மன்னனுக்கு அருளிய மகேஸ்வரன்


மன்னனுக்கு அருளிய மகேஸ்வரன்
x
தினத்தந்தி 1 March 2022 11:05 AM IST (Updated: 1 March 2022 11:05 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது, கோவிலூர் என்ற ஊர். இங்கு அமைந்துள்ள கொற்றவாளீஸ்வரர் திருக்கோவிலைப் பற்றி பார்ப்போம்.

இந்த ஆலயத்தை காளையார்கோவில் பகுதியை ஆட்சி செய்து வந்த வீரபாண்டியன் என்ற மன்னன் கட்டமைத்துள்ளான்.

இத்தல இறைவன் வன்னி மரத்தின் அடியில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

காளீசர் அருளால் வீரபாண்டியன் பெற்றிருந்த கொற்றவாளை, இத்தல இறைவன் மறைத்து விளையாடியதால், அவருக்கு ‘கொற்றவாளீஸ்வரர்’ என்று பெயர் வந்தது.

மன்னனுக்கு மீண்டும் கொற்றவாளை வழங்கிய ஈசன் என்பதால், இவருக்கு ‘ராஜகட்க பரமேஸ்வரர்’ என்ற பெயரும் உண்டு.

மதுப்பிரியன் என்ற முனிவரின் தவத்திற்கு அருள்பாலித்த காரணத்தால், இத்தல இறைவன் ‘திரிபுவனேஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார்.

இக்கோவிலில் வீணை சரஸ்வதி, ஊர்த்துவ தாண்டவ நடராஜர், மீனாட்சி திருக்கல்யாண திருவுருவம், சர்வ அலங்கார சாரதாம்பிகை, ரிஷப வாகனத்தில் சிவ-பார்வதி, மயில் மீது சண்முகர் ஆகியோரது சிற்பங்கள் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளன.

இங்கு பிரதோஷம், பவுர்ணமி மற்றும் சிவராத்திரி தினங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

இந்த ஆலயத்தை புதுப்பித்து திருப்பணி செய்தவர், கோவிலூரில் வேதாந்த மடத்தை நிறுவியவரான முத்துராமலிங்க தேசிகர் ஆவார்.

கோவில் முன்புறம் உள்ள சதுர வடிவ தெப்பம் கண்களுக்கு குளிர்ச்சியூட்டுகிறது. இதன் நடுவில் 16 தூண்களுடன் கூடிய நீராழி மண்டபம் இருக்கிறது. தெப்பக்குளத்தைச் சுற்றி நடந்தால் சுமார் 1 கிலோமீட்டர் தூரம் உள்ளது.

சிவகங்கையில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலும், திருப்பத்தூரில் இருந்து 20 கிலோமீட்டர் தூரத்திலும், பிள்ளையார்பட்டியில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது, கோவிலூர்.

மூலவர்: கொற்றவாளீஸ்வரர்

அம்மன்: நெல்லை அம்பாள்

தீர்த்தம்: மது புஷ்கர்ணி
1 More update

Next Story