். இதனால் உலகமே சுவாசிக்க முடியாமல் திணறிப்போனது. உலக உயிர்கள் அனைத்தும் துன்பத்தில் துவண்டன.

இதைக் கண்டு முனிவர்கள் அனைவரும், ஆதிசேஷனிடம் பிடியை கொஞ்சம் தளர்த்தும்படி வேண்டினர். அவரும் அப்படியே செய்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட வாயு தேவன், தன்னுடைய முழு சக்தியையும் பிரயோகித்து மலையை சிதறச் செய்தார். மூன்று பாகமாக சிதறிய மேரு மலையோடு, ஆதிசேஷனின் உடலும் மூன்றாக பிரிந்து விழுந்தது. அதில் ஒன்று திருவண்ணாமலை திருத்தலம், மற்றொன்று இலங்கை, இன்னொன்று நாகமலை எனப்படும் திருச்செங்கோடு திருத்தலம் என்று தல புராணம் சொல்கிறது.

பல சிறப்புகளும், அதிசயங்களும் நிறைந்த இந்த திருச்செங்கோடு மலையில், ஐந்து தலை களுடன் கூடிய ஆதிசேஷனின் உருவம் இருக்கிறது. இதில் மஞ்சளும், குங்குமமும் கலந்து பூசி பக்தர்கள் வழிபடுகிறார்கள். இதனால் நாக தோஷம் நீங்கும் என்பது அவர்களின் நம்பிக்கை. ஆதிசேஷன் படமெடுத்த நிலையில் லிங்கத்தை தாங்கியிருப்பது சிறப்புக்குரியது.

சிவபெருமானின் மீது அதீத பக்தி கொண்டவர் பிருங்கி முனிவர். இவர் கயிலாயமலையில் வீற்றிருக்கும் சிவபெருமானை தரிசனம் செய்ய அவ்வப்போது வருவதுண்டு. அப்போதெல்லாம் ஈசனை மட்டுமே வலம்வந்து வணங்கி விட்டு, அம்பாளை தரிசிக்காமல் சென்று விடுவார். 

இதனால் கோபம் கொண்ட அம்பாள், மற்றொரு முறை பிருங்கி முனிவர் கயிலாயம் வந்தபோது, ஈசனோடு நெருங்கி அமர்ந்து கொண்டார். இதன்காரணமாக பிருங்கி முனிவர் தன்னையும் வலம்வந்து வணங்கித்தான் ஆகவேண்டும் என்று பார்வதிதேவி நினைத்தார். ஆனால் வண்டு உருவம் எடுத்த பிருங்கி முனிவர், சிவபெருமானை மட்டும் சுற்றிவந்து வணங்கினார்.

கோபத்தின் உச்சிக்கே சென்ற பார்வதி, பிருங்கி முனிவர் தனது சக்தி முழுவதையும் இழக்கும்படி சபித்துவிட்டார். ஆனால் அவர் நிலைகுலையாமல் இருப்பதற்காக ஊன்றுகோல் ஒன்றை வழங்கினார் சிவபெருமான். மேலும் பிருங்கி முனிவருக்கு, சிவமும் சக்தியும் வேறல்ல. இவரும் ஒன்றுதான் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் அர்த்தநாரீஸ்வரராக காட்சி தந்து, சிவலிங்கமாக மாறினார். அந்த லிங்கத்தில் பார்வதியும் கலந்தார். திருச்செங்கோட்டில் வீற்றிருக்கும் அர்த்தநாரீஸ்வரையும், அந்த லிங்கத்தின் முன்பாக உள்ள மரகத லிங்கத்தையும் வழிபட நினைத்தார், பிருங்கி முனிவர்.

அவர் தினமும் அதிகாலையில் அங்கு வந்து மரகத லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தார். இதன் பயனாக அவர் மீண்டும் சக்தியைப் பெற்றார். பின்னர் தன்னுடைய சீடர்களுக்கு, இங்குள்ள மரகத லிங்கத்தின் சக்தியை எடுத்துரைத்த பிருங்கி முனிவர், மார்கழி மாதத்தில் மட்டும் மரகத லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபடுங்கள். 

பின் சூரியன் உதிக்கும் முன்பாக அதை பேழையில் வைத்துவிட வேண்டும். மற்ற மாதங்களில் சாதாரண லிங்கத்தை வைத்து வழிபடுங்கள் என்று கட்டளையிட்டார். அதன்படியே இன்றளவும் மார்கழி மாதத்தில் அதிகாலை நேரத்தில் மட்டுமே மரதக லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்யப்படுகிறது. மற்ற நேரங்களில் சாதாரண லிங்கத்தையே தரிசிக்க முடியும்.
1 More update

Next Story