பக்தர்களை காக்கும் பிரசன்ன வெங்கடேசர்


பக்தர்களை காக்கும் பிரசன்ன வெங்கடேசர்
x
தினத்தந்தி 27 Jan 2022 4:20 AM GMT (Updated: 27 Jan 2022 4:20 AM GMT)

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா பிரம்மபுரம் ஊராட்சியில் உள்ளது, சஞ்சீவிராயர் மலை. இங்கு மிகவும் பழமைவாய்ந்த பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவில் உள்ளது.

இங்குள்ள மூலவர் சுயம்புவாக இருப்பதால், இந்த ஆலயம் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. மலை மீது அமைந்த இந்த ஆலயத்தை அடைய, 520 படிக்கட்டுகளை கடந்து செல்ல வேண்டும். பழங்காலத்தில் உள்ள சுயம்பு மூர்த்தியுடன், நின்ற கோலத்தில் அருள்பாலிக்கும் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் சிலை, சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டுள்ளது.

ஆனந்த நிலையம் என்ற சிறிய கருவறையில் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அவர் எதிரே பெரிய திருவடியான கருட பகவான் வீற்றிருக்கிறார். கோவிலின் உள்ளே நுழைந்தவுடன் பழமையான கொடிமரமும், அதற்கு அருகில் ஆஞ்சநேயருக்கு தனிச் சன்னிதியும் உள்ளது.

கோவில் வரலாறு

இலங்கையில் சிறை வைக்கப்பட்ட சீதையை மீட்பதற்காக, இலங்கை அரசனான ராவணனுடன் யுத்தம் செய்தார், ராமபிரான். அனுமன் தலைமையிலான வானர சேனைகளும் ராமருடன் சேர்ந்து ராவணப் படைக்கு எதிராகப் போரிட்டனர். போரின் ஒரு கட்டத்தில் ராவணனின் மகன் இந்திரஜித் விட்ட நாகாஸ்திரத்தின் தாக்கத்தால், லட்சுமணன் மற்றும் வானர சேனைகள் பலரும் மூர்ச்சையடைந்தனர்.

இதையடுத்து சுகேசன் என்ற வைத்தியர் போர் முனைக்கு அழைத்து வரப்பட்டார். அவர், அனைவரது மயக்கமும் தெளிய வேண்டுமானால், இமயத்தில் இருக்கும் சஞ்சீவி மலையில் உள்ள மூலிகைகளை பறித்துவர வேண்டும் என்றார். அந்தப் பணியைச் செவ்வனே செய்வதற்கு, அனுமனை பணித்தார், ராமபிரான். தன் பிரபுவின் கட்டளை வந்தவுடனேயே இமயம் நோக்கி புயலென பறந்தார், அனுமன். அங்கு சென்றதும், மூலிகைகள் எவை எவை என்று அறிந்து பறிப்பதற்கு நேரமில்லாததால், சஞ்சீவி மலையையே பெயர்த்து எடுத்து வந்தார். அப்படி அனுமன் வரும் வழியில் சில இடங்களில் சஞ்சீவி மலையில் இருந்து சிறு சிறு துண்டுகள் கீழே விழுந்து குன்றுகளாக மாறின. அவை அனைத்துமே புகழ்பெற்ற திருத்தலங்களாகவும் விளங்குகின்றன. அப்படி சஞ்சீவி மலையில் இருந்து விழுந்த சிறு பகுதியே, பிரம்மபுரத்தில் உள்ள சஞ்சீவிராயர் மலையாகும்.

இந்த மலையின் அடிவாரமான பிரம்மபுரத்தில், ஆயர் குலத்தைச் சேர்ந்த சனந்தன் என்ற சிறுவனின் குடும்பமும் வசித்து வந்தது. சனந்தன் தினமும், பசுக்களை ஓட்டிக்கொண்டு சஞ்சீவிராயர் மலைக்குச் செல்வான். அங்கு பசுக்களை மேயவிட்டு, பாதுகாப்பாக மாலையில் வீடு வந்து சேர்வான்.

ஒரு நாள் முதல் தார பிள்ளையான சனந்தனை தனியாக விட்டு விட்டு, அவரது தந்தையும், சித்தியும் திருமலைக்கு வெங்கடேசப் பெருமாளை தரிசிக்கச் சென்றனர். யாத்திரை முடிந்து திரும்பியதும், வெங்கடேசப் பெருமாளின் பெருமைகளை தனது மகனிடம் கூறினார், சனந்தனின் தந்தை. இதையடுத்து வெங்கடேசப் பெருமாளின் மீது சந்தனுக்கு மானசீக ஈர்ப்பு ஏற்பட்டது. அவரை தினமும் மனதால் நினைத்து வழிபட்டு வந்தான்.

ஏழுமலையானும் தன்னைப்போலவே சிறுவனாக இருப்பான். அவனுக்கும் பசி எடுக்கும் என்று எண்ணம் கொண்ட சனந்தன், சஞ்சீவிராயர் மலையில் மாடுகளை மேய்க்கும் போது, பாலும், அன்னமும் எடுத்து தனியாக வைத்திருப்பான். எப்போதாவது வெங்கடேசப் பெருமாள் வந்தால், அவரது பசியை ஆற்ற இது உதவும் என்று அவன் நினைத்தான்.

மலையில் தவம் செய்து வந்த முனிவர் ஒருவர், சிறுவனின் இந்த தினசரி நடவடிக்கையை கண்டு ஆச்சரியம் கொண்டார். அந்தச் சிறுவனிடம், “குழந்தாய்.. இங்கே தினமும் பால், அன்னத்துடன் யாருக்காக காத்திருக்கிறாய்” என்று கேட்டார்.

அதற்கு சனந்தன், “ஐயா.. நான் திருமலை வெங்கடேசப் பெருமாளை காண்பதற்காக காத்திருக்கிறேன். அவர் திருமலையில் ஒரு புற்றுக்குள் மறைந்து இருந்து பாலை பருகினாராம். அவர் இவ்வழியாக பசியுடன் வந்தால் அவரின் பசியாற்றுவதற்காக இவற்றை வைத்திருக்கிறேன்” என்றான்.

அறியாமை என்றாலும், சிறுவனின் பக்தி முனிவரை மலைக்க வைத்தது. அவர், “குழந்தாய் இப்பிறவியில் அவதரித்த மற்றொரு பிரகலாதன் நீ. நிச்சயம் வெங்கடேசப் பெருமாள் உனக்கு தரிசனம் தருவார். ஆனால் அதற்கு உன்னை உருக்கி தவம் செய்ய வேண்டும்” என ஆசி கூறிச் சென்றார்.

அவரது வார்த்தையை கேட்ட சனந்தன் அன்று முதல், நீர் ஆகாரம் கூட எடுத்துக் கொள்ளாமல் திருமலை வெங்கடேசப் பெருமாளை நினைத்து தவம் இருக்கத் தொடங்கினான். 6 நாட்கள் இவ்வாறு கழிந்தது. ஏழாம் நாளில், சனந்தனின் பசியற்ற தவநிலை அவனை மயக்கத்தில் ஆழ்த்தியது. அவன் பாறை மீது மோதி ரத்தவெள்ளத்தில் தரையில் வீழ்ந்தான்.

சிறு பிள்ளையான சனந்தனின் பக்தியால் மகிழ்ந்த திருமலை வெங்கடேசப் பெருமாள், திருப்பதி திருமலை ஆனந்த நிலையத்தில் இருந்து, சஞ்சீவிராயர் மலைக்கு வந்தார். சனந்தனின் முன்பாக ஆயிரம் கோடி சூரிய பிரகாசத்துடன் காட்சியளித்தார். அந்த பிரகாசமான ஜோதியைக் கண்டு, சனந்தன் மீண்டும் மயங்கினான். இதையடுத்து வெங்கடேசப் பெருமாள், தன்னை ஒரு மானிடச் சிறுவனாக மாற்றிக்கொண்டு, மயக்கத்தில் இருந்த சனந்தனை எழுப்பினார். “சனந்தா.. நான்தான் சீனிவாசன் வந்திருக்கிறேன். பசிக்கிறது பால் கொடு” என்று கேட்டார்.

அதைக் கேட்டதும் கண்விழித்த சனந்தன் பரவச நிலையை அடைந்தான். உடனே தன்னிடம் இருந்த பாலையும், அன்னத்தையும் வெங்கடேசப் பெருமாளிடம் கொடுத்தான். அதை வெங்கடேசப் பெருமாள் மனித ரூபமாகவே உண்டு மகிழ்ந்தார். சிறிதுநேரம் சனந்தனுடன் விளையாடினார். அந்தி சாயும் நேரம் வந்ததும், “சனந்தா.. நான் புறப்படும் நேரம் வந்துவிட்டது. உன்னுடன் விளையாடிய நான் சிறியவனின் உருவத்திலேயே, இங்கே வீற்றிருந்து பக்தர்களை காப்பேன். இந்த தலம், திருமலையைப் போன்று புகழ்பெறும்” என்று கூறி மறைந்தார்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஆலய பிரசன்ன வெங்கடேசப் பெருமாளை, வேலூர் மாவட்ட மக்கள் மட்டுமின்றி, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.

இந்த ஆலயம் வேலூர் காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

Next Story