சுவனத் தேடலில் நம் பாதை

எல்லோருக்கும் சுவனம் செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும். சொல்லப்போனால் நல்ல மனிதனுக்கு இந்த ஆசை இருப்பது போன்றே கெட்டவனுக்கும் இந்த ஆசை இருக்கும். ஆனால் இருவருடைய நடத்தையும் ஒரேபோன்று இருக்கிறதா என்றால், இல்லை என்பதுதான் சோகம்.
இறைத்தூதர் (ஸல்) கூறினார்கள்: “சுவனம் வெறுப்புக்குரிய செயல்களாலும், நரகம் மனோ இச்சைகளாலும் சூழப்பட்டுள்ளது”.
மனோ இச்சைகளால் சூழப்பட்ட நரகில் வீழும் மக்கள் அதிகமாகவும், நற்செயல்கள் செய்வதற்கான சிரமத்தின் காரணத்தால், சுவனம் செல்லும் மக்கள் குறைவாகவும் இருப்பார்கள்.
எதுவுமே இங்கு இலகுவாகக் கிடைத்துவிடாது, சிரமப்பட்டால் தான் சிகரத்தை அடைய முடியும். சுவனமும் அப்படித்தான். சுவனம் செல்ல கவனம் தேவை. வாழ்வின் ஒவ்வொரு அடியையும் கவனத்துடன் எடுத்து வைக்கும்போது சுவனப் பாதை எளிதாக அமையலாம்.
சுவனம் செல்ல பணம் தேவைப்படுவதில்லை. நற்செயல்கள் மட்டுமே போதும். ஆனால் நரகம் செல்ல? பணம் செலவு செய்யவேண்டும். ஆம்.. எல்லாவித தீமைகளையும் பணம் கொடுத்துதானே அனுபவிக்கின்றார்கள்.
சுவனம் நுழைய இறைவனும் பணம் கேட்பதில்லை. இறை நம்பிக்கையுடனும் உளத்தூய்மையுடன் செயல்பட்டாலே போதும். சுவனத்தை சொந்தமாக்கலாம். இது இறைவாக்கு.
இறைவன் கூறுகின்றான்: “மேலும் எவர்கள் நற்பேறுடையவர்களோ அவர்கள் சுவனம் செல்வார்கள். வானங்களும் பூமியும் இருக்கும் காலமெல்லாம் அங்கே அவர்கள் நிலையாகத் தங்கி வாழ்வார்கள்; ஆனால் (அந்நிலையை மாற்ற) உம் இறைவன் நாடினாலே தவிர! முடிவுறாத அருட்கொடைகள் (அங்கு) அவர்களுக்குக் கிடைத்துக் கொண்டே இருக்கும்”. (திருக்குர்ஆன் 11:108)
உலக வாழ்வு ஒரு தேர்வுக் களம். இந்தத் தேர்வுக்கு நாம் எவ்வாறு தயாராகின்றோம் என்பதைப் பொறுத்துதான் சுவனமும் சொந்தமாகும். ஆகவே இருக்கும் காலத்தை இறைவனுக்குப் பிடிக்கும் வகையில் ஆக்கிக் கொண்டோம் என்றால் அதுவே நம்மை சுவனத்திற்கு சொந்தக்காரராக ஆக்கிவிடும்.
ஒவ்வொரு மனிதனுக்கும் சுவனம் செல்ல ஆசை இருக்கும், ஆனால் சுவனமே சில மனிதர்களின் வருகையை விரும்பியுள்ளது என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அவர்கள் யார் தெரியுமா?
அலி (ரலி), அம்மார் இப்னு யாஸிர் (ரலி) ஸல்மானுல் பார்ஸி (ரலி) இந்த மூவரின் வருகையை சுவனம் விரும்பியுள்ளது. எனில் இவர்களின் இறை நம்பிக்கையும், இறையச்சமும், வாழ்க்கை முறையும் எவ்வாறு இருந்திருக்கும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அதேபோன்று உலகில் வாழும் காலத்திலேயே சுவனம் குறித்து சுபச் செய்தி சொல்லப்பட்டவர்கள் என்று பத்து நபித்தோழர்கள் குறித்து நபிகளார் குறிப்பிட்டுள்ளார்கள். எனில், இவர்களின் வாழ்க்கை முறையும், வாலிபமும் எவ்வாறு இருந்திருக்கும்? இஸ்லாத்தின் வளர்ச்சிக்கும் இவர்கள் ஆற்றிய பங்கும் எவ்வாறு இருந்திருக்கும் என்பதையும் யோசிக்கவேண்டிய கட்டாயம் நமக்கு உள்ளது. வாழும் போதே சுவனத்திற்கு உரியவர் என்ற சுபச் செய்தி கிடைத்துவிட்டால் அதைவிட வேறென்ன சிறந்தது தேவைப்படும்.
ஆயினும், பலர் மறுமை வாழ்வு குறித்தும் மறுமை விசாரணை குறித்தும், அலட்சியத்துடன் இருக்கின்றனர். திருக்குர்ஆன் இப்படிக் கூறுகிறது: “நெருங்கி வந்திருக்கிறது; மக்களுக்கு அவர்களின் விசாரணைக்கான நேரம்! எனினும், அவர்களோ கவனமற்ற நிலையில் புறக்கணித்துக் கொண்டிருக்கின்றார்கள்”. (திருக்குர்ஆன் 21:1)
உலக வாழ்வை விளைநிலமாக பயன்படுத்தி நல்லவைகளை விதைத்து, மறுமையில் அவற்றை அறுவடை செய்வதன் மூலம் நாம் சொர்க்கத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
அப்ராஸ் அமீன், திருச்சி.
Related Tags :
Next Story






