பதினான்கு வருடம் ஆட்சி செய்த பாதுகை


பதினான்கு வருடம் ஆட்சி செய்த பாதுகை
x
தினத்தந்தி 3 May 2022 4:11 PM GMT (Updated: 3 May 2022 4:11 PM GMT)

பரம்பொருளின் மீது வைத்திருந்த அதீத பக்தியின் காரணமாக, ஒரு தொழிலாளி உருவாக்கிய அந்த பாதுகை, 14 ஆண்டுகள் அயோத்தியின் அரியாசனத்தில் வீற்றிருந்து அரசு புரிந்தது.

அயோத்தியில் செருப்பு தைக்கும் தொழில் செய்து வந்தார், ஆத்மபந்து. அவருக்கு ராமபிரானின் மீது அளவுகடந்த அன்பும், பக்தியும் இருந்தது. ராமபிரான் வனவாசம் செல்வதற்கான எந்த முகாந்திரம் காணப்படாத காலகட்டம் அது. தசரதர் தன்னுடைய மூத்த மகனான ராமருக்கு பட்டாபிஷேகம் செய்து வைக்க ஏற்பாடு செய்திருந்தார். அதற்கான ஏற்பாடுகள் வெகு விமரிசையாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. பல நாடுகளில் இருந்தும் பலரும் வருகை தந்து, ராமனுக்கு அன்பு பரிசளித்தனர். இன்னும் பரிசளிக்க பலர் காத்திருந்தனர்.

ஆத்மபந்துவுக்கு, தானும் ராமபிரானுக்கு ஏதாவது பரிசளிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆனால் ஏழையான தன்னால் என்ன பரிசளிக்க முடியும் என்று நினைத்தவர், திடீரென்று ஒரு முடிவுக்கு வந்து ஒரு ஜோடி செருப்பை தயார் செய்து கொண்டு, அரண்மனையின் வாசலில் போய் கூட்டத்தோடு கூட்டமாக நின்றார். அந்த நேரம் பார்த்து முனிவர்களின் கூட்டம் ஒன்று, ராமபிரானைப் பார்ப்பதற்காக அரண்மனைக்குள் நுழைந்தது. அதில் ஒரு முனிவரின் பார்வை, ஆத்மபந்துவின் மீது விழுந்தது.

முனிவருக்கு, ஆத்மபந்துவின் முகத்தில் இருந்த தவிப்பும், ஏதோ ஒரு காரியத்தை செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணமும் புரிந்துபோனது. அவர் ஆத்மபந்துவிடம் சென்று, “என்னப்பா.. ஏதோ சொல்ல விரும்புகிறாய் போல் தெரிகிறதே?” என்று கேட்டார்.

“மகா முனியே.. நான் ஒரு ராம பக்தன். அவருக்காக ஒரு ஜோடி பாதுகையை செய்து கொண்டு வந்திருக்கிறேன். அதை அவருக்கு பரிசளிக்க வேண்டும் என்ற ஆசை என்னை உந்தித் தள்ளுகிறது. ஆனால் எப்படி உள்ளே போவது, அனுமதி கிடைக்குமா? என்ற அச்சத்தில் நின்று கொண்டிருக்கிறேன்” என்றார்.

அதைக்கேட்ட முனிவர், “ராமன் எல்லோருக்கும் சொந்தமானவர். நீ என்னோடு வா.. உனக்கான வாய்ப்பை நான் பெற்றுத் தருகிறேன்” என்று, ஆத்மபந்துவை அழைத்துக் கொண்டு அரண்மனைக்குள் சென்றார்.

அங்கு லட்சுமணன், முனிவர்கள் அனைவரையும் வரவேற்றார். அப்போது ஆத்மபந்துவை அழைத்துச் சென்ற முனிவர், “இவர் ராமபிரானுக்கு ஏதோ ஒரு பரிசளிக்க வேண்டும் என்று வந்துள்ளார்” என்று கூறி ஆத்மபந்துவை, லட்சுமணன் முன்பாக நிறுத்தினார்.

லட்சுமணன், உடனடியாக ராமர் இருக்கும் அறை நோக்கிச் சென்றார். சிறிது நேரத்தில் உள்ளே இருந்து வெளிப்பட்ட காவலாளி, “இங்கே ஆத்மபந்து என்பவர் யார்? யுவராஜா அவரை அழைக்கிறார்” என்றார்.

ஆத்மபந்துவுக்கு கையும் காலும் ஓடவில்லை. பறப்பதுபோன்ற நிலையிலேயே, ராமன் இருக்கும் அறைக்குள் நுழைந்தார்.

ஆத்மபந்துவைப் பார்த்ததும் புன்னகைத்த ராமன், “எனக்காக என்ன பரிசு கொண்டுவந்திருக்கிறாய்?” என்றார்.

ஆத்மபந்து தான் வைத்திருந்த பைக்குள் இருந்து, ஒரு புத்தம் புது ஜோடி பாதுகையை எடுத்து, ராமனின் காலடியில் வைத்தார்.

அதைப் பார்த்ததும், “என்னுடைய கால் அளவுக்கு இது சரியாக இருக்குமா?” என்றார், ராமபிரான்.

“சரியாக இருக்கும் பரம்பொருளே.. ஏனெனில் இரண்டு மூன்று நாட்களாக நீங்கள் சரயு நதியில் குளித்து விட்டு வெளியேறியதும், அங்கே பதிந்திருந்த உங்களின் கால் தடத்தை அளந்து எடுத்து, அதை சரி பார்த்து இதை யதார் செய்திருக்கிறேன்” என்று பதிலளித்தார், ஆத்மபந்து.

ஆச்சரியத்தோடு ஆத்மபந்துவைப் பார்த்த ராமன், அதை காலில் அணிந்தார். ஒரு நபரை நேரிடையாக நிறுத்தி அளவெடுத்து தயார் செய்தால் கூட, இவ்வளவு துல்லியமாக பொருந்திப் போகும் ஒரு பாதுகையை தயார் செய்ய முடியுமா? என்பது சந்தேகமே. அந்த அளவுக்கு துல்லியமாக ராமரின் கால்களோடு பொருந்திப்போய் இருந்தது, அந்த பாதுகை.

ஆத்ம திருப்தியோடு, அந்த செருப்பு தைக்கும் தொழிலாளி, அரண்மனையை விட்டு வெளியேறினார். ஆனால் அடுத்த தினங்களிலேயே, ராமரின் பட்டாபிஷேகம் நின்று, அவர் வனவாசம் செல்ல நேர்ந்தது. அப்படி அவர் வனத்திற்கு புறப்பட்டபோது, ஆத்மபந்து அளித்த பாதுகையை மட்டுமே அணிந்து சென்றார்.

விஷயம் அறிந்து வனத்தில் ராமரை சந்தித்த பரதன், எனக்கு ஆட்சி செய்ய விருப்பம் இல்லை என்றும், நீங்கள் நிர்ப்பந்திப்பதால் ஆட்சி செய்வதாகவும், ஆனால் அரியாசனத்தில் அமரமாட்டேன், அதற்கு பதிலாக உங்களுடைய பாதுகையை வைத்து ஆட்சி செய்வேன் என்று கூறி, ராமன் அணிந்திருந்த பாதுகையை வாங்கிச் சென்றான்.

பரம்பொருளின் மீது வைத்திருந்த அதீத பக்தியின் காரணமாக, ஒரு தொழிலாளி உருவாக்கிய அந்த பாதுகை, 14 ஆண்டுகள் அயோத்தியின் அரியாசனத்தில் வீற்றிருந்து அரசு புரிந்தது.


Next Story