பாலகனாக அருளும் ராஜகோபாலர்

திருவாரூரில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, மன்னார்குடி திருத்தலம். இங்குள்ள ராஜகோபாலசுவாமி ஆலயத்தைப் பற்றி பார்க்கலாம்.
செங்கமலத் தாயார் தனிச் சன்னிதியில் காட்சி தருகிறார். இவரது அவதார நட்சத்திரமானபூச நட்சத்திரம் அன்று, விசேஷ அபிஷேகம் நடைபெறும். இவரது சன்னிதிக்கு எதிரில் பெண் வடிவ கருடாழ்வார் இருக்கிறார்.
கோவிலின் அருகே கிருஷ்ணரின் தரிசனம் வேண்டி, முனிவர்கள் இருவர் தவம் செய்த குளம் உள்ளது. இது யமுனை நதியாகவே கருதப்படுவதால் ‘ஹரித்ரா நதி’ என்று அழைக்கப்படுகிறது.
இக்கோவிலில் 16 கோபுரங்கள், 18 விமானங்கள், 7 பிரகாரங்கள், 7 மண்டபங்கள், 9 தீர்த்தங்கள் உள்ளன.
இத்தல ராஜகோபுரம் 11 நிலைகளைக் கொண்டது. இதில் கீழிருந்து முதல் ஆறு நிலைகளில் சுதை சிற்பங்கள் எதுவும் இல்லை.
மூலவர்: வாசுதேவப் பெருமாள்
உற்சவர்: ராஜகோபாலர்
தாயார்: செங்கமலத் தாயார்
தல விருட்சம்: செண்பக மரம்
இத்தல இறைவன், இடையன் கோலத்தில் பாலகனாக காட்சி தருகிறார். வேஷ்டி அணிந்து அதையே தலைப்பாகையாகவும் சூடியிருக்கிறார்.
வெண்ணெய்
பங்குனியில் 18 நாட்கள் பிரமோற்சவம் நடைபெறும். அதன் 16-ம் நாளில் நடக்கும் ‘வெண்ணெய் தாழி’ உற்சவம் சிறப்புக்குரியது. அப்போது இறைவனுக்கு வெண்ணெய் பிரதான நைவேத்தியமாக படைக்கப்படும். அதோடு சுவாமி, தவழ்ந்த கோலத்தில் கையில் வெண்ணெய் பானையுடன் வீதி உலா வருவார். அப்போது வீதி நெடுகிலும் கூடியிருக்கும் பக்தர்கள், சுவாமி மீது வெண்ணெய் வீசி வணங்குவார்கள்.
தோசை
மதுரை அடுத்த அழகர்மலையில் உள்ள கள்ளழகர் கோவிலைப்போல, இந்த ஆலயத்தில் உள்ள இறைவனுக்கும் மாலையில் மட்டும் தோசை நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.
நெய்
திருமண பாக்கியம், புத்திர பாக்கியம் வேண்டும் பெண்கள், இங்குள்ள பெண் கருடாழ்வாருக்கு நெய் தீபம், எலுமிச்சைப் பழ தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.
நம்பிக்கை
இத்தல இறைவனை தரிசித்தால், குடும்பத்தில் ஐஸ்வரியம் உண்டாகும். கால்நடைகள் நோய் நொடியின்றி திடகாத்திரமாக வளரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தை மாதம் 4-ம் நாள் மட்டும், தாயாருடன் இணைந்து ‘ஏக சிம்மாசன’த்தில் சுவாமி காட்சி தருவார்.
Related Tags :
Next Story






